Saturday 15 December 2012

பிரான்சில் அரசியல் தஞ்சம் கோருவோரை கௌரவமாக நடத்தவேண்டும்! புதிய நடைமுறைகளோடு மனுவல் வால்ஸ்!!!

பிரான்சின் உள்துறை அமைச்சர் மனுவல் வால்ஸ் அவர்கள் அனைத்து நகரக் காவற்துறையின் மாவட்ட நிர்வாகத்துறைத் தலைமை மையங்களிற்கும் (Prteéfecture)  ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அரசியல் தஞ்சம் கோருவோரைக் கௌரவமாகவும் தகுதியுடனும் வரவேற்கத் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி இந்தச் சுற்றறிக்கை அமைந்துள்ளது. அதன் பிரதி ஒன்றை மேற்கோள்காட்டி AFP செய்தி வெளியிட்டுள்ளது. 
முதன்முறையாக பிரான்ஸ் அரசாங்கம் 10 தொடக்கம் 12 வீதம் வரையான நிர்வாகத் தலைமை மையங்களில் 'பெரும் சிக்கல்கள்' உள்ளது என்பதைக் கணக்கெடுத்துள்ளது. முக்கியமாக முதல் நாள் இரவே சென்று வரிசையில் நிற்கவேண்டிய கட்டாயங்களும் சில நிலையங்களில் அவை திறப்பதற்கு முன்னர் மூன்று தொடக்கம் நான்கு மணித்தியாலங்கள் வரிசையில் நிற்கவேண்டிய கட்டாயமும் உள்ளது என்று அந்தச் சுற்றறிக்கை தெரிவித்துள்ளது. முக்கியமாக Ile-de-France இல் இருக்கும் காவற்துறை மையங்கள் இப்பிரச்சினையில் அடங்குகின்றன.  Nanterre காவற்துறை நிர்வாக மையம் மட்டும் இதில் அடங்கவில்லை. அவர்கள் ஏற்கனவே சிறந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்கின்றார்கள். 
முக்கியமாக வதிவிட அனுமதியற்றோருக்கான புதிய நடைமுறை அறிமுகப் படுத்த்பட்ட பின்பு நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. பொபினியில் (BOBIGNY) புதிய நடைமுறை அறிவிக்கப்பட்ட பின்னர் தினமும் 300 பேரினது விண்ணப்பங்கள் பரிசோதிக்கப்படுகின்றன. ஆனாலும் தினமும் இங்கு 1500 பேர் வருவதாக உள்ளக அறிக்கை தெரிவிக்கின்றது. இந்தக் காவற்துறை மையம் என்றுமே பிரச்சினைக்குரியது. AFP தனது அறிக்கையில் நூற்றுக்ணக்கான மீற்றர்களுக்குப் பனியில் உறைந்தபடி பேச்சுக்களற்ற நிலையில் இரவிரவாக அடுத்த நாள் அலுவலக சேவை ஆரம்பிக்ப்படும் வரை மக்கள் காத்திருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளது.
Seine-Saint-Denis (93) யில் நான்கு இலட்சத்து ஆறாயிரம் வெளிநாட்டவர்கள் உள்ளனர். இது Seine-Saint-Denis  யின் சனத்தொகையில் 27 சதவீதமாகும். இவர்கள் தமது இருப்பைச் சட்டபூர்வமாக வைத்திருப்பதற்குக் காவற்துறை நிர்வாக மையங்களை (Préfecture) நாடியே ஆகவேண்டிய கட்டாயம் உள்ளது. இவர்களுக்கான காவற்துறை நிர்வாக மையமாக பொபினியே உள்ளது. 
"பிரான்சுவா ஒல்லோந்த் தனது தேர்தற் பிரச்சாரத்தில் 'மனித உரிமைகளின் அடிப்படையில் தகுதியானதும் மரியாதையானதுமான நிலையில் வாழ்பவர்களுக்கு வதிவிட அனுமதிப் பத்திரம் வழங்கப்படும். அவர்கள் நீண்ட நெடு வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த வாக்குறுதியின் தொடரச்சியே இப்பொழுது விடப்பட்டிருக்கும் இந்தச் சுற்றறிக்கை.  ஆனாலும் இது ஒரு நீண்டகாலப் பொறிமுறையின் முதற்கட்டமே" எனவும் மனுவல் வால்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 
இந் நடைமுறைகளுக்காக காவற்துறை நிர்வாக மையங்கள் தம்மை விரிவாக்கம் செய்து கொள்ள ஜனவரி 30ம் திகதி 2013ம் ஆண்டு வரை கால எல்லை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படின் சில காவற்துறை நிர்வாக மையங்களுக்கு மார்ச் நடுப்குதிவரை கூட கால அவகாசம் வழங்கப்படும். இதற்காக வெளியக வளங்களைப் பெறவும் அதற்கான செலவீனங்களை அரசு பொறுக்கவும் தாயாராக உள்ளது. 2013ம் ஆண்டிற்கான பாதீட்டில் காவற்துறை நிர்வாக மையங்கள் 7 சதவீதம் செலவீனத்தைக் கட்டுப் படுத்தவேண்டும். இருப்பினும் வெளிநாட்வர்களுக்கான பிரிவு இதற்குள் அடங்காது விரிவாக்கம் செய்யப்படும். இதற்கான செலவீனங்களுக்கு எந்த எல்லையும் வரையறுக்கப்படவில்லை. இதற்கான விரிவாக்கங்களை அந்த மையங்களின் தேவைப்படி காவற்துறை நிர்வாக மைய அதிகாரியே (Préfet) முடிவு செய்து கொள்ளலாம். 
உதாரணமாக ESSONE பகுதியின் காவற்துறை நிர்வாக மையப் பொதுச் செயலாளர் Alain Espinasse "நாம் ஏற்கனவே செலவீனத்தைக் கட்டுப்டுத்தி வாகனச் சான்றிதழ் (Crates grises) பதிவுப் பகுதியையும் முன்னைய வெளிநாட்டவர் பிரிவையும் இணைத்துப் பெரிய பகுதியாக்கியுள்ளோம். இது குறைந்த செலவுடன் ஆக்கபூர்வமான பலனைத் தந்துள்ளது. நாம் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது தற்காலிக வதிவிட உரிமைப் பத்திரமோ இல்லது நிரந்தர உரிமைப் பத்திரமோ தயாரான உடன் குறுஞ்செய்தி மூலம்  தெரியப்படுத்துகின்றோம். இதனால் அவர்கள் மீண்டும் மீண்டும் வந்து செல்வது தவிர்க்கப்பட்டுள்ளது. 
இந்தச் சுற்றறிக்கை பற்றிக் கருத்துத் தெரிவித்த எவ்ரி பல்கலைக் கழகத்தின் பொதுமக்கள் உரிமைக்கான கலந்தாய்வுகளின் தலைவர் Serge Slama "இந்தச் சுற்றறிக்கை ஒரு நல்ல அடையாளம். முதன்முறையாக அரசாங்கம் இப்படி ஒரு பிரச்சினை உள்து என்பதை உணர்ந்துள்ளது'" என்று தெரிவித்துள்ளார்.

Tuesday 11 December 2012

ராமர், ஆஞ்சநேயர் படம் போட்ட சேலையில் குஷ்பு

இந்து கடவுள்களான ராமர், கிருஷ்ணர் மற்றும் ஆஞ்சநேயரின் படம் போட்ட சேலையைக் கட்டியதற்காக நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் தெரிவித்துள்ளார்

 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

 நடிகை குஷ்பு கடவுள்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார். ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் இந்துக் கடவுள் படங்கள் அச்சிட்ட சேலை அணிந்து பங்கேற்று உள்ளார். அவரது சேலை பார்டரில் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயர், யோகங்களின் தலைவர் கிருஷ்ணர், ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை போதித்த ராமர் போன்ற இந்து கடவுள் படங்கள் உள்ளன. அதை மார்பில் போர்த்திக் கொண்டு விழாவில் பங்கேற்று உள்ளார்.  

இது இந்துக் கடவுள்களை அவமதிப்பது ஆகும். இந்த குற்றத்தை அவர் தெரியாமல் செய்து இருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தெரிந்தே செய்து இருந்தால் குஷ்புக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். குஷ்புவையும் சர்ச்சையையும் பிரிக்கவே முடியாது போன்று. முன்னதாக அவர் ருத்ராட்ச மாலையில் பெரிய பிளாஸ்டிக் தாலியைக் கோர்த்து அணிந்து வந்து சர்ச்சையைக் கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday 10 December 2012

ஏகலைவச் சகோதரர்காள் துரோணர்கள் விரும்ப மாட்டார்கள்


வவுனியாவில் உள்ள பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையிலான குழுவினர் சந்தித்திருந்தனர்.

இதன்போது, கைதான மாணவர்களில் ஒருவர், தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினராக வருவேன் என்று கூறினாராம். அந்த மாணவனின் நம்பிக்கைக்கும் மன உறுதிக்கும் எங்கள் பாராட்டுக்கள். ஆனாலும் அந்த அன்பு மாணவன் சிங்களவர்களின் அரசியலைப் புரிந்து கொண்டிருந்தாலும் எங்களவர்களின் அரசியலைப்புரிந்து கொள்ளாமல் இருப்பதை நினைத்து வேதனைப்பட்டோம்.

அன்புச் சகோதரா! ஏகலைவர்கள் குருவாக வருவதை துரோணாச்சாரிகள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள் என்ற உண்மையை உணர்ந்துகொள்க. உங்கள் தமிழ் உணர்வும் தடுப்பு முகாம்களில் நீங்கள்படும் வதைகளும் தமிழ் உணர்விற்கான உங்களின் கடும் உழைப்பாக-முயற்சியாக இருக்கலாம். ஆனால் துரோணர்களுக்கு அதுதான் கட்டை விரல். அதைத்தான் அவர்கள் தானமாகக் கேட்பார்கள். தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டில் வாழவிட்டு, உங்கள் உணர்வுகளுக்கு நெய்யூற்றி அக்கினித் தீ மூட்டி தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ளும் எங்கள் துரோணர்களுக்கு நீங்கள் ஏகலைவன்கள். அன்புத் தம்பிகாள்! ஒன்றை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ யாரைச் சந்தித்தாலும் அவருடன் குறைந்தது இரண்டு பேர் இருப்பார்கள்.

ஆனால் எங்கள் சம்பந்தன் ஐயா ஜனாதிபதியை தனித்துச் சென்றுதான் சந்திப்பார். அந்தத் தனிமை எதற்கானது? மிக நீண்ட அரசியல் அனுபவமுடைய, ஆரம்ப காலங்களில் தமிழர்களுக்காக, சிறை சென்ற மாவை சேனாதிராசாவையாவது அவர் கூட்டிச் செல்லலாம் அல்லவா? ஏன் அதைச்செய்யவில்லை. இப்போது கூட, பிரதம நீதியரசருக்கான விசாரணைகுழுவில் சம்பந்தர் இடம்பெற்றது ஏன்? நீங்கள் ஆச்சு உங்கள் விசாரணை ஆச்சு என்று பேசாமல் இருந்திருக்கலாமல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை.

ஓ...! பொலிஸாரால் கைது செய்யப்பட்ட விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த மாணவனின் தாய் ஒருவர் இரண்டு தினங்களுக்கு முன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுழைவாயிலில் இருந்து துணைவேந்தரின் அலுவலகம் வரை ஐயகோ! என்று அழுத ஒலி கேட்டு கலங்காதவர் யாரும் இருக்க முடியாது. உன் தாயின் கண்ணீரில் என் அரசியல் பிழைப்பு என்ற வஞ்சத்தனம் ஒழியும்வகையில் உங்கள் அரசியல் இலக்கை நிறைவேற்றுங்கள். அழுதாலும் சிரித்தாலும் நாம் அனைவரும் என்ற நிலைமை உருவாக வேண்டும். அப்போது தான் உரிமை வெல்லப்படும்.

எங்க இருந்து அள்ளுறதாம் காசு....


 உறைபனியில் உணர்வுகளைத் துறந்து தினமும்
மனிதரல்ல இயந்திரம்போல் உழைத்தும் என்ன
வரும் துயரை நீக்க ஒரு வழியில்லாமல் இங்கே
வருந்துகின்ற நாதியற்ற அகதிகள் எமக்கு !!!!.......

நடு நடுங்க உடல் விறைக்க இன்னுமொரு
நரகலோக வாழ்வும் உண்டோ இதைவிடவும்!!!!....
விரல்களுக்குள் ஊசிகளால் குத்துவது போல் இந்த
வேதனைகள் தாங்கி நிற்க முடியவில்லையே !...

செலவழித்து உடை வாங்கிப் போட்டுக்கொள்ளவும்
சீரழிந்த தமிழனுக்கு வேறு வழியும் உண்டோ....
உறவுகளின் கண்ணீரைப் பார்த்துப் பார்த்தே
உழைத்த பணம் உண்டியலைத் துடைத்துச் செல்லும் போது!..

விரகம் என்ன தாபம் என்ன எல்லாம் போய்விடும்
மன விரக்தி மட்டும் நெஞ்சுக்குள்ளே நின்றாடிடும்
உலர்ந்த தரை உணர்சிகளைக் காட்டக் கொஞ்சம் இங்கே
உனக்கும் சுடும் என்ன செய்ய வாழ்க்கை இதுதான்!....

பரந்த கடல் தாண்டி வந்து அப் பாவிகளாய்
பர பரப்பில் மூழ்கும் இந்த நாடுகளில்
தின(மு)ம் குறித்த நேரம் அதற்குள் வேலைத்தளம்
செல்ல வேண்டும் செல்ல வேண்டும் என அவதியுறுவர்!...

இவர்(கள் ) குறித்து யாரும் இங்கே கவலை கொள்ளார்
இருக்கும் இடம் வெளிநாடு என்றோர் எண்ணம் !...........
பணம் காய்க்கும் மரம்தான் நாமும் இங்கே ஆனாலும்
பணம் பறிக்கும் கைகள் அது வேறொன்றாகுதே!!!!.....

உழைத்த பணம் வில்லுக் கட்டச் சரியாய்ப் போகுது
இந்த ஊருக்குள்ளும் கள்ளப் புத்தி உள்ளோர் வாழ்கிறார்!...
பொதுப்படையாய்ப் பார்க்கும் போது உண்மை புரியாது
புறப்பட்டு வா உன் புலனைத் திருத்திச் செல்லலாம்!.....

Sunday 9 December 2012

மீண்டும் தலையெடுத்திருக்கும் பயங்கரவாத தடைச்சட்டமும் அதற்கு ஆதரவளித்த தமிழர்களும்!


 போரில் இறந்து போன தங்கள் உறவுகளுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ததற்காக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இராணுவத்தினராலும் பொலிஸாரும் தாக்கப்பட்டது மட்டுமன்றி இதுவரை 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் உட்பட இதுவரை 35க்கும் மேற்பட்டவர்கள் இந்த வாரத்தில் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மாணவர்கள் ஊர்வலம் நடத்துவதும் பொலிஸார் அவர்களை கைது செய்வதும் விசாரணை நடத்துவதும் நாம் கேள்விப்படுகின்ற விடயங்கள்தான்.


ஆனால் பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை என்ற பெயரில் தடுத்து வைத்திருப்பது தென்னிலங்கையில் நடந்திருக்காத ஒரு விடயம். ஆனால் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கையின் சாதாரண சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. அவர்கள் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பயங்கரவாத தடுப்புச்சட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆரம்ப காலப்பகுதியில் சர்வதேச சட்டநிபுணர் ஆணைக்குழு இந்த சட்டம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஜனநாயக நாடு என சொல்லிக்கொள்ளும் இலங்கையின் சட்டப்புத்தகத்தில் இருக்கும் அசிங்கமான கறை என இதனை வர்ணித்திருந்தது.

No legislation conferring even remotely comparable powers is in force in any other free democracy operating under the Rule of Law… such provision is an ugly blot on the statute book of any civilized country”   -International Commission of Jurists (1984)

பயங்கரவாத தடுப்புச்சட்டம் என்ற இந்த அசிங்கமான கறைக்கு நீண்டவரலாறு இருக்கிறது. பயங்கரவாத தடுப்புச்சட்டம் என்பது முழுக்க முழுக்க இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலக்கு வைத்து அவர்களை அடக்கி கொடுமைப்படுத்தவதற்கு என உருவாக்கப்பட்டதாகும்.

1979ஆம் ஆண்டு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது தொடக்கம் கடந்த 33ஆண்டுகளில் இந்த சட்டத்தால் அப்பாவி தமிழ் மக்கள் அனுபவித்த கொடுமைகளும், இழப்புக்களும் கொஞ்சம் அல்ல. கைதுகள், சித்திரவதைகள், கொலைகள், அடக்குமுறைகள், காலவரையறையற்ற சிறைவாசம், என அத்தனை கொடுமைகளும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தான் நடந்தேறின. தமிழர்கள் மீது கட்டுக்கடங்காத வன்முறையை கட்டவிழ்ந்து விட்ட அரச பயங்கரவாதத்திற்கு பாதுகாப்பு வழங்கிய சட்டமே பயங்கரவாத தடுப்பு சட்டமாகும்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலக்கு வைத்தே நடைமுறைப்படுத்தப்பட்ட இப்பயங்கரவாத தடைச்சட்டத்தால் பாதிக்கப்படாத தமிழர்கள் மிகச்சிலரே ஆகும்.

சர்வதேச மட்டத்தில் மனித உரிமை அமைப்புக்களாலும், சர்வதேச சட்ட நிபுணர் ஆணைக்குழுவாலும் கண்டனத்திற்குள்ளான இந்த பயங்கரவாத தடுப்புச்சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னணி, தமிழர்களை அடக்கி ஒடுக்கி கொடுமை படுத்துவதற்கு என்றே கொண்டுவரப்பட்ட இச்சட்டத்திற்கு யார் யார் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஆதரவளித்து இதனை நிறைவேற்றினார்கள் என்பது இப்போது உள்ள பலருக்கு தெரியாத விடயமாக இருக்கலாம். தெரிந்தால் பலரின் முகமூடிகள் கிழிக்கப்படலாம்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்காலத்தில் 1979ஆம் ஆண்டு யூலை 20ஆம் திகதி இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போது நீதியமைச்சராக இருந்த தமிழர் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் கல்குடா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.டபிள்யூ.தேவநாயகம் பாராளுமன்றத்தில் இச்சட்டத்தை சமர்ப்பித்திருந்தார். அப்போது பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் அனைவரும் கைகளை நீள உயர்த்தி தமது ஆதரவை தெரிவித்துக்கொண்டனர்.

தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்காக, அடக்குவதற்காக, தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை முற்றாக நசுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் உட்பட அத்தனை தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பாக 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலை பிரகடனப்படுத்தி அதில் போட்டியிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றிபெற்றது. வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் வழங்கிய வெற்றி என்பது சாதாரண வெற்றி அல்ல. இலங்கையின் நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக தமிழ் கட்சி ஒன்று அமரும் அளவிற்கு மக்கள் அந்த வெற்றியை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்கியிருந்தார்கள்.

அந்த வெற்றியோடு அமிர்தலிங்கம் தலைமையில் சென்ற தமிழர் விடுதலைக்கூட்டணி செய்த காரியம் தமிழ் மக்களை ஒடுக்குவதெற்கென, அழித்தொழிப்பதற்கென கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு ஆதரித்து வாக்களித்து அதை நிறைவேற்றியதுதான்.

இப்போது உயிருடன் இருக்கும் இரா.சம்பந்தன், ஆனந்தசங்கரி, சூசைதாசன், இராசதுரை உட்பட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தேவநாயகத்தின் தொகுதியான கல்குடா தொகுதியில் தான் தமிழ் இளைஞர்கள் வகைதொகையின்றி கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள், சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

இந்த சட்டமூலம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தான் நிறைவேற்றப்பட்டது என காட்டுவதற்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து பேசி இணங்க வைத்து முள்முடி ஒன்றை தமிழர்களின் தலையில் சூட்டி விட்டார்.

இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற உணவு விடுதியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா விருந்தொன்றை வழங்கினார். அந்த விருந்தில் முன்வரிசையில் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களே இருந்தனர்.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு பாராளுமன்றத்தில் அரச தரப்புடன் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் விருந்துண்டு முடிவதற்குள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் மூலம் யாழ் நகரில் இரு தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அன்றிலிருந்து தொடரும் கைதுகளும் சித்திரவதைகளும் படுகொலைகளும் அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த சட்ட மூலத்தை வாசிக்கும் எவரும் அதன் கொடூரத்தன்மை பற்றியும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கையில் குற்றம் ஏதும் செய்யாத ஒருவரை கூட கைது செய்து தண்டனை வழங்க இடமுண்டு என்பதையும் உணர்ந்து கொள்வர்.

ஆனால் இந்த கொடூரமான சட்டத்தை தமிழ் தலைவர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் ஏன் ஆதரித்தார்கள் என்பது தான் இன்றுவரை எனக்கு விடைகாண முடியாத கேள்வியாக உள்ளது. அச்சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த சம்பந்தன், ஆனந்தசங்கரி போன்றவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கொடுமைகளை வடக்கு கிழக்கில் உள்ள பெரும்பாலான மக்கள் அனுபவித்திருக்கிறார்கள். எனினும் அச்சட்டம் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் 6ஆம் பிரிவு ஒன்றின் கீழ் எந்த ஒரு நபரையும் காரணம் கூறாமல், நீதிபதியின் கைது உத்தரவு இன்றி கைது செய்ய முடியும், எந்த ஒரு பகுதிக்குள்ளும் யாருடடைய அனுமதியும் இன்றி படையினர் நுழைந்து சோதனை நடத்த முடியும், வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்த முடியும், சொத்துக்கள் உடமைகளை சுவீகரிக்க முடியும்.

இச்சட்டத்தின் 5ஆம் பிரிவின் கீழ் யாராவது ஒரு நபர் குற்றம் புரிவார் என கருதினால் அவர் பற்றிய தகவலை பொலிஸாருக்கோ இராணுவத்திற்கோ தெரிவிக்க தவறினால் அது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்பட்டு அவருக்கு 7ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்க முடியும்.

வடக்கு கிழக்கு உட்பட இலங்கையில் பெரும்பாலான அப்பாவி தமிழர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் 5ஆம் பிரிவின் கீழ் தண்டனை பெற்றிருக்கிறார்கள். உதாரணமாக விடுதலைப்புலி உறுப்பினர்கள் அல்லது தீவிரவாத குழு உறுப்பினர் ஒருவர் பற்றி தெரிந்திருந்தால் அவர் பற்றி தகவல் கொடுக்கவில்லை என்றால் தண்டனைக்குரிய குற்றமாகும். விடுதலைப்புலிகள் பற்றி தெரியாதவர்கள் வடக்கு கிழக்கில் யார் இருக்கிறார்கள். எனவே தான் வடக்கு கிழக்கில் உள்ள அப்பாவி தமிழ் மக்கள் இந்த பிரிவின் கீழ் தண்டனை பெற்ற சம்பவங்கள் பல உண்டு.

ஒருவரை கைது செய்து தண்டிக்க வேண்டும் என படையினரோ அல்லது அரசாங்கமோ தீர்மானித்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அதனை இலகுவாக செய்து முடிக்க முடியும். அதற்கு உதாரணம் ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு வழங்கப்பட்ட 20வருடகால சிறைத்தண்டனை. இலங்கையில் பத்திரிகை ஒன்றில் எழுதினார் என்பதற்காக 20வருடகால சிறைத்தண்டனை பெற்ற முதலாவது நபர் திசநாயகம் என்ற தமிழர்தான்.

சாதாரண சட்டம் ஒன்றில் கைது செய்யப்படுபவர் 24மணி நேரத்தில் நீதிபதி முன்னிலையில் நிறுத்தப்பட வேண்டும், அவர்களை ஆகக்கூடியது 14நாள் விளக்கமறியலில் வைக்க முடியும் அல்லது பிணையில் விடுதலை செய்யப்பட வேண்டும். ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீதிபதியின் கைது உத்தரவின்றி எவரையும் கைது செய்ய முடியும் என்பதுடன் கைது செய்யப்படுபவர்கள் நீதிபதியின் முன் நிறுத்த வேண்டிய அவசியம் கிடையாது. பாதுகாப்பு அமைச்சர் அல்லது பாதுகாப்பு செயலாளர் தடுப்பு காவல் உத்தரவை பிறப்பிப்பதன் மூலம் 3மாதகாலத்திற்கு பயங்கரவாத தடைப்பிரிவு காவல்துறையினரின் தடுப்பில் அல்லது இராணுவ படை முகாம்களிலும் தடுத்து வைத்திருக்க முடியும். ஒவ்வொரு 3மாதத்திற்கும் தடுப்பு காவல் உத்தரவை நீடிக்க முடியும். இவ்வாறு 18மாதங்கள் வரை படைமுகாம்களில் தடுத்து வைத்திருக்க முடியும்.

அதன் பின்னர் காலவரையறை அற்ற வகையில் விளக்கமறியலில் வைக்க முடியும், 10வருடங்களுக்கு மேலும் ஒருவர் மீது வழக்கு தாக்கல் செய்யாது சிறைச்சாலையில் அடைத்து வைத்திருந்த சம்பவங்களும் உண்டு. தற்போதும் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படாத நிலையில் வருடக்கணக்காக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். தமிழராக பிறந்திருந்தால் அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என அரசாங்கம் அல்லது படையினர் கருதினால் அவரை சாகும்வரை நீதிவிசாரணை இன்றி சிறையில் அடைத்து வைக்க முடியும், சிறைச்சாலையில் அவர்களை கொலை செய்து விடவும் முடியும். அவ்வாறான பல சம்பவங்கள் இலங்கையில் இடம்பெற்றிருக்கிறது.
படையினரால் சுட்டுக்கொல்லப்படும் ஒருவரை மரணவிசாரணை எதுவும் இன்றி சடலத்தை எரித்து விடுவதற்கு அல்லது புதைத்து விடுவதற்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் முழு அதிகாரமும் படையினருக்கும் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் செயலாளருக்கே உண்டு.

பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக இச்சட்டத்தை பயன்படுத்துகிறோம் என சொல்லிக்கொண்டு படையினருக்கு கட்டுக்கடங்காத அதிகாரங்கள் வழங்கப்பட்டதன் மூலம் மனித உரிமை மீறல்களும் சித்திரவதைகளும் இடம்பெற்றதற்கான சாட்சியங்கள் நிறைய உண்டு.

ஒருவர் மீது குற்றம் சாட்டுவதாக இருந்தால் குற்றம் புரிந்ததற்கான தடயப்பொருட்களும், அதற்கு வலுவான சாட்சியங்களும் இருக்க வேண்டும். ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவை எதுவுமே இன்றி ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட முடியும்.

விசாரணை செய்யும் பொலிஸ் அதிகாரி தான் விரும்புகின்றவாறு குற்றங்களை எழுதி கைது செய்யப்பட்ட நபரிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டால் அதுவே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஒருவருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு தேவையான சான்று பொருளாகும். அந்த வாக்குமூலத்தை பெற்ற காவல்துறை அதிகாரியே பிரதான சாட்சியாகும். பொலிஸ் அதிகாரி ஒருவர் தன்னிடம் வாக்குமூலத்தை தந்தார் என நீதிமன்றில் சாட்சியமளித்தால் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியாக காணப்பட்டு தண்டனை வழங்கப்படும்.

கைது செய்யப்படுபவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு பொலிஸார் வெள்ளை கடதாசியில் எழுதிய குற்றச்சாட்டின் கீழ் கையொப்பம் இட்ட சம்பவங்கள் பல உண்டு. சித்திரவதை செய்யப்பட்டு கையொப்பம் பெறப்பட்டது என்ற விடயம் நீதிமன்றங்களில் நிரூபிக்கப்பட்ட சம்பங்களும் உண்டு.

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் படுவான்கரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் ஒன்று பூநகரி படைத்தளம் மீது தாக்குதல் மேற்கொண்டதாகும். ஆனால் அந்த இளைஞர் வாழ்க்கையில் வவுனியாவுக்கே சென்றதில்லை. சித்திரவதை செய்யப்பட்டே குற்றஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பம் பெறப்பட்டது என நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டதையடுத்து அந்த இளைஞர் விடுதலை செய்யப்பட்டார். பூநகரி எங்கு இருக்கிறது என்றே தெரியாத ஒரு நபர் மீது பூநகரி முகாம் தாக்குதலை நடத்தினார் என்று குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்த சம்பவங்கள் போல பலவற்றை வடக்கு கிழக்கில் உள்ள நீதித்துறை பார்த்திருக்கிறது.

ஆயுதப்போராட்டத்தை அடக்குவதற்காக இந்த சட்டத்தை கொண்டுவந்ததாக கடந்த கால அரசாங்கங்கள் கூறிவந்தன. அந்த ஆயுதப்போராட்டம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் செயற்பாட்டில் வைத்திருப்பதற்கு எந்த காரணமும் இல்லை.

அவ்வாறு தொடர்ந்து வைத்திருப்பது தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளை கூட தடுப்பதற்காகவே ஆகும்.

போர் நடந்த காலத்தில் கூட இந்த பயங்கரவாத தடைச்சட்டம் பற்றி உள்ளுர் மற்றும் சர்வதேச சட்டவல்லுனர்களும், மனித உரிமை அமைப்புக்களும், உலகின் பல்வேறு அரசுகளும், ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புக்களும் கண்டனம் தெரிவித்து வந்தன. இதனை நீக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன.

இப்போது போர் முடிந்த நிலையில் ஆயுதப்போராட்டம் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது என்பது தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியிலும் தமது உரிமைகளுக்காக போராடுவதை தடுப்பதற்கே ஆகும். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம் இதனை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்குமேயானால் அதில் இருந்து அரசியல் அனுகூலங்களை தாம் பெறுவதற்காகவே இச்சட்டத்தை அரசு நடைமுறையில் வைத்திருக்கிறது என்று குற்றம் சுமத்தவும், நியப்படுத்தக் கூடிய ஐயம் ஏற்படவும் இடமளிக்கிறது.

தனது அதிகாரத்தை செலுத்த பயங்கரவாத தடுப்பு சட்டத்தை அரசு ஒரு கருவியாக பயன்படுத்துகின்றது என அனுமானிக்கவும் இடமளிக்கிறது.

அரசின் கருத்துக்கு மாற்றுக்கருத்து கொண்டவர்களை அடக்குவதற்கு போர் முடிந்த இக்கால கட்டத்திலும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை கொண்டே அரசு அடக்கி வருகிறது. இது வழமையான சாதாரண சட்டத்தின் செயற்பாடுகளை அழிக்கவும் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு பங்கம் ஏற்படுத்தவும் வழி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நடைமுறையில் வைத்திருப்பதன் மூலம் குற்றவியல் புலனாய்வ பிரிவும், பயங்கரவாத புலனாய்வு பிரிவும் சட்டத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட அமைப்புக்களாக தன்னிச்சையாக செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பொலிஸ் ஓழங்கு முறைகள் செயலற்றுப் போயுள்ளன என்பது யாவரும் ஏற்றுக்கொள்ளும் விடயமாகும். அதற்கு உதாரணமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரை யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினர் அண்மையில் சந்தித்த போது மாணவர்களின் கைதுகள் பற்றி தமக்கு தெரியாது என்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரே அதனை கையாள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

ஒரு நாட்டின் சட்டம் என்பது அங்குள்ள அனைத்து குடிமக்களுக்கும் சமனானதாகும். ஆனால் பயங்கரவாத தடைச்சட்டமும் அதன் கீழான கைதுகளும், தமிழர்களுக்கு ஒரு நீதி ஏனையவர்களுக்கு ஒரு நீதி என்ற நிலையாகவே உள்ளது.

தென்னிலங்கை மாணவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றார்கள், கடந்த காலங்களில் சிறிலங்கா படையினருடன் போரிட்டு மடிந்து போன ஜே.வி.பி தலைவர் உட்பட உறுப்பினர்களுக்காக அஞ்சலி செலுத்துகிறார்கள். தென்னிலங்கை மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் வன்முறைகள் கூட இடம்பெற்றிருக்கின்றன. பொலிஸாரை மாணவர்கள் திருப்பி தாக்கிய சம்பவங்களும் இடம்பெற்றதுண்டு. தென்னிலங்கை மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அல்லது அவர்களது அரசியல் நடவடிக்கைகளில் எந்தகைய பாரிய தாக்கங்கள் ஏற்பட்டாலும் அவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச்சட்டம் என்ற இரும்பு கரங்கள் பாயவில்லை.

ஆனால் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபட்டதில்லை. தம்மை தாக்கிய படையினரையும் பொலிஸாரையும் திருப்பி தாக்கவில்லை. ஆனால் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதன் மூலம் இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு நீதி, சிங்களவர்களுக்கு ஒரு நீதி என்பது தெட்டத்தெளிவாக தெரிகிறது.

சட்டம் என்பது மக்களை பாதுகாக்கவே அன்றி அவர்களை அடக்கி ஒடுக்குவதற்காக அல்ல. ஆனால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் பயங்கரவாத தடுப்பு சட்டம் தமிழர்களின் ஜனநாயக குரல்களை அடக்கி அவர்களை அடிமைகளாக வைத்திருப்பதற்கே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழர்கள் ஜனநாயக ரீதியில் தமது உரிமைக்காக போராடினால் அல்லது பேசினால் கூட பயங்கரவாத தடைச்சட்டம் என்ற கொடிய ஆயுதத்தை கொண்டு அரசாங்கம் தாக்கி வருவதன் மூலம் தமிழர்கள் தனது நாட்டின் குடிமக்கள் இல்லை என்பதை சொல்லவருகிறதா என்ற நியாயமான கேள்வி எழுகிறது.

இந்த கேள்விக்கான பதிலை சொல்ல வேண்டிய பொறுப்பிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் நீண்டகாலத்திற்கு தப்பிக்கொள்ள முடியாது.

(இரா.துரைரத்தினம்)

Friday 7 December 2012

டிசம்பர் மாதம் 21ம் திகதி உலகில் ஒன்றுமே மாறப்போவதில்லை


இந்த மாதம் டிசம்பர் மாதம் 21ம் திகதி மாயன் நாட்காட்டி முடிவிற்கு வருகிறது உலகம் அழியப்போகிறது என்பதோடு ஆரம்பத்து பல பல புனைகதைகளிற்கு கை, கால் வைத்து மக்களிடைய பீதியை ஏற்படுத்தும் முயற்சி அமெரிக்காவை உத்தியோகபூர்வமாக அறிக்கை விட வைத்திருக்கிறது.

அமைதியாய் இருங்கள்… உலகில் எந்த மாற்றமுமே டிசம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறப்போவதில்லை. மாயன் நாட்காட்டியில் கூட ஒரு ஆண்டுக்கான சுற்று டிசம்பர் 21ம் திகதி முடிந்து புதிய ஆண்டு டிசம்பர் 22ம் திகதி தொடங்குகிறதே தவிர அந்த நாட்காட்டியின் ஊழிக்காலம் முடியவில்லை எனத் தெரவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான வதந்திகளை கடந்த காலங்களிலும் பல வேறு விதமாக வந்திருக்கின்றன. உலகம் அழியப்போகிறது என்ற வதந்தி 2003ம் ஆண்டு, 2004ம் ஆண்டில் கூட வந்திருக்கின்றன எனத் தெரிவித்துள்ளதோடு,
எந்த ஒரு அழிவோ மாற்றமோ டிசம்பர் 21ம் திகதி இடம்பெறப்போவதில்லை. அது மற்றைய நாட்களைப் போல சாதாரண நாட்களே எனத் தெரிவித்துள்ளது. கிரகங்கள் பூமியை நோக்கி வருகின்றன. எரிகற்கள் விழப்போகின்றன என்பதெல்லாம் கட்டுக்கதை.

எங்களிலும் பலர் இந்தக் கதைகளை நம்பி, இனி எதற்குப் பணம் பொருள் என்று கடணட்டையிலும், வங்கிக்கடனிலிமிருந்து பணம்; பெற்று வீணாய் செலவழித்தால் டிசம்பர் 22ம் திகதியிலிருந்து அவற்றைக் திருப்பிச் செலுத்துவதற்குரிய வழியையும் தயார் படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் டிசம்பர் 21ம் திகதியில் உலகில் ஒன்றுமே மாறப்போவதில்லை.

Thursday 6 December 2012

தனது மோசமான தவறுகளில் இருந்து ஐ.நாவால் பாடம் கற்க முடியுமா? – பிரித்தானிய ஊடகம்





பூகோள ரீதியான சட்ட அதிகாரத்தை ஐ.நா தனது கைகளில் எடுக்காவிட்டால் போர்க்குற்றவாளிகளின் பெருங் கூட்டத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று eruditiononline.co.uk இணையத்தில் Alex Longley எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.


இந்தக் கட்டுரையை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டம் தொடர்பான ஐ.நாவின் நடவடிக்கைகளை உள்ளடக்கிய உள்ளக அறிக்கை கடந்த நவம்பர் மாத ஆரம்பத்தில்,வெளியிடப்பட்டது. போரில் அகப்பட்டுத் தவித்த பொதுமக்களை ஐ.நா காப்பாற்றத் தவறியுள்ளதாகவும் இந்த அறிக்கையில் குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கான தனிநாடொன்றை அமைப்பதை நோக்காகக் கொண்டு கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ்ப் புலிகள் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். 25 ஆண்டுகால யுத்தத்தில் 100,000 வரையான மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. இறுதிக் கட்ட யுத்தத்தில் 50,000 இற்கும்மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என பல்வேறு கணிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன.

சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தில் பங்கு கொண்ட இரு தரப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்ட மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் மனிதஉரிமை அமைப்புக்கள் பல சுட்டிக்காட்டியுள்ளன.
சிறிலங்கா அரசாங்கப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளால் மனித கேடயங்களாக பொதுமக்கள் பயன்படுத்தப்பட்டமை ஆகிய இரு மனிதகுலத்துக்கு எதிரான முதன்மையான குற்றங்களாக காணப்படுவதாக அனைத்துலக மன்னிப்புச் சபை மற்றும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் ஆகிய இரண்டும் தமது அறிக்கைகளில் சுட்டிக்காட்டியிருந்தன.

ஐக்கிய நாடுகள் சபை இவ்வாறான மிகக் கொடுமையான துன்பியல் சம்பவங்களை நிறுத்த தவறிவிட்ட அதேவேளை, இவ்வாறான நடவடிக்கைகள் போர்ச் சட்டத்தை மீறி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யுத்தத்தில் பங்கு கொண்ட இரு தரப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்ட முதன்மையான மீறல்களை அனைத்துலகின் பார்வைக்கு கொண்டு செல்லும் நோக்கில் சனல் 04 தொலைக்காட்சி
‘சிறிலங்காவின் கொலைக் களங்கள்’ எனும் தலைப்பில் கானொளி ஆவணம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டிருந்தது. இதில் ‘பாதுகாப்பு வலயங்களில்’ தஞ்சம் புகுந்த மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்கள் தொடர்பான ஆதாரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவில் யுத்த வலயத்தில் அகப்பட்டுத் தவித்த பொதுமக்களை ஐ.நா பாதுகாக்கத் தவறியமையானது மிகப் பெரிய குற்றச்சாட்டாக அனைத்துலக
மனிதஉரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ள போதிலும், இதற்கான பதில் இன்னமும் வழங்கப்படவில்லை.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் சாசனங்களை ஏற்றுக் கொண்ட நாடுகளில் சிறிலங்கா உள்ளடங்கவில்லை. இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தாலும், புலிகளாலும் இழைக்கப்பட்ட மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அனைத்துலக நீதிமன்றில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதன் மூலமே உண்மையான குற்றவாளிகளை இனங்காண முடியும். இந்த விடயத்துக்கு, ஐ.நா அறிக்கையில் மிகக் குறைந்தளவு முக்கியத்துவமே அளிக்கப்பட்டுள்ளது.

தான் விட்ட தவறுகளைக் கற்றுக் கொண்டு, தனது நடவடிக்கைகளை முன்னேற்றி, எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக் கூடிய ஆற்றலை வலுப்படுத்துவதற்கான குறியீடாக உள்ள ஐக்கிய நாடுகள் சபையானது இதற்குப் பதிலாககுற்றச்சாட்டிலிருந்து தன்னை விடுவிப்பதற்கான உடனடி செயற்பாடுகளில் ஈடுபடுகிறது.

சிறிலங்காவில் இடம்பெற்றது போன்று மிக மோசமான நிலைமையை சீர்செய்வதென்பது சாத்தியப்படற்ற விடயமாக இருக்கும் எனவும், இது தொடர்பில் ஐ.நா சங்கடமான நிலையை எதிர்நோக்குவதாகவும் ஐ.நாவின் முன்னாள் மனிதாபிமான விவகாரச் செயலர் ஜோன் ஹோல்ம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், ஐ.நா உள்ளக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா அரசாங்கம் வழமைபோல் ஏற்க மறுத்துள்ளதானது முட்டாள்தனமான செயலாகும்.

சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் உள்ளக ஆய்வறிக்கையானது எதிர்பார்த்ததை விட மிகக் குறைந்தளவான விடயங்களையே சுட்டிக்காட்டியுள்ளது.

மோதல் இடம்பெறும்இடங்களில் மோதல் தவிர்ப்பை மேற்கொண்டு பாதிக்கப்படும் மக்களுக்கு நம்பிக்கையை வழங்க வேண்டிய ஐக்கிய நாடுகள் சபை, தனது அறிக்கையில், சிறிலங்காவில் மக்கள் கொல்லப்பட்டமை உள்ளடங்கலாக இடம்பெற்ற பல்வேறு மீறல் சம்பவங்களை முதன்மைப்படுத்தி பொறுப்பளிக்க வேண்டிய தனது கடப்பாட்டிலிருந்து தவறியுள்ளது என்பதை இந்த அறிக்கையின் மூலம் அறியலாம்.

மோதலில் சிக்குண்ட மக்களை ஐக்கிய நாடுகள் சபை காப்பாற்றத் தவறியதோடு மட்டுமல்லாது, சிறிலங்காவில் ஐ.நாவின் செயற்பாடுகள் திட்டமிட்ட ரீதியில் எவ்வாறான தவறுகளை இழைத்துள்ளது என்பதையும் இந்த அறிக்கையின் ஊடாக சுட்டிக்காட்டப்படுகிறது.

எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாது தவிர்ப்பதற்கு, தற்போது உலகின் பல பகுதிகளிலும் வெளித்தெரியாது இடம்பெறும் மோதல்களை அனைத்துலகின் கவனத்திற்கு கொண்டு சென்று, இந்த மோதல்களில் மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்களை மிகப் பயனுள்ள வகையில் வெளிப்படுத்தி அவற்றை முதன்மைப்படுத்தி, எதிர்கொள்வதற்கான வழிவகைகளை ஐ.நா ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

தற்போது சிரியாவிலும், கொங்கோ ஜனநாயகக் குடியரசு போன்ற நாடுகளில் தொடரப்படும் மோதல்களை தடுப்பதற்கு, கடந்த காலத்தில் ஐ.நா தான் தவறிழைத்த மோதல்கள் தொடர்பில் பாடங்களைக் கற்றுக் கொள்வதற்கான முறைமை ஒன்றை வரையறுக்க வேண்டும். ஐ.நா நடைமுறை சார்ந்த மற்றும் தனது மூலோபாய மட்டத்தில் எவ்வாறான குறைகள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகளை ஆராய்ந்து கொள்வது மிகமுக்கியமானதாகும். இது இந்த நிறுவனத்தின் கொள்திறனை மேம்படுத்துவதில் செல்வாக்குச் செலுத்தும்.

ஐக்கிய நாடுகள் சபையானது தனது கடப்பாட்டை மேற்கொள்ளத் தவறிய குறிப்பிடத்தக்க சில மோதல்களில் சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரும் ஒன்றாகும். இவ்வாறான தவறுகள் எதிர்காலத்தில் இடம்பெறாது தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை தன்னிச்சையாக செயற்படுவதை தடுப்பதில் இதன் அதிகாரம் மிக்க உறுப்புநாடுகள் அதிக செல்வாக்கைச் செலுத்துகின்றன.

இராணுவம் இல்லாமல் ஐ.நா இவ்வாறான அட்டூழியங்களை தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரத்தைக் கொண்டிருக்காது. இதேபோன்று, பூகோள ரீதியான சட்ட அதிகாரத்தை ஐ.நா தனது கைகளில் எடுக்காவிட்டால் போர்க் குற்றவாளிகளின் கூட்டத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

ஒருபுறம் பொதுமக்களைப் பாதுகாக்கின்ற கடப்பாட்டை ஐ.நா தனது ஆணையாகக் கொண்டிருக்கும் அதேவேளையில், இந்தப் பூமியில் வாழும் ஒவ்வொருவரையும் பாதுகாப்பதென்பது நடைமுறையில் சாத்தியமற்றதாகும்.

இருந்தும் ஐ.நா, மக்கள் இழப்புக்களைத் தடுப்பதில் தன்னால் முடியுமானளவு செயற்படுவதுடன், பெருமளவான இழப்புக்கள் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய நிலைப்பாட்டின் படி, அதன் நடைமுறையிலுள்ள முறைமையின் கீழ் நான்கு மாதங்களில் கொல்லப்பட்ட 40,000 மக்களின் உயிர்களைக் கூடக் காப்பாற்ற முடியவில்லை என்பதே ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.

Wednesday 5 December 2012

தமிழரின் தேசியத்தையும் தாயகத்தையும் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்குமாறு கோரி தமிழ் அரசியல் மற்றும் குடியியல் சமூகத்தினர் சர்வதேச சமூகத்தை கோரியுள்ளனர்.


தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், அவர்களது அரசியல் செயற்பாட்டை மேற்கொள்வதற்கான சூழலை ஏற்படுத்து வதற்கும், தமிழ் பிரதேசங்களில் ஜனநாயக உரிமைகளை பிரயோகிப் பதற்கான சூழலை உருவாக்குவதற்கும் தமிழரின் தேசியத்தையும் தாயகத்தையும் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்குமாறு கோரி தமிழ் அரசியல் மற்றும் குடியியல் சமூகத்தினர் சர்வதேச சமூகத்தை கோரியுள்ளனர்.


இது தொடர்பான விரிவான மனு ஒன்றில் இலங்கையின் வடகிழக்கில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமயதலைவர்கள், அரசியல் மற்றும் குடியியல் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கையொப்பம் இட்டு ஐ.நா. உட்பட சர்வதேச சமூகத்திற்கு அனுப்பட்டுள்ளது.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயத்தினை இங்கே முழுமையாக தருகிறது.

தமிழ் அரசியல் மற்றும் குடியியல் சமூகத்தினராகிய நாம் அண்மைக் காலமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாண சமூகத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறைகள் தொடர்பில் தங்களது கவனத்தை ஈர்ப்பதற்காக இம்மகஜரை அனுப்பி வைக்கிறோம்.

மே 2009 இதற்க பின்னரான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ சமூகத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறைகளின் சுருக்க பட்டியல் பின்வருமாறு
  1. ஓக்டோபர் 2011இல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அப்போதைய தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் இராணுவ புலனாய்வு பிரிவினரால் பல்கலைக்கழக சுற்றாடலிலிருந்து 500மீற்றருக்கு உட்பட்ட சனநாடமாட்டமுள்ள பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டார்.
  2. 18மே 2012 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்பிலான வைபவம் ஒன்றை பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதனை குழப்புவதற்காக யாழ் பல்கலைக்கழக சுற்றாடலிலிருந்து 200மீற்றருக்கு உட்பட சனநடமாட்டம் உள்ள பிரதேசத்தில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் தாக்கப்பட்டார்.
  3. 27.11.2012 அன்று 75க்கும் மேற்பட்ட இராணுவ சீருடை அணிந்த இராணுவத்தினரும் 50க்கும் மேற்பட்ட சீருடை அணியாத புலனாய்வு பிரிவினரும் யாழ் பல்கலைக்கழக ஆண் பெண் விடுதிகளுக்குள் புகுந்து குறிப்பாக பெண்கள் விடுதியில் மிகவும் மூர்க்கத்தனமாக நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததோடு மாணவிகளையும் மீக மோசமான முறையில் அச்சுறுத்தியிருக்கிறார்கள்.
  4. 28.11.2012 அன்று 27ஆம் திகதி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக அமைதியான முறையில் பல்கலைக்கழக முன்றலில் அமைதிப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது ஆயுதம் தரித்த பொலிஸாரும் இராணுவத்தினரும் மாணவர்களை தாக்கினர்.
  5. 29.11.2012 மற்றும் 30.11.2012 அன்று யாழ். பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் ஒரு வாரத்திற்கு முன்பதாக அமைக்கப்பட்ட இராணுவ ஒட்டுக் குழுவான சிறிரெலோ அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியமை என்ற பொய் குற்றச்சாட்டின் போரில் பல்கலைக்கழக மாணவர்களான கனகசுந்தரசாமி ஜனமேஜெயந்த், சண்முகம் சொலமன், கணேசமூர்த்தி சுதர்சன், பரமலிங்கம் தர்சானந்த் ஆகியோரை பயங்கரவாத தடுப்ப விசாரணைப்பிரிவினர் கைது செய்து வவுனியாவில் இம்மகஜர் எழுதப்படும் வரை தடுத்து வைத்துள்ளனர். மேலும் பல பல்கலைக்கழக மாணவர்களையும் கடந்த காலங்களில் மாணவர் ஒன்றியங்களில் உறுப்பினர்களாக இருந்து தமது பல்கலைக்கழக கல்வியை பூர்த்தி செய்து வெளியேறியுள்ள பழைய மாணவர்கள் பலரையும் கைது செய்வதற்காக பொலிஸார் தேடி வருகின்றனர்.
  6. 28.11.2012 க்குப் பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தை சென்றடைவதற்கான பிரதான வீதியான இராமநாதன் வீதியின் இரு மருங்கிலும் வீதித் தடைகள் அமைக்கப்பட்டு 50க்கு மேற்பட்ட முகமூடி அணிந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் நிலைகொண்டுள்ளனர். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் உட்பட பல்கலைக்கழக சமூகத்தினர் பொலிஸாரால் எழுந்தமான முறையில் பதிவ செய்யப்பட்ட பின்னரே பல்கலைக்கழகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.
குறிப்பு
பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பல்கலைக்கழகத்திற்கு வெளியிலும் உள்ளும் இராணுவ புலனாய்வு பிரிவினர் தொலைபேசியிலும் நேரடியாகவும் தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகதித்து வருகின்றனர். மேற்படி பட்டியல் பிரதான சம்பங்களை நிரல்படுத்துகின்றதே அன்றிn தினமும் மாணவத்தலைவர்களுக்கும் பல்கலைக்கழக சமூகத்தினருக்கும் அரச இயந்திரத்தால் கொடுக்கப்படும் நெருக்களை முழுமையாக பட்டியற்படுத்தப்படவில்லை. குறிப்பாக பல்கலைக்கழக ஆசிரிய சமூகத்திற்கு எதிராகவும் பல்கலைக்கழக சுயாதீனத்திற்கு எதிராகவும் அரச இயந்திரத்தால் தொடர்ச்சியாக விடுக்கப்படும் சவால்களை பற்றி நாம் இங்கு நீட்சி கருதி குறிப்பிடாது தவிர்த்துள்ளோம்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகமானது தமிழ் தேசிய உரிமைப் போராட்டத்திற்கு அதன் ஆரம்ப காலப் பகுதியிலிருந்தே மிகத் காத்திரமான பங்களிப்பை நல்கி வந்திருக்கிறது. தமிழ் தேசிய அரசியலை வழிப்படுத்துவதில் புமைத்துவ பங்களிப்பையம் செயல்சார் பங்களிப்பையும் யாழ் பல்கலைக்கழக ஆசியர் மற்றும் மாணவ சமூகம் தொடர்ச்சியாக வழங்கி வந்துள்ளது.

இத்தகைய பங்களிப்பை இல்லாமல் செய்யும் நோக்கில் காலத்திற்கு காலம் அரச இயந்திரம் முயற்சி செய்து வந்துள்ளது. அதன் அங்கமாகவே போருக்கு பின்னரான சூழலில் தொடர்ச்சியாக இச் சமூகத்திற்கு எதிராக தொடுக்கப்படும் வன்முறைகள் நோக்கப்பட வேண்டும்

போருக்கு பின்னரான சூழலில் தொடரும் சனநாயக மறுப்பாக இவ்வன்முறைகளும் அச்சுறுத்தல்களம் பார்க்கப்படுவதற்கு அப்பால் தமிழ் தேசிய இருப்பைத் தொடர்ச்சியாக ஆழிக்கும் செயற்திட்டத்தின் ஒர் அங்கமாகவே அமைகின்றன.
இறந்தவர்களை நினைவு கூருவதற்கான உரிமை, பேச்சுஉரிமை, ஒன்று கூடுவதற்கான உரிமை போன்ற உரிமைகள் மறுக்கப்பவதற்கு இச்சம்பவங்கள் உதாரணமாக இருக்கின்றன என்பதோடு தமிழர்கள் தனித்துவமான அரசியல் முன்னெடுப்பை இல்லாமல் செய்யும் நோக்கிலேயே அரச இயந்திரம் யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் செயற்பட்டு வருகிறது என நாம் கருகிறோம். இதனை சர்வதேச சமூகம் விளங்கி கொள்ள வேண்டும்.
இலங்கை தொடர்பாக இன்றைவரை சர்வதேச சமூகம் எடுத்துள்ள நிலைப்பாடானது தமிழர் தாயகத்தில் வாழும் மக்களுடைய வாழ்வில் எத்தகைய காத்திரமான பங்களிப்பையும் செய்யவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். யுத்தத்தின் போது தமிழர்கள் அழிக்கப்படுவதை பார்த்திருந்த சர்வதேச சமூகம் தற்போதும் எமது தேசத்திற்கு எதிரான கொடுமைகளை பார்த்து வாளாதிருப்பது சர்வதேச சமூகத்தின் மீதான நம்பத்தன்மையை மேலும் பாதிப்பதாக இருக்கிறது.
தமிழ் அரசியல் மற்றும் குடியியல் சமூகம்

Sunday 2 December 2012

உலகத் தமிழர்களை ஏக்கங் கொள்ளவைத்த ஐ.நாவில் பலஸ்தீனத்திற்கான அங்கீகாரம்


 ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பலஸ்த்தீனம் பார்வையாளர் என்ற அங்கீரத்தினை பெற்றிருப்பதானது பலஸ்தீன உரிமைப் போராட்டத்திற்கு கிடைத்திருக்கின்ற முக்கியதொரு உலக அங்கீகாரம் தமிழீழ போராட்டத்திற்கு எப்போது ஓர் உலக அங்கீகாரம் கிடைக்கும் என்ற ஏக்கம் உலகத் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


இந்த ஏக்கத்தினை தாகமாக கொண்டு ஓர் அரசுக்குரிய இனம் ஈழத் தமிழினம் என்ற நிலைபாட்டினை சர்வதேசத்திற்கு வலியுறுத்தும் பொருட்டு பிரித்தானிய மண்ணில் கூடியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வினை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

சரியாக 65 ஆண்டுகளுக்கு முன்னர், 29-11- 1947 இல் பலஸ்தீன மண்ணை கூறுபோட்டு இரு நாடுகளாகப் பிரித்து ஐநா தீர்மானம் நிறைவேற்றி யூதர்களுக்கான ஓர் தேசமாக இஸ்ரேலை ஒரு தனி நாடாக்கியிருந்தது.
இந்நிலையில் தற்போது ஐ.நா பொதுச்சபையில், 138 நாடுகளின் ஆதரவுடன் வாக்களிக்கும் உரிமையினை இந்த அங்கீகாரம் வழங்காவிட்டாலும் ஒர் அரசுக்குரிய அங்கீகாரத்துடன் பார்வையாளர் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமையானது முழு அங்கீரத்திற்கான ஓர் திறவுகோலாக அமைந்துள்ளது.

நிலையானதொரு சர்வதேச அங்கீகாரமே ஒவ்வொரு இனவிடுதலைப் போராடத்திற்கும் உள்ள நிலையில் தமிழீழத் தாயக நிலப்பரப்பில் தமிழர் தரப்பினால் நிறுவப்பட்டிருந்த நிகழ்வுபூர்வமான நடைமுறைத் தமிழீழ அரசிற்கா ஓர் சர்வதேச அங்கீகாரத்தினை ஈழத் தமிழினம் மட்டுமல்ல உலகத் தமிழினமே அன்று உலக சமூகத்திடம் கோரியிருந்தது.

ஆனால் சர்வதேச நலன்சார் அரசியலை தன்னுடைய நிகழ்ச்சி நிரலுக்குள் பொருத்திக் கொண்ட சிங்கள அரசு தமிழர்கள் அமைத்துக் கொண்ட நிகழ்வுபூர்வமான அரசினை பெரும் இனவழிப்பின் ஊடாக 2009 ஆண்டில் அழித்துக் கொண்டது.

இலங்கைதீவில் சிறிலங்கா – தமிழீழம் என்ற நிலைப்பாட்டினை புறந்தள்ளி இலங்கைத்தீவு முழுவதுமே சிங்கள அரசின் ஆளுகைக்குள் அது ஆட்கொண்டுள்ளது.

நோர்வேயினை நடுநிலையாளர்களாக கொண்டு சிறிலங்கா அரசுக்கும் – தமிழர் தரப்புக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டிருந்த சமாதான உடன்படிக்கையானது நிறுவப்பட்டிருந்த நடைமுறை தமிழீழ அரசுக்கு கிடைத்த அரைநிலை சர்வதேச அங்கீகாரமாகவே இருந்தது.
இந்த அரைநிலை அங்கீகாரம் நாளை முழு அங்கீகாரமாக மாறும் போது இலங்கைத் தீவு முழுவதுமே சிங்களத்திற்கென்ற நிலைப்பாடு தகர்த்தெறியப்பட்டு விடும் என்ற அச்சத்திலேயே பெரும் இனவழிப்பு போரொன்றினை சிங்கள அரசு முன்னெடுத்திருந்நது.

தமிழீழத் தாயகப் பரப்பில் நிறுவப்பட்டிருந்த தமிழீழ அரசினை அழிப்பதன் ஊடாக இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான அரசியல் வெளியினை இல்லாதொழிப்பதோடு அவர்களின் தமிழீழ அரசெனும் சுதந்தித தாகத்தினை புதைத்து விடலாம் என சிங்கள பேரினவாதம் எண்ணியிருந்தது.
முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ தனியரசென்ற உலகத் தமிழர்களின் பெருவிருப்பினை புதைத்து விட்டதாக சிங்களம் எண்ணியிருந்த வேளையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோற்றம் பெற்றது.

இது சிங்கள அரசின் தலையில் பெருமடியாக வந்து விழுந்தது.
இந்நிலையில்தான் இன்று சர்வதேசம் போதிக்கின்ற சனநாயகம் என்ற அதன் போக்கிலேயே சனநாயகபூர்வமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை தமிழர் தரப்பு நிறுவியுள்ளது.

சர்வதேசத்திடம் பயங்கரவாத பூச்சாண்டி காட்டி தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை கொச்சைப்படுத்தி அதற்கான பல சர்வேதேச தடைகளை சிங்களம் நிறைவேற்றியிருந்தது.

ஆனால் இன்று சனநாயகபூர்வமாக நிறுவப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது சர்வதேச தடைகளை கொண்டுவருவதற்கு சிங்கள அரசு வழியின்றி தவித்து நிற்பதோடு தென்னாசிய வட்டகையினை வட்டமிட்டு வரும் நலன்சார் சர்வதேச அரசியல், பொருளாதார, வர்த்தக நிலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான ஒர் அங்கீகாரத்தினை வழங்கி விடுமோ என்ற அச்சமே சிங்கள ஆட்சியாளர்களை ஆட்டிப்படைக்கின்றது.

இத்தகைய விடயங்களோடு சர்வதேசத்தின் அங்கீகாரம் என்பது முக்கியமானதொரு விடயமாகவுள்ள நிலையில் தற்போது ஐ.நா பொதுச்சபையில் பலஸ்தீனத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரமானது
நிச்சயமாக நாளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு கிடைக்கும் என்பது உறுதி.

இந்த அங்கீகாரமே தமிழீழத் தாயகத்தில் நிலையான தமிழீழத் தனியரசினை அமைத்துக் கொள்வதற்கான ஒர் திறவுகோலாக அமையும் என்பது உறுதி.