Thursday, 28 February 2013

நியூயோர்கில் இருந்து சீனாவுக்கு இரண்டு மணி நேரத்தில் போகலாம் மாட்டுவண்டியில் இருந்து ராக்கட் வரை போக்குவரத்தில் முன்னேறிவிட்ட மனிதன் இனி மின்னலோடு போட்டியிட்டு பயணிக்கத் தயாராகிறான்..
பறவையை கண்டான் விமானம் படைத்தான்..

பாயும் மீன்களில் படகினைக் கண்டான்..

எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான் என்ற திரைப்படப் பாடலைப்பாடிய கவிஞர் இப்போதிருந்தால் மின்னலை கண்டான் ஈ.ரி-3 போக்குவரத்தைப் படைத்தான் என்று எழுதியிருப்பார்.

ஈ.ரி.-3 என்றால் என்ன..?

வெற்றிடமான ரியூப் மூலம் காற்றால் உவிந்திழுத்து பயணம் செய்யும் புதுவகைத் தொழில் நுட்பமாகும் (Evacauted tube transport technologies)
எப்படி..?

பிரதான வீதிகளுக்கு அருகாமையில் தரையில் இருந்து ஐந்து மீட்டர் உயரத்தில் அகலமான தூண்கள் அமைக்கப்பட்டு அவற்றின் மேல் இந்தப் போக்குவரத்துக் குழாய்கள் பல நூறு கி.மீற்றர்களுக்கு தொடுத்துச் செல்லப்படும்.

மிகக் குறைந்த விலையில் அமைக்கப்படும் இந்த ரியூப்களுக்குள் கப்சல் என்ற பெயர் கொண்ட ஆறுபேர் இருக்கக் கூடிய 1.5 மீட்டர் விட்டமுடைய உல்லாசமான குடுவைகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக வரும்.


ஆறுபேர் இருக்கும் இதனுடைய நிறை 183 கிலோ, பயணிகளுடன் உச்ச நிறை 367 கிலோ. (இதை 1910 லேயே வரைந்தவர் அமெரிக்க பொறியியலாளர் றொபேட் கோட்றாட் என்று விக்கிபீடியா கூறுகிறது)

இவற்றை காற்றின் மூலம் உறிஞ்சி இழுக்கும்போது மணிக்கு 600 கி.மீ வேகத்தில் உரிய இடத்திற்கு போய்ச் சேரும்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் இருந்து வோஷிங்டனுக்கு பறக்கும் நேரம் வெறும் அரைமணி மட்டுமே.

கனவேகத்தில் பயணிக்கும்போது உண்டாகும் வேகமான காற்று நுழைவு, தூசி போன்றவற்றால் இதற்குள் இருக்கும் பயணிகளுக்கு பாதிப்பு கிடையாது.
மக்னற்றிக் ட்றைவ் கப்சில் என்று குறியிட்டு அழைக்கப்படும் இந்தப் போக்குவரத்து முறையை சீனாவுடன் இணைந்து அமெரிக்கரான ட்றயல் ஒய்ஸ்ரியஸ் என்பவர் அமைத்து வருகிறார்.

ஓட ஆரம்பித்த 17 செக்கன்களில் 600 கி.மீ வேகத்தில் ஓட ஆரம்பித்துவிடும், ஆனால் வருங்காலத்தில் இதை 6500 கி.மீ மணிக்கு என்ற வேகத்தில் ஓடும்படியாக விருத்தி செய்யலாம்.

நாம் வீட்டில் பாவிக்கும் காற்றில் தூசை இழுக்கும் இயந்திரம் குழாய்வழியாக குப்பையை உவிந்து பையில் போடுவதை நினைத்தால் இந்த வேலைத்திட்ட வடிவமைப்பின் தாற்பரியத்தை எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.
பல்லாயிரம் கி.மீ நீளமான ரியூப் வழியாக பல நூறு குடுவைகள் ஒன்றன் பின் ஒன்றாக பயணிக்க ஆரம்பிக்கும், இழுப்பது காற்று.


இதை உருவாக்கும் அமெரிக்கரான ட்றயல் ஒய்ஸ்ரியஸ் இதுபற்றிக் கூறும்போது, இது முற்று முழுதாக கணினி மூலம் இயங்கும் ஒரு போக்குவரத்து சேவையாக இருக்கும்.

சுமார் 32 தடங்கள் இருக்கும் பிரமாண்டமான சாலையில் போக்குவரத்து நடப்பது போல இதன் மூலம் எதிர்கால மனிதன் பயணத்தை செய்ய முடியும்.
இணையம் மூலம் டிக்கட்டுக்களை பதிவு செய்து வந்தால் குடுவைகள் நிலத்தடி ரயில்போல வரும் நீங்கள் ஏறி அமர வேண்டியதுதான்.
பச்சை, சிவப்பு, மஞ்சள், நீலமென பல்வேறு நிறங்களில் இவை உருவாக்கப்பட்டிருக்கும்.

இயற்கைக் காட்சிகளை பார்க்காது மேற்கொள்ளும் இந்தப் பயணத்திற்கு வர முதலில் மக்கள் தயங்குவார்கள் என்பதால் ஒவ்வொரு பயண வாகனத்திலும் தொலைக்காட்சி பெட்டிகள், கணினி விளையாட்டுக்கள் இணைக்கப்பட்டிருக்கும்.

இப்பயணத்தில் விபத்து வருவது மிகவும் குறைவாகவே இருக்கும், அப்படி வந்தால் இதன் கதவுகளை திறந்துவிடுவதற்கு விமானத்தின் கதவுகளை திறப்பது போன்ற விசேட பணிகள் நடைபெற்றால் போதுமானது.

முதற்கட்டமாக அமெரிக்காவின் பெரு நகரங்களுக்கிடையில் நடைபெறும் இந்தப் போக்குவரத்து படிப்படியாக விஸ்த்தரிக்கப்பட்டு உலகின் மற்றைய நாடுகளிலும் கால் பதிக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் சமுத்திரங்களின் மேலாக அமைக்கப்படும் இந்தக் குழாய்கள் பிரிந்துகிடக்கும் கண்டங்களை எல்லாம் வலைப்பின்னலாக இணைத்துவிடும்.

கண்டங்களுக்கிடையில் பாலங்களை அமைப்பதைவிட இதற்கான செலவு மிகவும் குறைவானது, பாவிக்கப்படும் சக்தி கூட 80 வீதம் மீளப்பாவிக்கக் கூடியதாக இருக்கும் என்றார்.

வருங்காலத்தில் நோர்வே ஒஸ்லோவில் இருந்து புறப்படும் ரியூப் வழி ஓடும் குடுவை வடிவிலான வாகனம் அவுஸ்திரேலியாவின் மெல்பேண் நகரை 18 மணித்தியாலத்தில் தொட்டுவிடும்.

எதிர்காலத்தில் நியூயோர்கில் இருந்து சீனாவுக்கு இரண்டு மணி நேரத்தில் போகலாம்..

விமானத்தைவிட அரைப்பங்கு நேரத்தில் இதன் பயணம் முடிந்துவிடும்.
இதில் நீங்களும் பயணிக்க வேண்டுமானால் ஒரேயொரு நிபந்தனை உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.

இ. மகேசன் ( நோர்வே )

No comments:

Post a Comment