Sunday, 24 March 2013

கன்னி ராசி குருப்பெயர்ச்சிப் பலன்கள் (2013-2014)

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
 இதுவரை 9-ல் இருந்த குரு இப்போது 10-ல் மிதுனத்துக்கு  மாறியிருக்கிறார். பத்தாம் இடத்துக் குரு பதி குலையச் செய்யும்' என்பது பழமொழி. "ஈசனார் தலையோட்டிலே இரந்துண்டது பத்தில் குரு வந்தபோது' என்பது பாடல்.

அதனால் மிதுன குருப்பெயர்ச்சி பதியைக் குலைக்குமோ? தொழிலைக் கெடுக்குமா? பிச்சை எடுக்க வைக்குமோ என்றெல்லாம் எண்ணிக் கலங்காதீர்கள். நெருப்பு என்று சொன்னால் நாக்கு சுட்டு விடாது. தேன் இனிக்கும் என்று படித்தால் மட்டும் சுவை வராது.

கன்னி ராசிக்கு 4, 7-க்குடைய குரு கேந்திராதிபத்திய தோஷம் அடைவார். கன்னி ராசி உபய ராசி. அதற்கு 7-க்குடையவர் பாதகாதிபதி. எனவே சுபகிரகமாகிய குரு கேந்திரத்தில் இருப்பதும், பாதகாதிபதி ஆவதும் தோஷ நிவர்த்தியாகிறது. இது டபுள் நெகட்டிவ்- ஒரு பாசிட்டிவ் என்பதுபோல! ஆகவே பத்தாம் இடத்து தோஷம் விலகுவதால் பதியைக் குலைக்கும்- தொழிலைக் கெடுக்கும் என்று பயப்படத் தேவையில்லை.

10-ல் இருக்கும் குரு 5-ஆம் பார்வையாக 2-ஆம் இடத்தையும்; 7-ஆம் பார்வையாக 4-ஆம் இடத்தையும்; 9-ஆம் பார்வையாக 6-ஆம் இடத்தையும் பார்க்கிறார்.

2-ஆம் இடம் என்பது வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும். குரு வாக்கு காரகன், தன காரகன் என்பதால், குரு பார்வையால் உங்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் மேன்மையடையும். தனவரவுக்கும் பஞ்சம் இருக்காது. சரளமான பணப்புழக்கம் காணப்படும்.

ஏற்கெனவே கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக கன்னி ராசிக்கு ஏழரைச் சனி நடக்கிறது. பொருளாதார நெருக்கடியையும் பணப்பற்றாக் குறையையும் சந்தித்து, அதைச் சமாளிக்க கந்து வட்டி என்றும் ரன் வட்டி என்றும் மீட்டர் வட்டி என்றும் வாங்கி வாங்கி, யானை வாயில் போன கரும்புபோல, மீளமுடியாமல் தவிக்கிறீர்கள். இந்த குருப் பெயர்ச்சி முதலை உண்ட பாலகனை சுந்தரர் அவிநாசியில் மீட்டுத் தந்ததுபோல, உங்களை கடன் என்ற பேயிடம் இருந்து காப்பாற்றித் தருவார்.

இந்த ஏழரைச் சனியில் பிரிவு, பிளவைச் சந்தித்த கணவன்- மனைவி இனி ஒன்றுசேரும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை இருந்தும் அன்யோன்யம் இருந்தும் வேலை காரணமாக வெளிநாடு போனவர்கள், இனி சிறுமாற்றத்தைச் சந்திக்கக் கூடும். வெளி நாட்டிலேயே அந்த மாற்றம் ஏற்படலாம். அல்லது வெளிநாட்டு வேலை போதும் என்று முடிவெடுத்து உள்ளூரில் வந்து சொந்தத் தொழில் தொடங்கி செட்டில் ஆகிவிடலாம்.

மேற்படிப்பு படிக்க கடந்த ஆண்டுகளில் தடைகளைச் சந்தித்த மாணவர்கள், இனி மேல்படிப்பைத் தொடரலாம். அல்லது விட்டுப் போன "அரியர்ஸ்' சப்ஜெக்டை மீண்டும் எழுதி பாஸ் பண்ணலாம். குறிப்பாக ஆடிட்டிங் படிப்பவர்களுக்கு, இதற்கு முன்பிருந்த தடைகள் விலகிவிடும்.

அடுத்து குரு 4-ஆம் இடத்தை தன் வீட்டையே பார்க்கிறார். அதனால் சொந்த வீடு அல்லது பிளாட் அமையும் யோகமுண்டு. சிலருக்கு வாகன யோகம் அமையும். இந்த ஏழரைச் சனியில் அடிக்கடி வீடு மாறியவர்கள் இனி அசையாமல் நிலையாக குடியமர ஒரு இடம் கிடைத்துவிடும். அது சொந்த வீடாகவும் இருக்கும். அல்லது ஒத்தி வீடாகவும் இருக்கும்.

ஒரு அன்பர் மாடியில் குடியிருந்தார். வீட்டுச் சொந்தக்காரர் கீழே குடியிருந்தார். வீட்டுக்காரர் வேறு புதுபங்களா கட்டி குடிபோய் விட்டார். அப்போது மேலே மாடியில் குடியிருந்தவரை அதே வாடகையில் கீழ் வீட்டுக்குப் பாதுகாப்பாக மாறச்செய்து, மாடிக்கு மட்டும் புதுக்குடியை வைத்துவிட்டார். இதை பதி மாற்றம் என்று சொல்லலாம் அல்லவா!

மிதுன குரு 9-ஆம் பார்வையாக 6-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 6- என்பது கடன், சத்ரு, நோய், வைத்தியச் செலவு ஆகியவற்றைக் குறிக்கும் இடம்.

6-ஆம் இடமான கும்ப ராசிக்கு குரு 2, 11-க்குடையவர். 6-க்கு 5-ல் திரிகோணமாக நின்று 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால் கடன் வளரும்; போட்டி பொறாமை, வைத்தியச் செலவும் வரும்.

குரு 10-ல் நிற்பதால் தொழில் வகைக்காக கடன் வாங்க நேரும். குரு 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பூமி, வீடு, வாகன வகைக்காகவும் கடன் வாங்கலாம். பேங்க் கடன் அல்லது ஹவுசிங் யூனிட் அல்லது தனியார் வகையில் கடன் கிடைக்கும். கடன் வாங்குவதற்கும் ஒரு நியதி இருக்கிறது; முறை இருக்கிறது. கடன் கொடுக்கிறார்கள் என்று எல்லாரிடமும் வாங்கி விடக்கூடாது. தரமானவர்களிடம்தான் கடன் வாங்கவேண்டும். வரவு- செலவு வைத்துக் கொள்ள வேண்டும். ஆத்திர அவசரத்துக்காக வெற்றுப் பேப்பரில் கையெழுத்துப் போடுவதோ நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போடுவதோ தப்பு. அதிலும் கந்து வட்டி, ரன் வட்டி என்று அநியாய வட்டி வசூலிப்பவர்களிடம் போய் மாட்டிக்கொள்ளக்கூடாது.

ஒருவர் கடனை எல்லாம் ஒழுங்காகக் கட்டி முடித்ததும் பத்திரத்தை திரும்ப வாங்கத் தவறிவிட்டார். கடன் வாங்கியவர் இரண்டு மூன்று முறை அலைந்து பார்த்துவிட்டு பேசாமல் இருந்துவிட்டார். ஆறுமாதம் கழித்து கடன் கொடுத்தவரிடம் இருந்து வக்கீல் நோட்டீஸ் வருகிறது. வாங்கியவர் கடனைத் திருப்பித் தரவில்லையென்றும், அசலும் வட்டியும் சேர்த்து உடனே கட்டவேண்டும் என்று கேஸ் போட்டு விட்டார். பணம் திருப்பிக் கொடுத்ததற்கு இவரிடம் எந்த ஆதாரமும் இல்லை. கோவில் குளம் போய் முறையிட்டார். தெய்வம் சாட்சிக்கு வரும்! எப்போது வரும்? உடனே வருமா? குருக்களைக் கடித்த நாய் நரகத்துக்குப் போகும் என்பது சரிதான் என்றாலும், இப்போது குருக்களுக்குத் தொப்புளைச் சுற்றி பல ஊசி போட வேண்டுமே!

28-5-2013 முதல் 26-6-2013 வரை குரு மிருகசீரிடத்தில் சஞ்சாரம்.

குரு செவ்வாயின் சாரமான மிருகசீரிடத்தில் சஞ்சாரம். செவ்வாய் கன்னி ராசிக்கு 3, 8-க்குடையவர். குரு நின்ற இடத்துக்கும் 6, 11-க் குடையவர் என்பதால், இக்காலம் உங்களுடைய முயற்சிகளில் தளர்ச்சியும் தன்னம்பிக்கைக் குறைவும் உண்டாகும். தன்னம்பிக்கைக் குறைவு என்று சொல்லுவதைவிட தன் பயம் அதிகமாக இருக்கும். எந்த முடிவையும் தீர்க்கமாவும் திட்டமிட்டபடியும் தீர்மானிக்க இயலாத தடுமாற்றம் ஏற்படும். தேவையில்லாத கற்பனை பயமும் கவலையும் ஏற்படும். இக்கால கட்டத்தில் 1-6-2013 முதல் ஒரு மாத காலம் குரு அஸ்தமனம் அடைவார். அப்போது "கெட்டவன் கெட்டிடில் சிட்டிடும் யோகம்' என்பதுபோல, குருவின் அஸ்தமனத்தால் அட்டமாதிபத்திய சாரம் பெற்ற கெடுபலன் மாறி அனுகூலமாக மாறிவிடும். உதாரணத்தோடு சொல்லுவதானால் திருட்டுக் கேஸில் கைதாகிய ஒருவர் அப்ரூவராக மாறி அதிக தண்டனையிலிருந்து தப்புவதுபோல!

26-6-2013 முதல் 28-8-2013 வரை திருவாதிரையில் குரு சஞ்சாரம்.

திருவாதிரை ராகு சாரம். அவர் கன்னி ராசிக்கு 2-ல் குருவுக்கு 5-ல் இருக்கிறார். குருவின் பார்வையையும் பெறுகிறார். எனவே இக்காலம் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உருவானாலும் முடிவில் எல்லாம் நன்மையாக அமையும். கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்பார்களே, அதுமாதிரி! இச்சமயம் யாருக்கும் ஜாமீன் கொடுக் காதீர்கள். வாக்குறுதி வழங்கவேண்டாம். கொடுத்த வாக்கை நிறை வேற்றமுடியாதபடி சோதனை ஏற்படும். உறவினர்களும் நண்பர்களும் உங்களை பஞ்சாயத்துக்கு சாட்சி கூற அழைக்கலாம். மாமியார்- மருமகள் பிரச்சினையில் அல்லது கொடுக்கல்- வாங்கலில் உங்களை சாட்சியாக முன்நிறுத்தலாம். இரண்டுபக்கமும் உங்களுக்கு நெருக்க மானவராக இருக்கும்போது யாருக்காக யாரை பகைத்துக் கொள்வது? நரி வலம் போனால் நல்லதா இடம் போனால் நல்லதா என்பதைவிட, மேலே பாய்ந்து கடிக்காமல் போனால் நல்லது என்று பாலீஷாக நடந்து கொள்வதுதான் நல்லது.

இக்கால சந்தர்ப்பத்தில் குரு வக்ரம் அடைந்து 26-1-2014 முதல் 13-4-2014 முடிய மீண்டும் ராகு சாரத்தில் சஞ்சாரம் செய்வார். வக்ரத்தில் குரு 2-ஆவது முறையாக சஞ்சாரம் செய்யும் காலம் தாராளமான பணப்புழக்கம், குடும்பத்தில் சுபமங்கள காரியங்கள், நீண்டகாலமாக பிரிந்திருந்தவர்களின் சந்திப்பு, வருகை ஆகிய பலன் உண்டாகும். ராகு பிரீதியாக வடக்குப்பார்த்த அம்மனை வழிபடலாம். மதுரை மேலமாசி வீதியில், நன்மை தருவார் கோவிலுக்கு தென்புற வீதியில் குபேர பத்ரகாளியம்மன் கோவில் இருக்கிறது. அங்கு சென்று வழிபட்டால் குரு உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார். அர்ச்சகர் குமார், செல்: 90253 29566. மாதத்தில் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி, தமிழ் மாதப்பிறப்பு காலங்களில் மட்டுமே கோவில் திறந்திருக்கும். அந்தக் கோவிலில் ஒரு காலத்தில் நான் ஜோதிடம் சொல்லிக்கொண்டிருந்த சமயம்தான் "அதிர்ஷ்டம்' பத்திரிகையில் ராசிபலன் எழுதும் வாய்ப்பு வந்தது. மிகவும் சக்திவாய்ந்த அம்மன்.

28-8-2013 முதல் 26-1-2014 வரை முதல் கட்டமாகவும்; 13-4-2014 முதல் 13-6-2014 வரை இரண்டாவது கட்டமாகவும் புனர்பூசத்தில் குரு சஞ்சாரம்.

புனர்பூசம் குருவின் நட்சத்திரம். கன்னி ராசிக்கு 4, 7-க்குடைய குரு 10-ல் இருக்கிறார். இடையில் குரு வக்ரமடைந்து திருவாதிரைக்கு மாறி மீண்டும் புனர்பூச நட்சத்திரத்தில் 13-4-2014 முதல் 13-6-2014 வரை இரண்டு மாதம் சஞ்சாரம் செய்வார். குருவின் சாரத்தில் சஞ்சரிக்கும் காலம் முழுவதும் உங்களுக்கு அனுகூலமான காலமாகவும் அதிர்ஷ்ட காலமாகவும் இருக்கும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும். பூமி, வீடு, மனை, வாகன யோகம் உண்டாகும். தாயன்பு பெருகும். தாய்வழி உறவினர் நட்பு வளரும். கல்வியில் மேன்மை, மேற்படிப்பு யோகம், பட்டம் பெறுதல் ஆகிய 4-ஆம் பாவயோகம் உண்டாகும். அத்துடன் திருமணத் தடை விலகும். திருமணம் கூடும். மனைவி அல்லது கணவர் பேரில் சொத்து சுகங்கள் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்பும் ஏற்படும். சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற நன்மைகளும் உண்டாகும்.

1-6-2013 முதல் 1-7-2013 வரை குரு அஸ்தமனம்

ஜனன ஜாதகத்தில் குரு தசையோ குரு புக்தியோ நடந்தால், இக்காலம் எல்லாம் எதிர்மறைப் பலனாக நடக்கும். கன்னி ராசிக்கு 4, 7-க்குடையவர் 10-ல் இருக்கிறார். ஆரோக்கியம் பாதிக்கும். குடியிருப்பில் பிரச்சினை ஏற்படும். அண்டை அயலாருடன் வாக்கு வாதம், வம்புச்சண்டை உருவாகலாம். வேலையில் இருப்போருக்கு டென்ஷன் ஏற்படும். எவ்வளவு ஜாக்கிரதையாக கடமைகளைச் செய்தாலும் செய்யும் வேலையில் ஏதாவது தவறுதல் ஏற்பட்டு மேலிடத்தாரின் திட்டுதல், எச்சரிக்கை, கண்டிப்புகளைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம். இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் சென்னை தாம்பரத்தில் ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமிகளின் ஜீவசமாதி சென்று வழிபடலாம். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் சாத்துக்கூடல் கிராமத்தில் ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்தரசபை 1961-ல் மோகனூர் சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்டு, குருபூஜை வழிபாடு நடந்து வருகிறது. அதிலும் கலந்துகொள்ளலாம்.

24-10-2013 முதல் 20-2-2014 வரை குரு வக்ரம்

கன்னி ராசிக்கு 10-ல் உள்ள குரு வக்ரம்பெறும் இக்காலம் தொழில், வேலை, உத்தியோகம், குடும்பம், வாழ்க்கை இவற்றில் திருப்திகரமான பலன்கள் நடைபெறும். சாது, சந்நியாசிகள் சந்திப்பும், குருமார்களின் அனுக்கிரகமும் கிடைக்கும். சிலருக்கு மாதாஜீஅமிர்தானந்தமயி அருளாசி கிடைக்கும். தரிசனம் கிடைக்கும்.

உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி செலவுகளையும் விரயங்களையும் உண்டாக்கும். என்றாலும், சுபச்செலவுகளாக அமையும். வெளிநாட்டுப் பயணம், வெளியூர் வேலைவாய்ப்பு, வெளியூர் வாசம் ஏற்படும்.

அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கு:

குருப்பெயர்ச்சியால் உங்களுடைய நீண்டகாலத் திட்டங்களும் ஆசைகளும் நிறைவேறும். பல வருடங்களாக நடைபெற்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். அரசு தரப்பிலிருந்து வரவேண்டிய தொகைகள், பி.எப். போன்றவை கிடைக்கும்.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி சஞ்சலம், ஏமாற்றம், இழப்பு போன்ற பலன்களைத் தந்தாலும், அவற்றைச் சந்தித்து சமாளித்து சாதனை படைக்குமளவு தைரியத்தையும் கொடுக்கும். நண்பர்கள், உடன்பிறப்புகள் உறுதுணையாக தோள் கொடுப்பார்கள்.

No comments:

Post a Comment