Sunday 10 February 2013

புலம்பெயர் தமிழர்கள் நடவடிக்கை முக்கியமானது - மாவை


சர்வதேச நாடுகளை அனுசரித்து இந்த இராஜதந்திரப் போரில் தமிழ்த் தலைவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட்டு வெற்றிபெற வேண்டும். அல்லது அணிதிரண்டுவரும் சர்வதேச நாடுகள் விரக்தியடைந்துவிட நேரும்.
குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்த இராஜதந்திர நடவடிக்கையில் செயலாற்றி வருவது முக்கியமானதொன்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

சிவராம் நினைவுப் பணிமன்றம் ஏற்பாடு செய்த ஐந்தாவது நினைவுக் கருத்தரங்கு சுவிஸ் சூரிச் மாநகரில் நேற்று சனி மாலை இடம்பெற்றது.
ஊடகவியலாளர் கனகரவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கலந்து கொண்டு இனப்பிரச்சினையும் சமகால அரசியலும் என்ற தலைப்பில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் இன்றும் பத்திரிகைச் சுதந்திரம் அற்ற சூழலில் இனப் பற்றோடு, விடுதலை உணர்வுகளோடு உழைத்துவரும் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல நீதி நியாயாத்திற்காகக் குரல் கொடுத்து வரும் சிங்கள ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் வருகின்றனர்.
அரசின் சர்வாதிகார, இனவாத ஆட்சியினால் அச்சுறுத்தலுக்கு உள்ளான ஊடகவியலாளர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் கோரியுள்ளனர்.

அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட ஊடகவிலாளர்கள்; குறிப்பாக சிவராம் அவர்களுக்கும் என் இதயபூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை மண்ணில் களப்பலியாகிவிட்ட எம் உறவுகளுக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது இதயபூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று உலக அரசியல் அரங்கில் இலங்கைத் தமிழர் பிரச்சினை முக்கிய அங்கம் வகித்து வருவதை அறிவோம்.

உலக வல்லாண்மை நாடுகள் உலகின் பல நாடுகளின் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு நடவடிக்கையில் ஈடுபடுகையில் இந்துமா சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கைப் பிரச்சினையிலும் ஒரு தீர்வு ஏற்பட வேண்டுமென ஈடுபாடுகொண்டு அரசியல், இராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்துவரும்போது நாமும் இராஜதந்திரத்துடன் நடந்து கொள்வது அவசியமானதாகும்.

இலங்கையில் தமிழ், முஸ்லிம் மக்களின் விடுதலைக்கும், சுதந்திர ஆளுகைக்குமாய் குறிப்பாக கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலான ஜனநாயக அறவழிப் போராட்டங்களும், ஆயுதப் போராட்டங்களும் தமிழ் மக்களின் விடுதலை எனும் கொள்கை மீதான திடசங்கற்பமுமே சர்வதேசத்தில் இன்று ஏற்பட்டுவரும் இராஜதந்திர நடவடிக்கைகளுக்குக் காரணம் ஆகும்.

இச்சந்தர்ப்பத்தை நாம் இழந்துவிடக் கூடாது. சர்வதேச நாடுகளை அனுசரித்து இந்த இராஜதந்திரப் போரில் தமிழ்த் தலைவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட்டு வெற்றிபெற வேண்டும்.

அல்லது அணிதிரண்டுவரும் சர்வதேச நாடுகள் விரக்தியடைந்துவிட நேரும். குறிப்பாக புலம்பெயர்நத தமிழர்கள் இந்த இராஜதந்திர நடவடிக்கையில் செயலாற்றி வருவது முக்கியமானதொன்றாகும்.

மேலும் புலத்திலும், களத்திலும் புரிந்துணர்வுடன் ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தி நிற்கின்றேன். அதற்கான அர்த்தமுள்ள பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றோம்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் கொள்கை, இலட்சியப் பற்றுடனான செயற்பாடுகள் இலங்கையில் ஒரு சிறந்த அரசியல்தீர்வை, தமிழர் தாயகத்தில் தமிழர் ஆட்சியை நிலைநாட்டுவதற்கு பேருதவியாய் அமையும் என்பதைக் கூறவேண்டும்.

No comments:

Post a Comment