Sunday, 24 March 2013

கும்ப ராசி குருப்பெயர்ச்சிப் பலன்கள் (2013-2014)

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

இதுவரை 4-ஆம் இடத்தில்- ரிஷபத்தில் இருந்த குரு 5-ஆம் இடமான மிதுனத்திற்கு மாறுகிறார்.

2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள் குருவுக்கு யோகமான இடங்கள். இந்த குருப்பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் அடையப் போகும் ஐந்து ராசிக்காரர்களில் நீங்களும் ஒருவர்.

5-ஆம் இடம் என்பது புத்திர ஸ்தானம்; மகிழ்ச்சி, திட்டம், எண்ணம், குரு உபதேசம், பக்தி, பூர்வ புண்ணியம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். அங்கு புத்திரகாரகனும் தனகாரகனுமான குரு வந்தமர்வது நன்மை தரும். மக்கள் பேறு, மகிழ்ச்சி, உண்மையான வேலையாட்கள் அமைதல், சகலவித சம்பத்து, செல்வம், பாக்கியம் உண்டாகுதல், மந்திர உபதேசம் கிடைக்கப் பெறுதல், பக்தி, இஷ்ட தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, தாய்மாமன் உதவி, பாட்டனார் பிதுரார்ஜித சொத்துகள் கிடைத்தல், நீண்டகால திட்டங்களும் ஆசைகளும் நிறைவேறுதல் ஆகிய நற்பலன்கள் உண்டாகும்.

திருமணமாகியும் வாôசு இல்லாமல் எதிர்பார்த்து ஏங்கியவர்களுக்கு ஆண் வாரிசு- பெண் வாரிசு யோகம் உண்டாகும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு திருமணம், சடங்கு, மக்கட்பேறு போன்ற பாக்கியம் உண்டாகும். படித்த பிள்ளைகளுக்கு தகுதிக் கேற்றபடி தரமான வேலைவாய்ப்பு, முன்னேற்றம், வாழ்க்கைத் தர மேன்மை உண்டாகும்.

2, 11-க்குடையவர் 5-ல் இருப்பதால் எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். குடும்பத்தில் முன்னேற்றமும் சுபமங்கள நிகழ்ச்சியும் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை, மகிழ்ச்சி நிலவும். படிப்பில் இதுவரை இருந்துவந்த மந்தநிலை மாறி அக்கறையாகப் படித்து, அரியர்ஸ் வைத்திருந்த பாடங்களில் பாஸ் செய்துவிடுவீர்கள். சிலர் மேற்படிப்பு படிக்கலாம். சிலர் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற முயற்சி மேற்கொள்ளலாம்.

மிதுனத்தில் இருக்கும் குரு 5-ஆம் பார்வையாக 9-ஆம் இடத்தையும்; 7-ஆம் பார்வையாக 11-ஆம் இடத்தையும்; 9-ஆம் பார்வையாக ஜென்ம ராசியையும் பார்க்கிறார்.

9-ஆம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம், தகப்பனார் ஸ்தானம், பாக்கிய ஸ்தானம். தந்தைவழி ஆஸ்திகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்துகளை பரிவர்த்தனை செய்து மாற்றம் செய்து ஏற்றம் பெறலாம். பங்கு பாகப் பிரிவினைகள் எதிர்பார்த்தபடி நடக்கும். சொத்து சுகம் இல்லாதவர்களுக்கு தந்தையின் நல்லன்பும் ஆசியும் கிடைக்கும். தெய்வத் திருவருளினால் எல்லா பாக்கியமும் உண்டாகும். ஆலய வழிபாடு, ஆன்மிகத் தொடர்பு, மகான்களின் ஆசிர்வாதம் ஏற்படும். குலதெய்வத்தின் அருளுக்குப் பாத்திரமாகவும்; சிலருக்கு அருள் இறங்கி அருள்வாக்கு சொல்லும் நிலையும் உண்டாகும்.

11-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் லாபம், வெற்றி, அனுகூலம் உண்டாகும். மூத்த சகோதரவழி சகாயமும் நன்மையும் ஏற்படும். தசா புக்திகள் பாதகமாக இருந்தால் சகோதர வகை பகையும் வருத்தமும் வரும். நீண்டகாலமாக நடைபெற்று வந்த வழக்குகளில் நல்ல தீர்ப்பும் வெற்றியும் உண்டாகும். அதனால் கணிசமான தொகையும் லாபமும் கிடைக்கலாம். மிதுன குரு உங்கள் ராசிக்கு 11-ஆம் இடமாகிய- தன் சொந்த வீடான தனுசுவைப் பார்ப்பது ஒரு தனிச்சிறப்பு.

ஒரு அரசு ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர் தன்மீது தவறில்லையென்றும், பணி நீக்கம் செய்தது சரியில்லை என்றும் ரிட்போட்டார். எட்டு ஆண்டுகள் வழக்கு நடந்தது. முடிவில் வெற்றி கிடைத்தது. ஆறு ஆண்டுகளுக்கு முழுச் சம்பளமும் பதவி உயர்வும் தர வேண்டும் என்று தீர்ப்பு.

ஜென்ம ராசியை குரு பார்ப்பதால் இழந்த பதவி, வேலை மீண்டும் கிடைக்கும். செல்வாக்கு பெருகும்.

கடந்த காலத்தில் குரு 4-ல் இருந்தபோது சிறிது காலம் கும்ப ராசிக்கு அட்டமச் சனி நடந்தது. அத்துடன் 4-ல் கேதுவும் 10-ல் ராகுவும் இருந்தன. அதனால் தாயாரின் உடல்நிலை பாதித்தது. சிலருக்கு அவர்களுக்கே (ஜாதகர்களுக்கே) உடல்நலம்  பாதித்தது. அல்லது உடன் பிறந்தவர்களுக்கு வைத்தியச் செலவு வந்தது. சிலருக்கு சகோதர உதவியால் குடியிருக்கும் வீடு சீர்திருத்தம் ஆனது. கும்ப ராசிக்கு ராசி நாதனும் விரயநாதனுமான சனி 8-ல் நின்று 10-ஆம் இடத்தையும் அங்கிருந்த ராகுவையும் பார்த்ததால், தொழில் பாதிப்பு, வேலையில் வேதனை, வாழ்க்கையில் சங்கடங்கள், வருமானத்தடை, தொட்ட தெல்லாம் பாதிக்கிணறு தாண்டிய மாதிரி அரைகுறை நிலை, குடும்பத்தில் கருத்து வேறுபாடு, குடும்பத்தினரின் ஒத்துழைப்புக் குறைவு போன்ற பலன்களையெல்லாம் அனுபவித்திருக்கலாம்.

அன்று 4-ஆம் இடத்து குரு 8-ஆம் இடத்தைப் பார்த்ததால் கௌரவப் போராட்டம், கவலை, விபத்து, இழப்பு, ஏமாற்றம், நஷ்டம், கடன் விவகாரம், தேவையில்லாத கடன் வழக்கு ஆகிய பலன்களையும் சந்தித்திருக்கலாம். 10-ஆம் இடத்தை 4-ஆம் இடத்து குரு பார்த்ததால், இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஓட்டை பஸ் சைலன்ஸர் புகையைக் கக்கிக்கொண்டே போனாலும், நிற்காமல் பிரேக் டவுன் ஆகாமல் ஓடுவது போல் வாழ்க்கை வண்டி ஓடிக்கொண்டிருந்தது. நித்திய கண்டம் பூரண ஆயுள் என்பதுபோல!

9-ல் சனியும் ராகுவும் சேர்ந்த சமயம் சிலகாலம்- அவர்களுக்கு 8-ல் குரு சஷ்டாஷ்டகமாக இருந்தபோது பொருளாதார நெருக்கடியும், சில காரியங்கள் கைகூடுவதுபோல் தோற்றமளித்து கடைசி நேரத்தில் ஏமாற்றமாகி தள்ளிப் போனது. ஒரு சிலருக்கு மற்றவர்களின் வாக்குறுதி ஆறுதலைத் தந்தாலும், செயலில் நடக்காதது நம்பிக்கைத் தளர்வை ஏற்படுத்தியது. அதற்கு உதாரணமாகச் சொல்லுவதானால்- லாட்டரி டிக்கெட் வாங்கிய ஒருவர் தனக்கு பரிசு கிடைத்தால் உங்களுக்குப் பாதி தருகிறேன் அல்லது கடனையெல்லாம் அடைத்துவிடுகிறேன் அல்லது உங்களுக்கு தொழில் அமைத்துத் தருகிறேன் என்றெல்லாம் தேர்தல் வாக்குறுதிபோல சொல்லியிருக்கலாம். அவர் எதிர்பார்த்த மாதிரி அவருக்கும் லாட்டரி பரிசு கிடைக்காது. உங்களுக்கும் அவர் சொன்ன மாதிரி உதவியும் கிடைக்காது. நரி- எட்டாத திராட்சையைப் பார்த்து, சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று விரக்தியால் விலகிப்போன மாதிரி ஒரு அனுபவமும் கிடைத்திருக்கலாம்.

9-ஆம் இடத்தில் உள்ள ராகு ஆன்மிக ஞானத்தையும், அருள்வாக்கு சொல்லும் சக்தியையும் உண்டாகும் என்று முன்னரே குறிப்பிட்டிருந்தோம். அங்கு சனியும் இருப்பதால் அந்த நிலையை அடைந்த பிறகு அந்த சாதனையாளர்கள் குருவை மறக்காமலும், ஆணவத்துக்கு அடிமையாகாமலும் இருந்தால்தான் கடைசி வரை அருள்வாக்கு    பலிக்கும்; மரியாதையும் காப்பாற்றப்படும். புராணகாலத்தில் அசுரர்கள் கடும் தவமிருந்து வரங்களைப் பெறுவார்கள். வரங்களைப் பெற்றபிறகு காமக் குரோத வழிகளில் ஈடுபட்டு, ஆணவத்தோடு ஆடாத ஆட்டம் போட்டு, முடிவில் அழிவைத் தேடிக் கொள்வார்கள். இந்தக் காலத்தில் அரசியல்வாதிகள் சாமர்த்தியமாகப் பேசி அல்லது வோட்டுக்கு பணம் கொடுத்து, இலவச சலுகைகளை அறிவித்து, மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சியில் அமர்ந்ததும் மக்களை மறந்துவிடுவார்கள்.  ஊழல் செய்து கோடி கோடியாகக் குவிப்பார்கள். அதேபோல சில ஆன்மிக வாதிகளும் தங்களுடைய தவப்பலனை தவறாகப் பயன்படுத்தி, பெண்கள் வகையில் அவப்பெயர் எடுத்துக் கொள்கிறார்கள். சிறை செல்லுவதும் வழக்குகளை சந்திப்பதும் அவர்களுக்கு கேவலமாகத் தெரியாது. 9-ஆம் இடத்தை குரு பார்ப்பதால், "கழுவின மீனில் நழுவின மீனாக' எப்படியோ தப்பி பிழைப்பை ஓட்டலாம்.

9-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் ஒரு சிலருக்கு ஆன்மிகப் பணியில் ஈடுபாடு உண்டாகும். டிரஸ்ட், கமிட்டியில் பதவி கிடைக்கும். சனி, ராகு இருப்பதால் இந்தத் துறையில் உங்களை ஈடுபத்தியவர் சுயநலவாதியாக மாறி உங்களை கூட்டுச் சேர்க்க விரும்பலாம். அவர்கள் விரித்த வலையில் நீங்கள் சிக்காமல் தெய்வத்துக்கும் மனசாட்சிக்கும் பயந்து நடப்பதால், மற்றவர்கள் அசல் எது போலி  எது என்று தெரிந்துகொண்டு, போலியை ஒதுக்கிவிட்டு அசலைப் போற்றி ஆதரவு தந்து ஏற்றுக்கொள்வார்கள். அது குரு பார்த்த பெருமை!

பெண்கள் ஜாதகத்தில் 9-ஆம் இடம் புத்திர ஸ்தானம்; 5-ஆம் இடம் கர்ப்ப ஸ்தானம். ஆண்கள் ஜாதகத்தில் 5-ஆம் இடம் புத்திர ஸ்தானம். இங்கு 5-ல் புத்திர ஸ்தானத்தில் புத்திர காரகன் குரு நிற்பது புத்திர தோஷம். "காரகோ பாவகநாசம்' எனப்படும். அதாவது பிதுர்ஸ்தானத்தில் 9-ல்  பிதுர்காரகன் சூரியன் நிற்பது பிதுர்தோஷம். களஸ்திர ஸ்தானத்தில் 7-ல் களஸ்திரகாரகன் சுக்கிரன் நிற்பது  களஸ்திரதோஷம். சகோதர ஸ்தானத்தில் 3-ல் சகோதர காரகன் நிற்பது செவ்வாய் சகோதர தோஷம். தாயார் ஸ்தானத்தில் 4-ல் தாய் காரகன் சந்திரன் இருப்பது மாத்ரு தோஷம். இதில் விதிவிலக்கு சனிக்கு மட்டும்தான். ஆயுள் காரகன் சனி ஆயுஸ்தானம் 8-ல் இருக்கலாம். ஆயுள் விருத்தி; ஆயுள் தோஷம் ஆகாது. ஆகவே 5-ல் குரு; 9-ல் சனி, ராகு நிற்பது புத்திர தோஷம் என்பதால் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. வாஞ்சாகல்ப கணபதி ஹோமம், வாஞ்சாகல்ப கணபதி புத்திரப்ராப்தி ஹோமம், சந்தான பரமேஸ்வர ஹோமம், சந்தான கோபாலகிருஷ்ண ஹோமம் செய்து தம்பதிகள் கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்.

28-5-2013 முதல் 26-6-2013 வரை மிருகசீரிடத்தில் குரு சஞ்சாரம்.

குரு செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிடத்தில் சஞ்சரிப்பதால் இக்காலம் உங்களுக்கு அனுகூலமான பலன்களே நடக்கும். செவ்வாய் கும்ப ராசிக்கு 3, 10-க்குடையவர். 5-ல் நிற்கும் குரு உங்கள் ராசியையும், 9-ஆம் இடத்தையும், 11-ஆம் இடத்தையும் பார்ப்பதால் உங்களுக்கு தொழில் லாபம், தன லாபம், எதிர்பாராத அதிர்ஷ்டம், சகாயம், பழகியவர்கள், நண்பர்கள் மூலமாக ஆதாயம் உண்டாகும். நீண்ட நெடுங்காலமாக அதிர்ஷ்டத்தைத் தேடி அலைபவர்களுக்கு இக்கால கட்டத்தில் அது இஷ்டமாக வந்து அரவணைக்கும். ரியல் எஸ்ட்டேட் தொழில் செய்கிறவர்கள், எப்போதோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடங்கள் எல்லாம்- பைபாஸ் அருகிலும் நான்குவழிப் புறச்சாலை ஓரங்களிலும்  அமைவதால் அதிக விலைக்குப் போகும். பணத்தை அள்ளிக் குவிக்கலாம். அதற்காக நீங்கள் பூமிநாதர் ஆலயம் சென்று வழிபட வேண்டும். புதுக்கோட்டை- பொன்னமராவதி பாதையில், செவலூர் என்ற ஊரில் ஆரணவல்லி சமேத பூமிநாத சுவாமி கோவில் உள்ளது. 1,500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகப் பழமையான கோவில். ஒவ்வொரு வாஸ்து காலங்களிலும் வாஸ்து ஹோமம், அபிஷேகம், பூஜை சிறப்பாக நடக்கும். பக்தர்களுக்கு காலை சிற்றுண்டியும் பகலில் அன்னதானமும் நடக்கும். சுவாமியின்மேல் செய்யும் அபிஷேகத் திரவியங்கள் எல்லாம் வெளியில் சிந்தாமல் லிங்கத் திருமேனி அடியில் ஆவுடையாருக்குள்ளேயே இறங்கிவிடும். சுவாமியாயைச் சுற்றி 16 பட்டைகளாக அமைந்துள்ளது.

கும்ப ராசிக்கு செவ்வாய் 3-க்குடையவர். இதுவரை உங்களைக்  கண்டுகொள்ளாமல் இருந்த உடன்பிறப்புகள், இப்போது உங்கள்மேல் பரிவும் பாசமும் கொண்டு கரிசனம் காட்டுவார்கள். "சாப்பிட்டீர்களா, தூங்கினீர்களா, எப்படியிருக்கிறீர்கள்' என்றெல் லாம் குசலம் விசாரிப்பார்கள். வலிய வந்து உங்கள்மேல் அக்கறை காட்டுவர்கள். அதற்கு ஏதாவது உள்காரணம் இருக்கும். அது ஆரம்பத்தில் தெரியாது. போகப் போகத் தெரியும். ஆடு நனைகிறதே என்று ஓநாய் ஏன் வருத்தப்பட்டது என்பது பின்னால்தான் தெரியும். 3-ல் கேது, ராகு, சனி சம்பந்தம் இருக்கிறதே! ஆதாயமில்லாத செட்டி ஆத்தோடு போவாரா என்பதுதான் நிலை. மற்றபடி பொதுவாக உங்களுக்கு எல்லா சௌகர்யங்களும் நடக்கும். நீங்களும் "தடியும் ஒடியக்கூடாது- பாம்பும் அடிபட வேண்டும்' என்ற பாலிசியை கடைப் பிடித்து கூடப்பிறந்தவர்களை சமாளியுங்கள்.

26-6-2013 முதல் 28-8-2013 வரை முதல் கட்டமாக திருவாதிரையில் குரு சஞ்சாரம். பிறகு புனர்பூசத்தில் மாறி வக்ரம் அடைந்து, 26-1-2014 முதல் 13-4-2014 வரை மீண்டும் திருவாதிரை நட்சத்திரத்தில் வக்ரகதியாக குரு சஞ்சாரம் செய்வார். ராகு நிற்கும் இடம் என்பதால் இரண்டுகட்ட நிலையிலும் உங்களுக்கு நல்லதே நடக்கும். கெடுதலுக்கு இடமில்லை. பாக்கியம், அனுகூலம், தெய்வபக்தி, முன்னோர்கள் வழிபாடு ஆகிய நற்பலன்கள் நடக்கும். புனிதப்பயணம், தெய்வ ஸ்தல யாத்திரை, விரதங்களை மேற்கொள்வது போன்ற பலன்களைச் சந்திக்கலாம். இக்காலம் சிலர் ஜோதிட ஆராய்ச்சி செய்து பலன் சொல்லலாம். சிலர் மாந்திரீகப் பயிற்சி செய்வார்கள். சிலர் தியானம், யோகா என்று செயல் படுவார்கள். அப்படி ஜோதிடத்தில் ஆர்வம் ஏற்பட்டு கற்றுக்கொள்ள ஆசைப்பட்டால், சென்னை அமரர் பி.எஸ்.பி. அவர்களின் யுனிவர்சல் ரிசர்ச் அகாடமியில் உறுப்பினராகி, ஜோதிட அறிமுக நூல் வாங்கிப் படிக்கலாம். பல ஆயிரக்கணக்கில் அந்தப் பேரவையில் மாணவர்கள்  இருக்கிறார்கள். சமீப காலமாக ஜோதிடம் வெகு வேகமாகப் பரவி வருகிறது. ஒரு காலத்தில் வள்ளுவர்களிடமும் அய்யங்கார்களிடமும் தான் ஜோதிடம் சிக்குண்டு கிடந்தது. இன்று ஆண்- பெண் எல்லா சமூகத்தாரும்- குறிப்பாக பட்டம் பெற்றவர்களும் ஜோதிட ஆராய்ச்சியில் இறங்கிவிட்டார்கள். மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், கோவை கற்பகம் யுனிவர்சிட்டி, தஞ்சை சாஸ்திரா யுனிவர்சிட்டி போன்ற இங்களில் எல்லாம் ஜோதிட வகுப்பு நடத்தி டிப்ளமோ கொடுக்கிறார்கள். இதுதவிர தனிப்பட்டோரும் ஜோதிடப் பயிற்சி வகுப்பு, மாந்திரீக வகுப்பு, யோக, தியான வகுப்பு என்று நடத்தி கட்டணம் வசூலிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதனால் மக்களி டையே ஜோதிடம் முக்கியத்துவம் அடைந்திருப்பதாக உணர முடிகிறது. சிலர் ஆராய்ச்சி அடிப்படையிலும், பலர் வருமானத்திற் காகவும், ஒருசிலர் புகழ் பெறுவதற்காகவும் இதில் ஈடுபடுகிறார்கள். என்னைப் பொறுத்த வரையில், எனது ஜோதிட ஆய்வு மற்றவர்களைப் போய்ச்சேர வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். அதற்கு "பால ஜோதிடம்' ஒரு கருவியாக இருக்கிறது. அதைப் படித்தே பலர் எனக்கு மானசீக சீடர்களாக இருக்கிறார்கள் என்றால், அதற்காக எனது குருநாதர்கள் தெய்வத்திரு பள்ளத்தூர் அய்யாவுக்கும், தெய்வத்திரு கிருஷ்ணமூர்த்தி சாருக்கும், தெய்வத்திரு கோபாலய்யர் அவர்களுக்கும், மற்றும் "நக்கீரன்' ஆசிரியர் அவர்களுக்கும் நன்றி பாராட்டுகிறேன்.
ஜோதிடஞானம் சித்திக்கவும், வாக்கு பலிதம் மேன்மையடையவும் வெறும் படிப்பு மட்டும் போதாது. ஏதாவது ஒரு இஷ்ட தெய்வத்தின் உபாசனையும், அதற்குமேல் ஒழுக்கமும் அவசியம். அப்படியிருந்தால் கடைசி வரை ஜோதிடம் நம்மைக் காப்பாற்றும்; கைகொடுக்கும்.

புனர்பூசம் குருவின் சொந்த நட்சத்திரம். இதில் இரண்டு கட்டமாக குரு சஞ்சாரம் செய்வார். 28-8-2013 முதல் 26-1-2014 வரை முதல் கட்டமாகவும்; 13-4-2014 முதல் 13-6-2014 வரை 2-ஆவது கட்டமாகவும் குரு சஞ்சாரம் செய்வார். குருவின் மொத்த சஞ்சாரமும் உங்களுக்கு சாதகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். 2, 11-க்குடையவர் குரு 5-ல் இருக்கிறார். கும்ப ராசிக்கு 9-ஆம் இடம், 11-ஆம் இடம், ஜென்ம ராசியைப் பார்ப்பதால் நன்மை, லாபம், பாக்கியம், திட்டங்களில் வெற்றி ஆகிய எல்லா நன்மைகளையும் யோகங்களையும் அடையலாம்.

1-6-2013 முதல் 1-7-2013 வரை குரு அஸ்தமனம்

இக்காலம் உங்களுக்கு வேதனையும் சோதனையும் நிரம்பியதாக இருக்கும். எந்த ஒரு கிரகமும் வக்ரத்தில் நல்லதோ கெட்டதோ செய்யும்- அதன் தன்மையைப் பொறுத்து. ஆனால் அஸ்தமனத்தில் கெடுதலே செய்யும். அஸ்தமனம் என்றால் இருட்டு. இருட்டில் எதைப் பார்க்க முடியும்? அதனால் நல்ல இடங்களில் நிற்கும் கிரகம் அஸ்தனமத்தில் கெடுதலையே செய்யும். கெட்ட இடங்களில் நிற்கும் கிரகம் அதிகமாக கெடுதலையே செய்யும். அப்படிப்பட்ட சந்தர்ப்பங் களில் அந்தக் கெடுதல்களைத் தாங்கிக் கொள்வதற்கு மனப்பக்குவம் தேவை. அதற்குப் பரிகாரம் தேவை. சித்தர்களின் ஜீவசமாதி சென்று வழிபட்டால் நமக்கு அந்த மனப்பக்குவம் கிடைக்கும். திருவண்ணா மலையைச் சுற்றி மகான்கள், சித்தர்களின் ஜீவசமாதிகள் நிறைய உண்டு. ரமணர், சேஷாத்திரி சுவாமி, விசிறி சாமியார் போன்ற பல சித்தர், மகான்கள் ஜீவசமாதி உள்ளன. அங்கு சென்று ஆறுதல் பெறலாம்.

24-10-2013 முதல் 20-2-2014 வரை குரு வக்ரம்

குருவின் வக்ர கதியில் எல்லாம் நல்லதாகவே நடக்கும். உங்கள் கனவுகளும் திட்டங்களும் நிறைவேறும். நீண்ட நாள் முயற்சிகள் கைகூடும். வரவேண்டிய பணங்கள் வந்து சேரும். லாபங்கள் பெருகும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். மக்களால் அனுகூலம் ஏற்படும்.

அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சியால் உங்களுக்கு தொழில் மேன்மை, பொருளாதார முன்னேற்றம், சகோதர சுகாயம் உண்டாகும். சச்சரவுகள் நீங்கும். புதிய முயற்சிகள் கைகூடும். சிலருக்கு இடப்பெயர்சசி ஏற்படும்.

சதய நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சியால் மக்கள் வகையில் மனக்குழப்பமும் வேதனையும் ஏற்பட்டு விலகும். தந்தைக்கும் மகனுக்கும் கௌரவப் பிரச்சினையால் சிறுசிறு தகராறுகள் உண்டாகி மறையும். முடிவில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்துப் போவதால் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். தராசு ஒரு பக்கம் ஏறினால் இன்னொரு பக்கம் இறங்குவது போல, ஒரு பக்கம் கெடுக்கும் கிரகம் இன்னொரு பக்கம் நன்மையைக் கொடுக்கும்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சியால் தனலாபம், வெற்றி, மனமகிழ்ச்சி, வழக்குகளில் வெற்றி ஏற்படும். மக்கள் வகையில் சுபமங்கள நிகழ்ச்சிகள் ஏற்படும். பிள்ளைப் பேறு இல்லாவர்களுக்கு குழந்தைச் செல்வம் கிட்டும்.

No comments:

Post a Comment