Saturday 16 February 2013

தொடரும் ஊடக அடக்குமுறை; சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது துப்பாக்கிச் சூடு


சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் பாரூக் சவுகத்தலி என்பவரின்  மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.

பாரூக்கின் வீட்டுக்குள் பிரவேசித்த மூன்று இனந்தெரியாத நபர்கள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பாரூக், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கழுத்துப் பகுதியில் துப்பாக்கிச் சன்னம் பாய்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், உயிராபத்து எதுவும் கிடையாது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடி விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீதான துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஊடகவியலாளர் பரான் சவுகரலி மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணையை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மாஅதிபருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தெஹிவளை மவுன்லெவனியா வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்றிரவு இரவு துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான பரான் சவுகரலி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர் தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

சண்டேலீடர் பத்திரிகை கடந்த காலங்களில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துவந்த ஒரு புலனாய்வுச் செய்தி இதழ்.

புலனாய்வுச் செய்திகளை எழுதிவந்த சௌக்கத் அலி தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று ஏற்கனவே தெரிவித்திருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கடந்த ஒரு தசாப்த காலத்தில் இலங்கையில் பல ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் எந்தவொரு படுகொலை தொடர்பிலும் நீதி விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்படவில்லை என்கின்ற விமர்சனங்கள் தொடர்ந்தும் இருந்த வண்ணம் உள்ளன.

No comments:

Post a Comment