Sunday 3 March 2013

ஜெனீவாவில் மைனஸ் 4 பாகையும் 40 பாகையும்; தமிழர் தரப்பினரின் பம்மாத்துக்கள்

 
இந்த கட்டுரையை எழுதுகின்ற போது ஜெனவா நகரில் -4பாகை, (மைனஸ் நான்கு பாகை,) இப்படி ஒரு குளிரை இலங்கை போன்ற தென்கிழக்காசிய நாடுகள் கண்டிருக்க முடியாது.

ஆனாலும் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா.மனித உரிமை பேரவையின் 22ஆவது கூட்டத்தொடர் வெளியில் காணப்படுவது போல குளிராக காணப்படவில்லை. ஜெனிவா நகருக்கு வந்தவர்கள் எல்லாம் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொண்டதாக சில ஊடகங்கள் பொய் பரப்புரைகளை செய்து கொண்டிருக்கும் ஏமாற்று வேலைகள் ஒருபுறம் நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடருக்கு சென்றிருந்தேன்.

அன்று நண்பகல் சனல் 4 வின் மோதல் தவிர்ப்பு வலயம் என்ற ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை பேரவை வளாகத்தில் உள்ள 23ஆம் இலக்க மண்டபத்தில் காட்டப்பட்டது. அதில் தமிழர்கள் சார்பில் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் சிலரும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். சுமந்தின் அந்த நிகழ்ச்சி முடிந்ததும் சென்றுவிட்டார். பொதுமண்டபத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

அதன் பின்னர் பிற்பகல் ஐ.நா.பொது மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன், மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை ஆகியோர் உரையாற்றினர். தமிழர்கள் என பார்வையாளர் வரிசையில் ஒஸ்ரேலியாவிலிருந்து வருகை தந்திருந்த மாணிக்கவாசகம், பெங்களுர் பல்கலைக்கழக பேராசிரியர் போல் நியுமன், மலேசியாவிலிருந்து வருகை தந்திருந்த ஒரு தமிழ் பெண் மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசை சேர்ந்த சுகிந்தன் ஆகியோர் மட்டுமே அமர்ந்திருந்ததை ஊடகவியலாளர்கள் பகுதியில் இருந்த என்னால் அவதானிக்க முடிந்தது.

ஆனால் சனிக்கிழமை ஒரு தமிழ் இணையத்தளம் வெளியிட்ட செய்தியை பார்த்த போது மக்களை ஏமாற்றும் சிலரின் செயலைப்பார்த்து சினமாக இருந்தது. வெள்ளிக்கிழமை பான் கீ மூன் உரையாற்றிய போது ஐ.நா.மனித உரிமை பேரவை பொது மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர் என்றும் பான் கீ மூனிடம் மகஜர் ஒன்று கையளித்ததாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அந்த அமர்வு சுமார் 90நிமிடங்கள் நடைபெற்றது. அது முடிந்ததும் பான் கீ மூன் சென்று விட்டார்.

பான் கீ மூனை நினைத்த மாத்திரத்தில் ஐ.நா.கூட்டத்தில் வைத்து யாரும் சந்திக்க முடியாது. இது கூட தெரியாது சில தமிழ் அரசியல்வாதிகளும் அவர்கள் நடத்தும் சில இணையத்தளங்களும் நடத்தும் ஏமாற்று வேலைகளை செய்து கொண்டுதான் இருக்கின்றன. பாவம் தமிழ் மக்களும் இவர்களை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். பான் கீ மூன் பேசிக்கொண்டிருந்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் ஐ.நா.மனித உரிமை பேரவை அலுவலகத்திலிருந்து ஒரு கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள ஹொட்டல் ஒன்றிலேயே இருந்தனர்.

சுமந்திரனை தவிர இவர்களில் எவரும் வெள்ளிக்கிழமை ஐ.நா.மனித உரிமை பேரவையின் வாசல் படிக்கே வரவில்லை. அப்படி இருக்கும் போது ஜெனிவா நகரில் தமிழர்கள் நடத்தும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்து கொண்டு ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறோம் என ஏன் மக்களை ஏமாற்ற வேண்டும். மக்களை ஏமாற்றி பிழைக்கும் சில அரசியல்வாதிகளைப் போல சில ஊடகங்களும் மக்களுக்கு பிழையான தகவல்களை வழங்கி திசை திருப்பி வருகின்றன என்பது தான் உண்மை.

இது தவிர கடந்த முறை 70க்கும் மேற்பட்டவர்களுடன் ஜெனிவாவுக்கு வந்து அட்டகாசம் காட்டிய சிறிலங்கா தரப்பினர் இம்முறை சுமார் 10பேருடனேயே வந்துள்ளனர். கடந்த முறை காட்டிய அட்டகாசத்தையும் அடாவடித்தனத்தையும் இம்முறை காணவில்லை.

ஐ.ந.மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாகி மூன்றாவது தினம் உரையாற்றிய சிறிலங்காவின் பிரதிநிதி அமைச்சர் மகிந்த சமரசிங்க ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளை தெரியாமல் இருந்தாரா அல்லது தெரிந்தும் இலங்கையில் தாம் நினைத்ததை செய்வதை போல ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்திலும் செய்து விடலாம் என நினைத்தாரா தெரியவில்லை, அவரது உரை ஐ.நா.மனித உரிமை கூட்டத்தொடரின் விதிமுறைகளை மீறியதாகவே அமைந்திருந்தது.

ஐ.நா.மனித உரிமை பேரவையில் நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு 10 நிமிடங்களும் மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு 5 நிமிடங்களும் வழங்கப்பட்டிருந்தன. உயர்மட்ட பிரதிநிதிகள் ஆக்கூடியது 15நிமிடத்திற்கு மேல் உரையை நீடிக்க கூடாது என்ற விதி முறை உள்ளது. இதனை அனைத்து நாடுகளுமே கடைப்பிடித்தன.

அமெரிக்கா, பிரித்தானிய போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் 9நிமிடத்துடன் தங்களது உரைகளை முடித்துக்கொண்டன. ஆனால் சிறிலங்காவின் பிரதிநிதி மகிந்த சமரசிங்க இந்த விதிமுறைகளை எல்லாம் மீறி தனக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களை எல்லாம் மீறி 26நிமிடங்கள் உரையாற்றியிருந்தார். அந்த 26நிமிடங்களில் தன்னால் முடிந்தவரை பொய்யையும் புரட்டையும் கூறியது மட்டுமல்ல ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நாயகம் மீது குற்றச்சாட்டுக்களையும் சுமத்தியிருந்தார்.

இலங்கையில் இப்போது அகதிகளே இல்லை, அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு விட்டார்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி வருகிறோம், இராணுவம் எந்த யுத்த குற்றங்களிலும் ஈடுபடவில்லை, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தீர்மானத்தை நிறைவேற்றித்தான் பிரதம நீதியரசரை கூட பதவி நீக்கம் செய்தோம், இலங்கையில் இப்போது பூரண அமைதி நிலவுகிறது. எந்த பிரச்சினையும் இல்லை,

ஆனால் மனித உரிமை பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தங்களுடைய நாட்டில் தேவையற்ற தலையீட்டை செய்கிறார் என தன்னுடைய 26 நிமிட உரையில் தெரிவித்திருந்தார். மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை என்பவர் ஒரு தனிநபர் அல்ல. அவரின் அறிக்கைகளோ அல்லது அவர் மனித உரிமை பேரவையில் ஆற்றுகின்ற உரைகளோ அவரின் தனிப்பட்ட ரீதியிலானது அல்ல. ஐ.நா.மனித உரிமை பேரவையின் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளையே அவர் வெளியிடுகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

இதனால் உலக நாடுகள் தங்களது உரைகளில் ஒரு போதுமே உலகின் உயர்மன்றமான ஐ.நா.மனித உரிமை பேரவையை கேள்விக்குட்படுத்தும் வகையில் விவாதங்களை முன்வைப்பதில்லை. சிறிலங்கா அதன் விதிமுறைகளை எல்லாவற்றையும் மீறி தனிப்பட்ட ரீதியில் நவநீதம்பிள்ளை மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களை உலக நாடுகள் சிறிலங்காவுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை. ஏனெனில் இலங்கைக்கு ஐ.நாவின் விதிமுறைகள் தெரியாவிட்டாலும் மேற்குலக நாடுகள் ஐ.நா.நடைமுறைகளை நன்கு அறிந்திருக்கின்றன.

இலங்கையில் அகதிகள் என்று இப்போது யாரும் இல்லை, அங்கு இராணுவம் பொது நிர்வாக விடயங்களிலும், பொதுமக்களின் அன்றாட அலுவல்களிலும் தலையிடுவதில்லை கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம், நீதித்துறை சுதந்திரம் நிலவுகிறது என அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறினாலும் வடக்கு கிழக்கு உட்பட இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்பதை மேற்குலக நாடுகள் உடனுக்குடன் பெற்றுக்கொள்கின்றன. இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்பதை அவர்கள் மிகத்தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் எந்த அச்சுறுத்தலும் இல்லை, அங்கு பூரண ஜனநாயகம் நிலவுகிறது என அமைச்சர் மகிந்த சமரசிங்க ஐ.நா.அரங்கிலே முழங்கி கொண்டிருந்த அதே சமகாலத்தில் சிறிலங்காவின் பிரதான ஆளும் கட்சியான சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால செனநாயக்க கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறியிருந்தார். அமைச்சர் மைத்திரிபால செனநாயக்கா ஆளும் கட்சியான சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் மட்டுமல்ல, சிறிலங்கா சுதந்திர கட்சியில் ஜனாதிபதி மகிந்த ராசபக்சவை விட சிரேஷ்ட உறுப்பினர். அவருக்கு உயிர் அச்சுறுத்தல் என்றால் அவரை விட பலம் வாய்ந்தவர்களால் தான் ஏற்பட முடியும்.

இலங்கையில் தற்போது மைத்திரிபால செனநாயக்காவை விட அதிகாரம் கூடியவர்கள் மூவர் மட்டுமே உள்ளனர். ஒன்று ஜனாதிபதி மகிந்த ராசபக்ச, இரண்டாவது பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராசபக்ச, மூன்றாவது அமைச்சர் பஷில் ராசபக்ச, இந்த மூவரை தவிர வேறு எவருமே மைத்திரிபால செனநாயக்காவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கமுடியாது.

ஏனெனில் இந்த மூவருக்கு அடுத்த பலத்தில் இருப்பவர் அமைச்சர் மைத்திரிபால செனநாயக்கா, வேடிக்கை என்வென்றால் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கையின் பிரதிநிதி மகிந்த சமரசிங்க பேசிய பேச்சு பொய் என்பதை சிறிலங்கா அரசாங்கத்தின் ஆளும் கட்சியின் சிரேஷ்ட அமைச்சரான மைத்திரிபால செனநாயக்காவே நிரூபித்து விட்டார். இலங்கை பிரதிநிதி அமைச்சர் மகிந்த சமரசிங்க ஐ.நா.பேரவையில் ஆற்றிய உரையில் அடங்கிய விடயங்கள் பொய்யானவை என்பதை இலங்கையின் பொது அமைப்புக்களின் பிரதிநிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய நிமல்கா பெர்னாண்டோவின் உரை அமைந்திருந்தது.

சிறிலங்கா அரசாங்கம் தன்னிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது என கூறுவது உண்மையல்ல, அது ஜனநாயக ரீதியில் பெறப்பட்ட பெரும்பான்மை அல்ல என்பதை தெளிவு படுத்தினார், பணபலம், அதிகாரபலத்தின் மூலமே இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இப்போது அரசாங்கம் வைத்திருக்கிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விலைக்கு வாக்கி விட்டோம் என்பதற்காக எப்படி ஜனநாயகம் அங்கு நிலவுகிறது என கூற முடியும் என்பதையும் அவர் தனது நான்கு நிமிட பேச்சில் விளக்கியிருந்தார்.

இராணுவ நெருக்கடி, ஊடக அடக்குமுறை, நீதித்துறை மீதான தலையீடு, என்பவற்றை சுட்டிக்காட்டியிருந்த நிமல்கா பெர்னாண்டோ இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களுக்கு நீதியான சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்பதையும் வலியுறுத்தியிருந்தார்.

நிமல்கா பெர்னாண்டோவின் பேச்சை மூக்கை சுழித்தவாறு கேட்டுக்கொண்டிருந்த சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க உட்பட இலங்கை பிரதிநிதிகள் கடந்த வருடத்தை போன்று ஐ.நா.மனித உரிமை பேரவை கட்டிடத்திற்குள் வைத்தே அச்சுறுத்தல் விடுக்க முடியாதவர்களாக இருந்தனர். கடந்த வருடம் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்திற்கு என 75க்கும் மேற்பட்டவர்கள் சிறிலங்கா அரச பிரதிநிதிகளாக வந்திருந்தனர்.

அவர்களில் இராணுவ புலனாய்வு பிரிவினர், சதீஸ்வாஸ் குணவர்த்தனா தலைமையிலான சண்டியன் குழுக்கள், ரவூக் ஹக்கீம், றிசாத் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா, போன்றவர்களும், இறுதி யுத்தம் வரை விடுதலைப்புலிகளின் பகுதியில் இருந்து பின்னர் அரச தரப்புக்கு மாறிய கனகரத்தினம், வெளிநாடுகளில் சிறிலங்கா அரசுக்காக பிரசாரம் செய்து வரும் ஒஸ்ரேலியா நோயல் நடேசன் போன்றவர்களும் வருகை தந்திருந்தனர்.

இவர்களில் இராணுவ புலனாய்வு பிரிவினரும், சதீஸ்வாஸ் குணவரத்தனாவுடன் வருகை தந்திருந்த சண்டியன் குழுக்களும் இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்து கொண்டனர். இலங்கைக்கு நீங்கள் மீண்டும் திரும்பி வரமுடியாது என நேரடியாகவும் இவர்கள் நிமல்கா பெர்னாண்டோ போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.

இந்த அச்சுறுத்தல் குறித்து இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஐ.நா.மனித உரிமை பேரவை ஆணையாளர் நாயகத்திடம் முறைப்பாடு செய்திருந்தனர். இலங்கையில் மட்டுமல்ல ஐ.நா.மனித உரிமை பேரவைக்குள்ளேயே வந்து சிறிலங்கா அரச தரப்பினர் அச்சுறுத்தல் விடுகின்றனர் என்பதை மேற்குலக இராஜதந்திரிகள் நேரடியாகவே கண்டு கொண்டனர். பின்னர் சிறிலங்கா அரச தரப்பிற்கு ஐ.நா.மனித உரிமை பேரவை அலுவலகத்தால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சிறிலங்கா அரச தரப்பின் அச்சுறுத்தல்கள் அட்டகாசங்கள் ஜெனிவாவில் குறைவாகவே காணப்படுகிறது. பெட்டிப்பாம்பாக அவர்கள் அடங்கியிருப்பதை அவதானிக்க முடிகிறது. இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும், பலரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா செல்கிறது, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜெனிவா செல்கிறது என இலங்கை பத்திரிகைகளிலும் தமிழ் இணையத்தளங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் அவர்களில் பலருக்கு ஜெனிவா நகருக்கு வருபவர்கள் எல்லோரும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டடங்களில் கலந்து கொள்ள முடியாது என்பதை அறியாதவர்களாகவே உள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் இம்முறை ஜெனிவா வந்திருப்பது உண்மைதான். ஆனால் வந்திருப்பது ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அல்ல. சனிக்கிழமை ஜெனிவா நகரில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்ற தமிழர் உரிமை மகாநாட்டிலும், நாளை திங்கட்கிழமை ஜெனிவாவில் நடைபெற இருக்கும் ஊர்வலத்திலும் கலந்து கொள்வதற்காகவே இங்கு வருகை தந்துள்ளனர்.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் போன்றவர்களுக்கு ஜெனிவா நகர் வேறு, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டம் வேறு என்பது தெரியாமல் இருப்பதுதான் வேடிக்கை. கடந்த முறை ஏன் நீங்கள் ஜெனிவாவுக்கு வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை ஐரோப்பிய தொலைக்காட்சி ஒன்று கேள்வி எழுப்பிய போது கடந்த முறை நான் ஜெனிவாவுக்கு சென்றிருந்தேன் என பதிலளித்திருந்தார். கடந்த ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் காலத்தில் சிறிதரன் ஜெனிவாவுக்கு சென்றது உண்மைதான்.

ஆனால் அவர் ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர் கலந்து கொண்டது ஜெனிவா நகரில் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியில் தான். ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதாக இருந்தால் மூன்று தரப்பிற்கு மட்டும் தான் அனுமதி உண்டு.

ஓன்று ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் நாடுகளின் அரச பிரதிநிதிகள், இரண்டு அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமை அமைப்புக்கள், மூன்று பத்திரிகையாளர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வமாக கலந்து கொள்ளமுடியாது. மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்ற பெயரில்தான் கலந்து கொள்ள முடியும்.

ஆனால் ஒரு நாடு கோரும் பட்சத்தில் ஒரு சமூகத்தின் அல்லது இனத்தின் பிரதிநிதிகளாக ஒரு தரப்பை ஐ.நா.மனித உரிமை பேரவை ஆணையாளரால் அழைக்க முடியும். அப்படி எந்த ஒரு நாடும் தமிழர் பிரதிநிதிகளை ஒரு தரப்பாக அழைக்குமாறு கோரவில்லை. அவ்வாறு கோராத பட்சத்தில் ஜெனிவா நகருக்கு வந்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது.

 அவர்கள் கலந்து கொள்வதாக இருந்தால் மனித உரமை அமைப்புக்களின் பிரதிநிதிகளாக கலந்து கொள்ள முடியும். சுமந்திரன் கலந்து கொண்டது மனித உரிமை அமைப்புக்களின் கீழ் வரும் சட்டத்தரணிகள் அமைப்பின் ஊடாகவே அவர் கலந்து கொண்டார்.

ஜெனிவா நகரில் மைனஸ் நான்கு பாகை குளிர் காணப்பட்டாலும் ஜெனிவா நகருக்கு வந்திருக்கும் சில தமிழ் அரசியல்வாதிகள் காட்டும் ஏமாற்று வேலைகளை பார்க்கும் போது 40பாகை வெப்பத்தில் கோபம் வருகிறது.

இரா.துரைரத்தினம்

No comments:

Post a Comment