Sunday 9 December 2012

மீண்டும் தலையெடுத்திருக்கும் பயங்கரவாத தடைச்சட்டமும் அதற்கு ஆதரவளித்த தமிழர்களும்!


 போரில் இறந்து போன தங்கள் உறவுகளுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ததற்காக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இராணுவத்தினராலும் பொலிஸாரும் தாக்கப்பட்டது மட்டுமன்றி இதுவரை 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் உட்பட இதுவரை 35க்கும் மேற்பட்டவர்கள் இந்த வாரத்தில் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மாணவர்கள் ஊர்வலம் நடத்துவதும் பொலிஸார் அவர்களை கைது செய்வதும் விசாரணை நடத்துவதும் நாம் கேள்விப்படுகின்ற விடயங்கள்தான்.


ஆனால் பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை என்ற பெயரில் தடுத்து வைத்திருப்பது தென்னிலங்கையில் நடந்திருக்காத ஒரு விடயம். ஆனால் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கையின் சாதாரண சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. அவர்கள் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பயங்கரவாத தடுப்புச்சட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆரம்ப காலப்பகுதியில் சர்வதேச சட்டநிபுணர் ஆணைக்குழு இந்த சட்டம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஜனநாயக நாடு என சொல்லிக்கொள்ளும் இலங்கையின் சட்டப்புத்தகத்தில் இருக்கும் அசிங்கமான கறை என இதனை வர்ணித்திருந்தது.

No legislation conferring even remotely comparable powers is in force in any other free democracy operating under the Rule of Law… such provision is an ugly blot on the statute book of any civilized country”   -International Commission of Jurists (1984)

பயங்கரவாத தடுப்புச்சட்டம் என்ற இந்த அசிங்கமான கறைக்கு நீண்டவரலாறு இருக்கிறது. பயங்கரவாத தடுப்புச்சட்டம் என்பது முழுக்க முழுக்க இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலக்கு வைத்து அவர்களை அடக்கி கொடுமைப்படுத்தவதற்கு என உருவாக்கப்பட்டதாகும்.

1979ஆம் ஆண்டு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது தொடக்கம் கடந்த 33ஆண்டுகளில் இந்த சட்டத்தால் அப்பாவி தமிழ் மக்கள் அனுபவித்த கொடுமைகளும், இழப்புக்களும் கொஞ்சம் அல்ல. கைதுகள், சித்திரவதைகள், கொலைகள், அடக்குமுறைகள், காலவரையறையற்ற சிறைவாசம், என அத்தனை கொடுமைகளும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தான் நடந்தேறின. தமிழர்கள் மீது கட்டுக்கடங்காத வன்முறையை கட்டவிழ்ந்து விட்ட அரச பயங்கரவாதத்திற்கு பாதுகாப்பு வழங்கிய சட்டமே பயங்கரவாத தடுப்பு சட்டமாகும்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலக்கு வைத்தே நடைமுறைப்படுத்தப்பட்ட இப்பயங்கரவாத தடைச்சட்டத்தால் பாதிக்கப்படாத தமிழர்கள் மிகச்சிலரே ஆகும்.

சர்வதேச மட்டத்தில் மனித உரிமை அமைப்புக்களாலும், சர்வதேச சட்ட நிபுணர் ஆணைக்குழுவாலும் கண்டனத்திற்குள்ளான இந்த பயங்கரவாத தடுப்புச்சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னணி, தமிழர்களை அடக்கி ஒடுக்கி கொடுமை படுத்துவதற்கு என்றே கொண்டுவரப்பட்ட இச்சட்டத்திற்கு யார் யார் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஆதரவளித்து இதனை நிறைவேற்றினார்கள் என்பது இப்போது உள்ள பலருக்கு தெரியாத விடயமாக இருக்கலாம். தெரிந்தால் பலரின் முகமூடிகள் கிழிக்கப்படலாம்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்காலத்தில் 1979ஆம் ஆண்டு யூலை 20ஆம் திகதி இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போது நீதியமைச்சராக இருந்த தமிழர் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் கல்குடா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.டபிள்யூ.தேவநாயகம் பாராளுமன்றத்தில் இச்சட்டத்தை சமர்ப்பித்திருந்தார். அப்போது பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் அனைவரும் கைகளை நீள உயர்த்தி தமது ஆதரவை தெரிவித்துக்கொண்டனர்.

தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்காக, அடக்குவதற்காக, தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை முற்றாக நசுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் உட்பட அத்தனை தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பாக 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலை பிரகடனப்படுத்தி அதில் போட்டியிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றிபெற்றது. வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் வழங்கிய வெற்றி என்பது சாதாரண வெற்றி அல்ல. இலங்கையின் நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக தமிழ் கட்சி ஒன்று அமரும் அளவிற்கு மக்கள் அந்த வெற்றியை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்கியிருந்தார்கள்.

அந்த வெற்றியோடு அமிர்தலிங்கம் தலைமையில் சென்ற தமிழர் விடுதலைக்கூட்டணி செய்த காரியம் தமிழ் மக்களை ஒடுக்குவதெற்கென, அழித்தொழிப்பதற்கென கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு ஆதரித்து வாக்களித்து அதை நிறைவேற்றியதுதான்.

இப்போது உயிருடன் இருக்கும் இரா.சம்பந்தன், ஆனந்தசங்கரி, சூசைதாசன், இராசதுரை உட்பட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தேவநாயகத்தின் தொகுதியான கல்குடா தொகுதியில் தான் தமிழ் இளைஞர்கள் வகைதொகையின்றி கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள், சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

இந்த சட்டமூலம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தான் நிறைவேற்றப்பட்டது என காட்டுவதற்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து பேசி இணங்க வைத்து முள்முடி ஒன்றை தமிழர்களின் தலையில் சூட்டி விட்டார்.

இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற உணவு விடுதியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா விருந்தொன்றை வழங்கினார். அந்த விருந்தில் முன்வரிசையில் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களே இருந்தனர்.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு பாராளுமன்றத்தில் அரச தரப்புடன் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் விருந்துண்டு முடிவதற்குள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் மூலம் யாழ் நகரில் இரு தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அன்றிலிருந்து தொடரும் கைதுகளும் சித்திரவதைகளும் படுகொலைகளும் அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த சட்ட மூலத்தை வாசிக்கும் எவரும் அதன் கொடூரத்தன்மை பற்றியும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கையில் குற்றம் ஏதும் செய்யாத ஒருவரை கூட கைது செய்து தண்டனை வழங்க இடமுண்டு என்பதையும் உணர்ந்து கொள்வர்.

ஆனால் இந்த கொடூரமான சட்டத்தை தமிழ் தலைவர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் ஏன் ஆதரித்தார்கள் என்பது தான் இன்றுவரை எனக்கு விடைகாண முடியாத கேள்வியாக உள்ளது. அச்சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த சம்பந்தன், ஆனந்தசங்கரி போன்றவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கொடுமைகளை வடக்கு கிழக்கில் உள்ள பெரும்பாலான மக்கள் அனுபவித்திருக்கிறார்கள். எனினும் அச்சட்டம் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் 6ஆம் பிரிவு ஒன்றின் கீழ் எந்த ஒரு நபரையும் காரணம் கூறாமல், நீதிபதியின் கைது உத்தரவு இன்றி கைது செய்ய முடியும், எந்த ஒரு பகுதிக்குள்ளும் யாருடடைய அனுமதியும் இன்றி படையினர் நுழைந்து சோதனை நடத்த முடியும், வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்த முடியும், சொத்துக்கள் உடமைகளை சுவீகரிக்க முடியும்.

இச்சட்டத்தின் 5ஆம் பிரிவின் கீழ் யாராவது ஒரு நபர் குற்றம் புரிவார் என கருதினால் அவர் பற்றிய தகவலை பொலிஸாருக்கோ இராணுவத்திற்கோ தெரிவிக்க தவறினால் அது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்பட்டு அவருக்கு 7ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்க முடியும்.

வடக்கு கிழக்கு உட்பட இலங்கையில் பெரும்பாலான அப்பாவி தமிழர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் 5ஆம் பிரிவின் கீழ் தண்டனை பெற்றிருக்கிறார்கள். உதாரணமாக விடுதலைப்புலி உறுப்பினர்கள் அல்லது தீவிரவாத குழு உறுப்பினர் ஒருவர் பற்றி தெரிந்திருந்தால் அவர் பற்றி தகவல் கொடுக்கவில்லை என்றால் தண்டனைக்குரிய குற்றமாகும். விடுதலைப்புலிகள் பற்றி தெரியாதவர்கள் வடக்கு கிழக்கில் யார் இருக்கிறார்கள். எனவே தான் வடக்கு கிழக்கில் உள்ள அப்பாவி தமிழ் மக்கள் இந்த பிரிவின் கீழ் தண்டனை பெற்ற சம்பவங்கள் பல உண்டு.

ஒருவரை கைது செய்து தண்டிக்க வேண்டும் என படையினரோ அல்லது அரசாங்கமோ தீர்மானித்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அதனை இலகுவாக செய்து முடிக்க முடியும். அதற்கு உதாரணம் ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு வழங்கப்பட்ட 20வருடகால சிறைத்தண்டனை. இலங்கையில் பத்திரிகை ஒன்றில் எழுதினார் என்பதற்காக 20வருடகால சிறைத்தண்டனை பெற்ற முதலாவது நபர் திசநாயகம் என்ற தமிழர்தான்.

சாதாரண சட்டம் ஒன்றில் கைது செய்யப்படுபவர் 24மணி நேரத்தில் நீதிபதி முன்னிலையில் நிறுத்தப்பட வேண்டும், அவர்களை ஆகக்கூடியது 14நாள் விளக்கமறியலில் வைக்க முடியும் அல்லது பிணையில் விடுதலை செய்யப்பட வேண்டும். ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீதிபதியின் கைது உத்தரவின்றி எவரையும் கைது செய்ய முடியும் என்பதுடன் கைது செய்யப்படுபவர்கள் நீதிபதியின் முன் நிறுத்த வேண்டிய அவசியம் கிடையாது. பாதுகாப்பு அமைச்சர் அல்லது பாதுகாப்பு செயலாளர் தடுப்பு காவல் உத்தரவை பிறப்பிப்பதன் மூலம் 3மாதகாலத்திற்கு பயங்கரவாத தடைப்பிரிவு காவல்துறையினரின் தடுப்பில் அல்லது இராணுவ படை முகாம்களிலும் தடுத்து வைத்திருக்க முடியும். ஒவ்வொரு 3மாதத்திற்கும் தடுப்பு காவல் உத்தரவை நீடிக்க முடியும். இவ்வாறு 18மாதங்கள் வரை படைமுகாம்களில் தடுத்து வைத்திருக்க முடியும்.

அதன் பின்னர் காலவரையறை அற்ற வகையில் விளக்கமறியலில் வைக்க முடியும், 10வருடங்களுக்கு மேலும் ஒருவர் மீது வழக்கு தாக்கல் செய்யாது சிறைச்சாலையில் அடைத்து வைத்திருந்த சம்பவங்களும் உண்டு. தற்போதும் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படாத நிலையில் வருடக்கணக்காக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். தமிழராக பிறந்திருந்தால் அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என அரசாங்கம் அல்லது படையினர் கருதினால் அவரை சாகும்வரை நீதிவிசாரணை இன்றி சிறையில் அடைத்து வைக்க முடியும், சிறைச்சாலையில் அவர்களை கொலை செய்து விடவும் முடியும். அவ்வாறான பல சம்பவங்கள் இலங்கையில் இடம்பெற்றிருக்கிறது.
படையினரால் சுட்டுக்கொல்லப்படும் ஒருவரை மரணவிசாரணை எதுவும் இன்றி சடலத்தை எரித்து விடுவதற்கு அல்லது புதைத்து விடுவதற்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் முழு அதிகாரமும் படையினருக்கும் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் செயலாளருக்கே உண்டு.

பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக இச்சட்டத்தை பயன்படுத்துகிறோம் என சொல்லிக்கொண்டு படையினருக்கு கட்டுக்கடங்காத அதிகாரங்கள் வழங்கப்பட்டதன் மூலம் மனித உரிமை மீறல்களும் சித்திரவதைகளும் இடம்பெற்றதற்கான சாட்சியங்கள் நிறைய உண்டு.

ஒருவர் மீது குற்றம் சாட்டுவதாக இருந்தால் குற்றம் புரிந்ததற்கான தடயப்பொருட்களும், அதற்கு வலுவான சாட்சியங்களும் இருக்க வேண்டும். ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவை எதுவுமே இன்றி ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட முடியும்.

விசாரணை செய்யும் பொலிஸ் அதிகாரி தான் விரும்புகின்றவாறு குற்றங்களை எழுதி கைது செய்யப்பட்ட நபரிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டால் அதுவே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஒருவருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு தேவையான சான்று பொருளாகும். அந்த வாக்குமூலத்தை பெற்ற காவல்துறை அதிகாரியே பிரதான சாட்சியாகும். பொலிஸ் அதிகாரி ஒருவர் தன்னிடம் வாக்குமூலத்தை தந்தார் என நீதிமன்றில் சாட்சியமளித்தால் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியாக காணப்பட்டு தண்டனை வழங்கப்படும்.

கைது செய்யப்படுபவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு பொலிஸார் வெள்ளை கடதாசியில் எழுதிய குற்றச்சாட்டின் கீழ் கையொப்பம் இட்ட சம்பவங்கள் பல உண்டு. சித்திரவதை செய்யப்பட்டு கையொப்பம் பெறப்பட்டது என்ற விடயம் நீதிமன்றங்களில் நிரூபிக்கப்பட்ட சம்பங்களும் உண்டு.

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் படுவான்கரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் ஒன்று பூநகரி படைத்தளம் மீது தாக்குதல் மேற்கொண்டதாகும். ஆனால் அந்த இளைஞர் வாழ்க்கையில் வவுனியாவுக்கே சென்றதில்லை. சித்திரவதை செய்யப்பட்டே குற்றஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பம் பெறப்பட்டது என நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டதையடுத்து அந்த இளைஞர் விடுதலை செய்யப்பட்டார். பூநகரி எங்கு இருக்கிறது என்றே தெரியாத ஒரு நபர் மீது பூநகரி முகாம் தாக்குதலை நடத்தினார் என்று குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்த சம்பவங்கள் போல பலவற்றை வடக்கு கிழக்கில் உள்ள நீதித்துறை பார்த்திருக்கிறது.

ஆயுதப்போராட்டத்தை அடக்குவதற்காக இந்த சட்டத்தை கொண்டுவந்ததாக கடந்த கால அரசாங்கங்கள் கூறிவந்தன. அந்த ஆயுதப்போராட்டம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் செயற்பாட்டில் வைத்திருப்பதற்கு எந்த காரணமும் இல்லை.

அவ்வாறு தொடர்ந்து வைத்திருப்பது தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளை கூட தடுப்பதற்காகவே ஆகும்.

போர் நடந்த காலத்தில் கூட இந்த பயங்கரவாத தடைச்சட்டம் பற்றி உள்ளுர் மற்றும் சர்வதேச சட்டவல்லுனர்களும், மனித உரிமை அமைப்புக்களும், உலகின் பல்வேறு அரசுகளும், ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புக்களும் கண்டனம் தெரிவித்து வந்தன. இதனை நீக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன.

இப்போது போர் முடிந்த நிலையில் ஆயுதப்போராட்டம் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது என்பது தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியிலும் தமது உரிமைகளுக்காக போராடுவதை தடுப்பதற்கே ஆகும். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம் இதனை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்குமேயானால் அதில் இருந்து அரசியல் அனுகூலங்களை தாம் பெறுவதற்காகவே இச்சட்டத்தை அரசு நடைமுறையில் வைத்திருக்கிறது என்று குற்றம் சுமத்தவும், நியப்படுத்தக் கூடிய ஐயம் ஏற்படவும் இடமளிக்கிறது.

தனது அதிகாரத்தை செலுத்த பயங்கரவாத தடுப்பு சட்டத்தை அரசு ஒரு கருவியாக பயன்படுத்துகின்றது என அனுமானிக்கவும் இடமளிக்கிறது.

அரசின் கருத்துக்கு மாற்றுக்கருத்து கொண்டவர்களை அடக்குவதற்கு போர் முடிந்த இக்கால கட்டத்திலும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை கொண்டே அரசு அடக்கி வருகிறது. இது வழமையான சாதாரண சட்டத்தின் செயற்பாடுகளை அழிக்கவும் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு பங்கம் ஏற்படுத்தவும் வழி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நடைமுறையில் வைத்திருப்பதன் மூலம் குற்றவியல் புலனாய்வ பிரிவும், பயங்கரவாத புலனாய்வு பிரிவும் சட்டத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட அமைப்புக்களாக தன்னிச்சையாக செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பொலிஸ் ஓழங்கு முறைகள் செயலற்றுப் போயுள்ளன என்பது யாவரும் ஏற்றுக்கொள்ளும் விடயமாகும். அதற்கு உதாரணமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரை யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினர் அண்மையில் சந்தித்த போது மாணவர்களின் கைதுகள் பற்றி தமக்கு தெரியாது என்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரே அதனை கையாள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

ஒரு நாட்டின் சட்டம் என்பது அங்குள்ள அனைத்து குடிமக்களுக்கும் சமனானதாகும். ஆனால் பயங்கரவாத தடைச்சட்டமும் அதன் கீழான கைதுகளும், தமிழர்களுக்கு ஒரு நீதி ஏனையவர்களுக்கு ஒரு நீதி என்ற நிலையாகவே உள்ளது.

தென்னிலங்கை மாணவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றார்கள், கடந்த காலங்களில் சிறிலங்கா படையினருடன் போரிட்டு மடிந்து போன ஜே.வி.பி தலைவர் உட்பட உறுப்பினர்களுக்காக அஞ்சலி செலுத்துகிறார்கள். தென்னிலங்கை மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் வன்முறைகள் கூட இடம்பெற்றிருக்கின்றன. பொலிஸாரை மாணவர்கள் திருப்பி தாக்கிய சம்பவங்களும் இடம்பெற்றதுண்டு. தென்னிலங்கை மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அல்லது அவர்களது அரசியல் நடவடிக்கைகளில் எந்தகைய பாரிய தாக்கங்கள் ஏற்பட்டாலும் அவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச்சட்டம் என்ற இரும்பு கரங்கள் பாயவில்லை.

ஆனால் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபட்டதில்லை. தம்மை தாக்கிய படையினரையும் பொலிஸாரையும் திருப்பி தாக்கவில்லை. ஆனால் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதன் மூலம் இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு நீதி, சிங்களவர்களுக்கு ஒரு நீதி என்பது தெட்டத்தெளிவாக தெரிகிறது.

சட்டம் என்பது மக்களை பாதுகாக்கவே அன்றி அவர்களை அடக்கி ஒடுக்குவதற்காக அல்ல. ஆனால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் பயங்கரவாத தடுப்பு சட்டம் தமிழர்களின் ஜனநாயக குரல்களை அடக்கி அவர்களை அடிமைகளாக வைத்திருப்பதற்கே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழர்கள் ஜனநாயக ரீதியில் தமது உரிமைக்காக போராடினால் அல்லது பேசினால் கூட பயங்கரவாத தடைச்சட்டம் என்ற கொடிய ஆயுதத்தை கொண்டு அரசாங்கம் தாக்கி வருவதன் மூலம் தமிழர்கள் தனது நாட்டின் குடிமக்கள் இல்லை என்பதை சொல்லவருகிறதா என்ற நியாயமான கேள்வி எழுகிறது.

இந்த கேள்விக்கான பதிலை சொல்ல வேண்டிய பொறுப்பிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் நீண்டகாலத்திற்கு தப்பிக்கொள்ள முடியாது.

(இரா.துரைரத்தினம்)

No comments:

Post a Comment