Sunday, 24 March 2013

துலாம் ராசி குருப்பெயர்ச்சிப் பலன்கள் (2013-2014)

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
 இதுவரை 8-ஆம் இடத்தில் இருந்த குரு இப்போது 9-ஆம் இடத்துக்கு மாறியிருக்கிறார். குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள்தான் யோகமான இடங்கள். எதிலும் இயற்கையில் சுபகிரகமான குருவுக்கு 5, 9 என்ற திரிகோண ஸ்தானத்தில் 9-ஆம் இடமே மிக ராஜயோகமான இடமாகும். மிதுன குருப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தையும் ராஜ யோகத்தையும் அடையவிருக்கும் ரிஷப ராசி, சிம்ம ராசி, துலா ராசி, தனுசு ராசி, கும்ப ராசி ஆகிய ஐந்து ராசிக்காரர்களில் நீங்களும் ஒருவர். பாபகிரகங்கள் கேந்திரம் பெறுவதும், சுபகிரகங்கள் திரிகோணம் பெறுவதும் நல்லது.

கடந்த காலத்தில் குரு துலா ராசிக்கு 8-ல் இருந்தபோது உங்களுக்கு ஏழரைச் சனியும் நடந்தது. அத்துடன் ஜென்மச் சனி நடந்தபோது சனிக்கு 8-ல் குருவும் சனியும் சஷ்டாஷ்டகமாக இருந்தார்கள். அதனால் மத்தளத்துக்கு இருபக்கமும் அடி என்பதுபோல, இடிபோல உங்களைப் படுத்திய பாடு இருக்கிறதே, அது ஒரு சோகக் கதை- சொல்ல முடியாத துயரக் கதை.

கடந்த காலத்தில் எல்லா சௌகர்யங்கள் இருந்தும் எதையுமே சாதிக்க முடியாதவர்களாக செயலற்றவர்களாகிப் போனார்கள். சிலர் வட்டி வாசிக்கு கொடுக்க, வாங்கியவர்கள் அரசு சட்டதிட்டத்தால் அசலையும் வட்டியையும் திருப்பித் தராமல் நிமிர்ந்து கொண்டார்கள். பணம் கொடுத்தவர்கள் கேசும் போட முடியாமல், போலீஸ் புகாரும் கொடுக்க முடியாமல், ஆட்களை வைத்து மிரட்டவும் முடியாமல் ஊமை கண்ட கனவு போல மௌனியாக வாயடைத்துப் போனார்கள். கையில் பணவரவு குறைந்தவுடன் வீட்டில் மனைவி, பெற்றோரிடமும் மதிப்பும் மரியாதையும் குறைந்து போனது. "இல்லானை இல்லாளும் வேண்டாள்; மற்று ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்; செல்லாது அவன் வாய்ச் சொல்' என்ற நிலையில், நீங்கள் குடும்பத்தில் ஓரம்கட்டப் பட்டீர்கள். அதிலும் வேலை பார்க்கும் மனைவியாக- சம்பாத்தியம் உடைய மனைவியாக இருந்தால் வேறு கதையே  வேண்டாம். "போடு தோப்புக்கரணம்' என்றால், "எண்ணிக் கொள்' என்ற நிலைதான்.

ஒரு அன்பரின் மனைவி- வேலை பார்க்கும் இடத்தருகில் ஒரு மனை வாங்கிப் போட்டார். அதற்கு பிளான், லோன் எல்லாம் கணவருடைய நண்பரான ஒரு இஞ்சினீயர் மூலமாக ஏற்பாடு செய்து, அவரையே கட்டடமும் கட்டச் சொன்னார்கள். ஆனால் அந்த அம்மாள் எஸ்டிமேட் தொகை அதிகம் என்று தன் தம்பி மூலமாக கட்டடம் கட்ட ஏற்பாடு செய்துவிட்டார். அது வீட்டுக்காரருக்கு வருத்தம். ஏனென்றால் மச்சினருக்கும் அவருக்கும் ஏற்கெனவே பிடிக்காது. வேறு வழியில்லாமல் இஞ்சினீயர் நண்பரை சந்திக்கவே வெட்கப்பட்டு பிரிந்துவிட்டார். இப்படிப்பட்ட அனுபவங்கள் சிலருக்கு.

சிலருக்கு தாறுமாறான வைத்தியச் செலவுகள் வந்தன. பலர் தொழில் கஷ்டங்களையும் நஷ்டங்களையும் சந்தித்தார்கள். மக்கள் வகையில் மன சஞ்சலப்பட்டவர்களும் உண்டு; அவமானப்பட்டவர் களும் உண்டு. சிலர் சக்திக்கு மீறிய முயற்சிகளில் இறங்கி ஆழம் தெரி யாமல் காலைவிட்டு, நீந்தவும் முடியாமல் கரையேறவும் முடியாமல் கலங்கியவர்களும் உண்டு. ஒரு கமிஷன் தொழில்காரர் சரக்கு கொடுத்த வர்களுக்கு சரியாக பட்டுவாடா செய்யாமல், விற்ற பணத்தையெல்லாம் கோவிலுக்கும் அன்னதானத்துக்கும் சாமி கைங்கர்யத்துக்கும் வாரி யிறைத்து கடனாளியாகிவிட்டார். சரக்கு கொடுத்தவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து படையெடுத்து பாக்கியை வசூல் செய்ய முற்றுகை யிட்டபோது, ஐ.பி. கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

இப்படி கௌரவம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைக் காப்பாற்றப் போராடிய துலா ராசிக்காரர்கள் எல்லாம் இனி அதற்காக நேரத்தையும் நினைவையும் செலவழிக்க அவசியமில்லை. அஷ்டம குரு எந்தெந்த பலனைக் கெடுத்தாரோ அந்தப் பலனையெல்லாம் நற்பலனாக மாற்றி நல்லது செய்வார். மனநிறைவையும் மகிழ்ச்சியையும் 9-ஆம் இடத்து குரு தருவார்.

குரு 8-ஆம் இடத்திலிருந்து 9-ஆம் இடத்துக்கு மாறிவிட்டார் என்றாலும் ஏழரைச் சனி, ஜென்மச் சனி முடியவில்லை. அத்துடன் ஜென்மச் சனியோடு ராகுவும் சேர்ந்துகொண்டதால் கௌரவப் பிரச்சினையும் தன்மானப் பிரச்சினையும் உங்களுக்கு தலைக்குமேல் போன வெள்ளமாகி தத்தளிக்க செய்கிறது. ஜென்மச் சனி ஜென்ம ராகுவின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க 9-ஆம் இடத்து குரு உங்களுக்கு உதவுவார். 9-ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதால், அங்கு நிற்கும் குரு உங்களுக்கு மனோபலத்தையும்- ஆன்ம பலத்தையும் தருவார். தெய்வ நம்பிக்கையால் தெம்பு, திடம், வலிமை உண்டாகும். 9-ஆம் இடத்து குரு பலனாக குருவருளும் திருவருளும் பெருகும் என்பதால் எந்தப் பிரச்சினைகளானாலும் அவற்றை எளிதாகச் சமாளித்துவிடலாம். "ஒரு மலையை அண்டி வாழவேண்டும் அல்லது ஒரு மனிதனை அண்டி வாழ வேண்டும்' என்று கிராமத்தில் பழமொழி சொல்லுவார்கள். அதன் உள்ளர்த்தம்- உங்களுக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்கும் என்பதுதான். அந்தப் பாதுகாப்புக்கு உத்தர வாதமாக இப்போது 9-ஆம் இடத்து குரு செயல்படுவார்.

9-ல் குரு இருந்தால் குருவருள் தேடிவந்து அருள்பாலிக்கும். எல்லாரும் குருவைத் தேடி உபதேசம் பெறவேண்டும். ஆனால் பூர்வபுண்ணிய வசமாக நல்ல ஞானம் உடையவரை குருவே தேடி வந்து  உபதேசம் செய்வார். இரணியுன் மகன் பிரகலாதன் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே நாரதர் அவனுக்கு நாராயண மந்திரத்தை உபதேசம் செய்தார். சைவ சமயக் குரவர்கள் என்போர் நால்வர். சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் எனப்படுவோர். சந்தானக் குரவர்கள் என்போர் நால்வர். மெய்கண்டார், அருள்நந்தி சிவம், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம் எனப்படுவோர். இதில் மறைஞான சம்பந்தர் இரண்டு வயது குழந்தையாக இருந்தபோது- வெளியே தவழ்ந்து வந்தபோது வானில் பயணித்த கந்தர்வன், "இந்தக் குழந்தை எதிர்காலத்தில் பெரிய ஞானியாக விளங்கும்' என்று கணித்து கீழே இறங்கி வந்து குழந்தையின் காதுகளில் மந்திர உபதேசம் செய்தான். 7 வயதிலேயே மறைஞான சம்பந்தர் இராமலிங்க வள்ளலார் மாதிரி ஞானம் பெற்று சிவஞான போதத்துக்கு விளக்கம் அளித்தார். அருட்பெரும்ஜோதி வள்ளலார் கண்ணாடியில் தன் உருவத்தை வழிபட்டு, வேலும் மயிலும் துணை என்று முருகன் காட்சி கொடுக்க ஞானம் பெற்றார். ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் இருந்து 17 முறை திருக்கோஷ்டியூர் படையெடுத்து நம்பி சுவாமிகளிடம் உபதேசம் பெற்றார். இப்படி குருவைத் தேடி சீடன் போவதும், சீடனைத் தேடி குரு வருவதும் உண்டு. உங்களுக்கு 9-ல் குரு இருப்பதால் குரு உபதேசம் கிடைக்கும்.

ஒருசிலர் குரு உபதேசம் கிடைத்ததும் குருவை மறந்துவிடுவார்கள்; புறக்கணித்துவிடுவார்கள். குருவைத் தேடியலைந்த விவேகானந்தர் இராமகிருஷ்ணரைக் கண்டுபிடித்து உபதேசம் பெற்று குருவுக்கு மரியாதை செய்து உலகமெங்கும் மடங்களை ஸ்தாபித்தார். இதற்கும் குரு பார்வை வேண்டும்.

மிதுன ராசியில் இருக்கும் குரு 5-ஆம் பார்வையாக ஜென்ம ராசி யையும்; 7-ஆம் பார்வையாக 3-ஆம் இடத்தையும்; 9-ஆம் பார்வையாக 5-ஆம் இடத்தையும் பார்க்கிறார்.

ஜென்ம ராசியை பாக்கிய ஸ்தானத்தில் நின்று பார்ப்பதால், இழந்த செல்வாக்கும் பதவியும் கௌரவமும் அந்தஸ்தும் மீண்டும் தேடிவரும். மதிப்பும் மரியாதையும் உயரும். உங்கள்மீது சுமத்தப்பட்ட வீண் பழியும் களங்கமும் மாறும். உங்களைப் பார்த்து ஏளனமாக எண்ணி எள்ளி  நகையாடியவர்களும் நீங்கள் ஓய்ந்துவிட்டதாகவும் ஒதுங்கி விட்டதாகவும் கருதியவர்களும் ஆச்சரியப்படும் அளவு உங்களுக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் உருவாகும்.

கண்டவர்களிடம் எல்லாம் கடன் வாங்கி அசலையும் அடைக்க முடியாமல் வட்டியையும் கட்ட முடியாமல் ஊரை விட்டு ஓடியவர்களுக்கும் மயங்கித் தயங்கி மறைந்து வாழ்ந்தவர்களுக்கும் இந்த குருப்பெயர்ச்சியில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். நமக்கும் வாழ்வு உண்டு; எதிர்காலம் உண்டு. பைசா பாக்கியில்லாமல் எல்லா கடன்களையும் அடைத்து நாணயத்தைக் காப்பாற்றி நற்பெயர் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையும் வரும்- வைராக்கியமும் வளரும்.

என் நண்பர் ஒருவர் சந்தை வியாபாரியாக இருந்தார். மாதச் சீட்டு ஏலச்சீட்டு பிடித்தார். வெளியில் குறைந்த வட்டிக்கு வாங்கி கூடுதல் வட்டிக்கு கொடுத்து வரவு- செலவு நடத்தி வைத்தார். தான் வாங்கிய இடத்தில் டைரியில் தேதி குறிப்பிட்டு அதன்படி தேடிப் போய் வட்டி கொடுத்து வந்தார். எல்லாரும் நாணயஸ்தர் என்று அவரைப் பாராட்டினார்கள். அவருக்கு ஏழரைச் சனியும் சந்திர தசையும் சேர்ந்து நடந்தது. அங்கேதான் விதி வேலை செய்யத் தொடங்கியது. அவரிடம் சீட்டு எடுத்தவர்கள் பெருந்தொகை எடுத்தவர்கள் இவர் மாதிரி ஒழுங்காக தவணை கட்டவில்லை. இரண்டொரு நபர்களும் பணம் கட்டாமல் தலைமறைவாகிவிட்டார்கள். அதனால் நண்பரும் வாங்கிய இடத்தில் பணம் செலுத்த முடியாமல் குடும்பத்தோடு ஒருநாள் போட்டது போட்டபடி தலைமறைவாகிவிட்டார். எங்கே போனார் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

3-ஆம் இடம் சகோதர ஸ்தானம், சகாய ஸ்தானம். அதற்கு 3, 6-க்குடைய குரு ராசிக்கு 9-ல் நின்று- 3-ஆம் இடத்துக்கு 7-ல் நின்று 3-ஆம் இடத்தைப் பார்க்கிறார். பாவாதிபதி பாவத்தைப் பார்க்க பாவபுஷ்டி. அதனால் நண்பர்களின் சகாயமும் உடன்பிறந்தவர்களின் உதவியும் கிடைக்கும்.. அண்ணன்- தம்பி நான்கு பேர் கூட்டுக்குடும்பம். மூத்தவர் அரிசி வியாபாரி. தன் கடுமையான உழைப்பால் தம்பிகள் எல்லாரையும் ஒவ்வொருவருக்கும் தனித்தொழில், திருமணம் என்று செய்துவைத்தார். ஒரு தம்பி மட்டும் தவறான பாதையில் போய் தொழிலையும் கவனிக்காமல் பல லட்சம் கடனாளியாகிவிட்டார். கடைசியில் அவர் தற்கொலை முடிவுக்குப் போய்விட்டார். மூத்தவரும் அவர் மனைவியும் பெற்றோரும் எல்லாரும் ஒன்றுகூடி பேசி, கடனை அடைத்துவிட்டு அந்தத் தம்பியை தன் தொழிலில் நேரடி பார்வையில் வைத்துக்கொள்ள முடிவு செய்தார். நாலு பேருடைய மனைவியும் அவர்கள் போட்டிருந்த நகைகளைக் கழற்றிக்கொடுத்தார்கள். அதை வைத்து ஒருவர் கட்ட கடனை அடைத்து எல்லாரும் ஒரே தொழிலில் இணைந்து பாடுபட்டார்கள். "முத்துக்கு முத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக; அன்பாலே இணைந்து வந்தோம் ஒன்னுக்குள் ஒன்னாக' என்ற பாடலுக்கு அந்தக் குடும்பமே உதாரணமாக அமைந்துவிட்டது.

குரு 5-ஆம் இடத்தைப் பார்த்த பலன் என்ன? 5-ஆம் இடம் புத்திர ஸ்தானம். திட்டம், மகிழ்ச்சி, தாய்மாமன், பாட்டனார் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கும் புத்திர பாக்கியத்துக்காக ஏங்கியவர்களுக்கும் தவம் இருந்தவர்களுக்கும் இனி வாரிசு கிடைக்கும்.

சனி 5-க்குடையவர் என்பதாலும், அவர் ராகு- கேது சம்பந்தம் பெறுவதாலும் ஜாதகரீதியாக புத்திர தோஷம் உள்ளவர்களுக்கு கர்ப்பச்சிதைவு அல்லது ஆபரேஷன் செய்து குழந்தை பெறுவது போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெறும். அப்படிப்பட்டவர்கள் கருவைக் காப்பாற்ற தஞ்சாவூர் பாபநாசம் அருகில் திருக்கருகாவூர் சென்று, ஸ்ரீகர்ப்பரட்சகாம்பிகையம்மனை வணங்கி, அங்கு விளக்கெண்ணை மந்திரித்து வாங்கி கர்ப்பஸ்திரீ வயிற்றில் தடவிக்கொள்ள வேண்டும். அதேபோல அறுவை சிகிச்சை பிரசவம் ஏற்படாமலீருக்க திருச்சி தாயுமானவ சுவாமிக்கு நேர்த்திக்கடன் செய்துகொள்ளவும். பெண் குழந்தைகளை பெற்றெடுத்தவர்கள் ஆண் குழந்தையை விரும்பினால், கும்பகோணம் குடவாசல் அருகில் சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரை வழிபட வேண்டும். திருமணமாகி பல வருடம் குழந்தை இல்லாதவர்கள்கூட சேங்காலிபுரம் சென்று வேண்டிக்கொள்ளலாம். கார்த்திகை மாதம் தத்தஜெயந்தியின்போது தொட்டில் உற்சவத்தில் கலந்துகொள்ளலாம்.

5-ஆம் இடம் புத்திர ஸ்தானம். வயதுக்கு வந்த பெண்களுக்கு திருமணம் ஆகாமல் தடைப்பட்டால், பார்வதிகலா சுயம்வர ஹோமம் செய்யலாம். ஆண்களுக்கு கந்தர்வராஜ ஹோமம் செய்யலாம். இதை பள்ளத்தூர் நந்தி ஆஸ்ரமம்- காரைக்குடி நாகநாத சுவாமி கோவில்- வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடம், தேவிபட்டினம் மொட்டையர், மகன் சீனிவாச சாஸ்திரி ஆஸ்ரமம் இவற்றில் செய்யலாம்.

28-5-2013 முதல் 26-6-2013 வரை மிருகசீரிடத்தில் குரு சஞ்சாரம்.

துலா ராசிக்கு 2, 7-க்குடையவர் செவ்வாய். அவர் சாரத்தில் குரு சஞ்சரிப்பதால் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணமாகும்; குடும்பம் அமையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். சொல் வாக்கு, செல்வாக்கு ஏற்படும். மனைவி வகையில் எதிர்பாராத சொத்துகள் வரும். பிரிந்திருக்கும் கணவன்- மனைவி ஒன்று சேர்வார்கள்.

26-6-2013 முதல் 28-8-2013 முடிய திருவாதிரையில் முதல் கட்டமாக குரு சஞ்சரிப்பார். திருவாதிரை ராகுவின் நட்சத்திரம். ராசிக்கு 12-ல் இருப்பதால் சுபச்செலவுகள் உண்டாகும். நீண்டகாலமாக கும்பிடாமலிருந்த குலதெய்வ வழிபாடு நடக்கும். புண்ணிய ஸ்தல யாத்திரைக்குச் சென்று வருவீர்கள். தெய்வானுகூலம் கிடைக்கும். கௌரவப் பதவிகளும் கிடைக்கும். தாராளமான வரவு- செலவுகளும் இருக்கும். வேலை சம்பந்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு போகலாம்.

26-1-2014 முதல் 13-4-2014 வரை இரண்டாம் கட்டமாக திருவாதிரை நட்சத்திரத்தில் வக்ரமாக குரு சஞ்சரிப்பார். குரு வக்ரமாக இருக்கும்போது பூர்வீக சொத்து சம்பந்தமாக வில்லங்கம், விவகாரம், வியாஜ்ஜியங்கள் ஏற்படும். அல்லது தகப்பனாருக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு குடும்பமோ தொழிலோ தனித்து செயல்படும். பங்காளிகளுடன் பகை ஏற்படும். அதுபோன்ற சந்தர்ப்பங் களில் கும்பகோணமருகில் நாச்சியார் கோவில் சென்று கல்கருடனை வழிபடலாம். அல்லது திருநாகேஸ்வரம் சென்று ராகுவுக்கு ராகுகால பூஜை செய்யலாம்.

28-8-2013 முதல் 26-1-2014 வரை புனர்பூச நட்சத்திரத்தில் முதல் கட்டமாக குரு சஞ்சாரம் செய்வார். பிறகு 13-4-2014 முதல் 13-6-2014 வரை மீண்டும் புனர்பூச நட்சத்திரத்தில் இரண்டாவது கட்டமாக குரு சஞ்சாரம் செய்வார். இரண்டு கட்டத்திலும் குரு சுயசாரத்தில் சஞ் சரிப்பதால், எதிர்பாராத உதவியும் சகாயமும் உண்டாகும். புதிய கடன்கள் உருவாகும். பழைய கடன்கள் நிவர்த்தியாகும். சகோதரர்கள் வகையிலும் நண்பர்கள் வகையிலும் நன்மைகளும் உதவிகளும் உண்டாகும்.

1-6-2013 முதல் 1-7-2013 வரை குரு அஸ்தமனம்

துலா ராசிக்கு 9-ல் குரு இருக்கிறார். அந்த 9-ஆம் இடமென்பது தகப்பனார், பூர்வ புண்ணிய ஸ்தானம். துலா ராசிக்கு 3, 6-க்குடைய குரு அஸ்தமனமாக இருப்பதால், தகப்பனார் வகையில் அல்லது பங்காளி வகையில் பிரச்சினைகளும் விரயங்களும் உண்டாகலாம். சிலருக்கு கடன் சுமை அதிகமாக இருக்கும். போட்டி, பொறாமை, வைத்தியச் செலவுகளையும் சந்திக்க நேரும். அந்தமாதிரி நேரங்களில் தேவூர் சென்று பிரார்த்தனை செய்துகொள்ளவும். குருவுக்கு பதவி கிடைத்த இடம். குபேரன் வழிபட்ட இடம். மற்ற குரு தலங்களிலும் செய்யலாம்.

24-10-2013 முதல் 20-2-2014 வரை குரு வக்ரம்

இக்காலகட்டத்தில் குரு 9-ல் வக்ரம். வக்ரத்தில் உக்ர பலம். இந்தக் காலம் முழுவதும் உங்களுக்கு மிகச்சிறந்த யோகங்களும் நன்மையும் நடக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சாதகமான தசாபுக்தி நடைபெறுபவர்களுக்கு செல்வாக்கு, புகழ், பாராட்டு, பெருமை உண்டாகும். குடும்பத்தில் சுபமங்கள விரயங்கள் நடைபெறும்.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு:

குருப்பெயர்ச்சியால் செல்வாக்கும் உண்டாகும்; எதிர்ப்பும் போட்டியும் உண்டாகும். அதில் வெற்றியும் உண்டாகும். சிலருக்கு கடன்களும் சிலருக்கு வைத்தியச் செலவும் ஏற்படலாம்.

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு:

எதிர்பாராத தனப்ராப்தியும் தன லாபமும் உண்டாகும். பாட்டனார்- பாட்டி வகையில் ஆதாயமும் அனுகூலமும், எதிர் பார்க்கலாம். முஸ்லிம் நண்பர்களுடன் புதிய தொழில் தொடங்கலாம். முஸ்லிம் நாடுகளுக்கு வேலைக்கும் போகலாம்.

விசாக நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சியால் குடும்பத்தில் ஒற்றுமையும் உடன்பாடும் குதூகலமும் ஏற்படும். இருந்தாலும், காரணமில்லாத கவலைகளும் சஞ்சலங்களும் ஏற்பட இடமுண்டு. சில காரியங்களில் ஏமாற்றமும் தடை தாமதமும் ஏற்பட்டாலும் உங்கள் விடாமுயற்சியால் வெற்றி கொள்ளலாம். திருநெல்வேலி அருகே வள்ளியூர் வழி ராதாபுரம் சென்று, அங்கிருந்து விஜயாபதி சென்று வழிபடவும். விஸ்வாமித்திரர் தவமிருந்த தலம்.

No comments:

Post a Comment