Saturday 16 February 2013

முஸ்லிம்களின் புர்காவை இலங்கையில் தடை செய்ய வலியுறுத்து


முஸ்லிம் பெண்கள் தமது உடல் முழுதையும் மறைக்கும் வகையில் அணியும் புர்கா ஆடையானது கடவுச்சீட்டு விநியோகத்துக்கு பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்துதாகவும்  இதனால் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்க்காவை இலங்கையில் தடைசெய்ய வேண்டுமென்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் பெண்கள் தமது முகத்தை மறைக்கும் வகையில் அணியும் புர்க்காவை அகற்றுமாறு உள்ளூர் தனியார் வானொலி செய்திச்சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் சூலானந்த பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முன்னதாக குறித்த தனியார் வானொலி முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் எஸ்.எம்.எஸ். வாக்கெடுப்பொன்றையும் நடத்தியதாக தெரிகிறது.
இதில் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் புர்காவையோ அல்லது பர்தாவையோ அகற்றத் தயாரில்லை என தெரியவந்ததாகவும் அறியமுடிகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் சூலானந்த பெரேரா, இது தொடர்பில் ஆட்சேபனையுள்ளவர்கள் எந்தவொரு நேரத்திலும் தன்னைச் சந்திக்க முடியுமென தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த தனியார் வானொலியின் கருத்துக்கணிப்பின் போது, பொது பல சேனா புர்காவை கொள்ளையர்களின் ஆடையாக அடையாளப்படுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

எனினும் இதற்கு பதிலளித்துள்ள உலமா சபை குறித்த ஆடையானது தமது மதத்தில் உள்ளதென்றும் அதனை ஒருபோதும் அகற்ற முடியாது எனவும் தெளிவாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment