Sunday 2 December 2012

உலகத் தமிழர்களை ஏக்கங் கொள்ளவைத்த ஐ.நாவில் பலஸ்தீனத்திற்கான அங்கீகாரம்


 ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பலஸ்த்தீனம் பார்வையாளர் என்ற அங்கீரத்தினை பெற்றிருப்பதானது பலஸ்தீன உரிமைப் போராட்டத்திற்கு கிடைத்திருக்கின்ற முக்கியதொரு உலக அங்கீகாரம் தமிழீழ போராட்டத்திற்கு எப்போது ஓர் உலக அங்கீகாரம் கிடைக்கும் என்ற ஏக்கம் உலகத் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


இந்த ஏக்கத்தினை தாகமாக கொண்டு ஓர் அரசுக்குரிய இனம் ஈழத் தமிழினம் என்ற நிலைபாட்டினை சர்வதேசத்திற்கு வலியுறுத்தும் பொருட்டு பிரித்தானிய மண்ணில் கூடியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வினை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

சரியாக 65 ஆண்டுகளுக்கு முன்னர், 29-11- 1947 இல் பலஸ்தீன மண்ணை கூறுபோட்டு இரு நாடுகளாகப் பிரித்து ஐநா தீர்மானம் நிறைவேற்றி யூதர்களுக்கான ஓர் தேசமாக இஸ்ரேலை ஒரு தனி நாடாக்கியிருந்தது.
இந்நிலையில் தற்போது ஐ.நா பொதுச்சபையில், 138 நாடுகளின் ஆதரவுடன் வாக்களிக்கும் உரிமையினை இந்த அங்கீகாரம் வழங்காவிட்டாலும் ஒர் அரசுக்குரிய அங்கீகாரத்துடன் பார்வையாளர் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமையானது முழு அங்கீரத்திற்கான ஓர் திறவுகோலாக அமைந்துள்ளது.

நிலையானதொரு சர்வதேச அங்கீகாரமே ஒவ்வொரு இனவிடுதலைப் போராடத்திற்கும் உள்ள நிலையில் தமிழீழத் தாயக நிலப்பரப்பில் தமிழர் தரப்பினால் நிறுவப்பட்டிருந்த நிகழ்வுபூர்வமான நடைமுறைத் தமிழீழ அரசிற்கா ஓர் சர்வதேச அங்கீகாரத்தினை ஈழத் தமிழினம் மட்டுமல்ல உலகத் தமிழினமே அன்று உலக சமூகத்திடம் கோரியிருந்தது.

ஆனால் சர்வதேச நலன்சார் அரசியலை தன்னுடைய நிகழ்ச்சி நிரலுக்குள் பொருத்திக் கொண்ட சிங்கள அரசு தமிழர்கள் அமைத்துக் கொண்ட நிகழ்வுபூர்வமான அரசினை பெரும் இனவழிப்பின் ஊடாக 2009 ஆண்டில் அழித்துக் கொண்டது.

இலங்கைதீவில் சிறிலங்கா – தமிழீழம் என்ற நிலைப்பாட்டினை புறந்தள்ளி இலங்கைத்தீவு முழுவதுமே சிங்கள அரசின் ஆளுகைக்குள் அது ஆட்கொண்டுள்ளது.

நோர்வேயினை நடுநிலையாளர்களாக கொண்டு சிறிலங்கா அரசுக்கும் – தமிழர் தரப்புக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டிருந்த சமாதான உடன்படிக்கையானது நிறுவப்பட்டிருந்த நடைமுறை தமிழீழ அரசுக்கு கிடைத்த அரைநிலை சர்வதேச அங்கீகாரமாகவே இருந்தது.
இந்த அரைநிலை அங்கீகாரம் நாளை முழு அங்கீகாரமாக மாறும் போது இலங்கைத் தீவு முழுவதுமே சிங்களத்திற்கென்ற நிலைப்பாடு தகர்த்தெறியப்பட்டு விடும் என்ற அச்சத்திலேயே பெரும் இனவழிப்பு போரொன்றினை சிங்கள அரசு முன்னெடுத்திருந்நது.

தமிழீழத் தாயகப் பரப்பில் நிறுவப்பட்டிருந்த தமிழீழ அரசினை அழிப்பதன் ஊடாக இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான அரசியல் வெளியினை இல்லாதொழிப்பதோடு அவர்களின் தமிழீழ அரசெனும் சுதந்தித தாகத்தினை புதைத்து விடலாம் என சிங்கள பேரினவாதம் எண்ணியிருந்தது.
முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ தனியரசென்ற உலகத் தமிழர்களின் பெருவிருப்பினை புதைத்து விட்டதாக சிங்களம் எண்ணியிருந்த வேளையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோற்றம் பெற்றது.

இது சிங்கள அரசின் தலையில் பெருமடியாக வந்து விழுந்தது.
இந்நிலையில்தான் இன்று சர்வதேசம் போதிக்கின்ற சனநாயகம் என்ற அதன் போக்கிலேயே சனநாயகபூர்வமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை தமிழர் தரப்பு நிறுவியுள்ளது.

சர்வதேசத்திடம் பயங்கரவாத பூச்சாண்டி காட்டி தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை கொச்சைப்படுத்தி அதற்கான பல சர்வேதேச தடைகளை சிங்களம் நிறைவேற்றியிருந்தது.

ஆனால் இன்று சனநாயகபூர்வமாக நிறுவப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது சர்வதேச தடைகளை கொண்டுவருவதற்கு சிங்கள அரசு வழியின்றி தவித்து நிற்பதோடு தென்னாசிய வட்டகையினை வட்டமிட்டு வரும் நலன்சார் சர்வதேச அரசியல், பொருளாதார, வர்த்தக நிலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான ஒர் அங்கீகாரத்தினை வழங்கி விடுமோ என்ற அச்சமே சிங்கள ஆட்சியாளர்களை ஆட்டிப்படைக்கின்றது.

இத்தகைய விடயங்களோடு சர்வதேசத்தின் அங்கீகாரம் என்பது முக்கியமானதொரு விடயமாகவுள்ள நிலையில் தற்போது ஐ.நா பொதுச்சபையில் பலஸ்தீனத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரமானது
நிச்சயமாக நாளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு கிடைக்கும் என்பது உறுதி.

இந்த அங்கீகாரமே தமிழீழத் தாயகத்தில் நிலையான தமிழீழத் தனியரசினை அமைத்துக் கொள்வதற்கான ஒர் திறவுகோலாக அமையும் என்பது உறுதி.

No comments:

Post a Comment