Wednesday 27 March 2013

மீண்டும் இலங்கை செல்வோருக்கு பயண எச்சரிக்கை விடுத்த பிரிட்டன்


இலங்கை அரசாங்கம் தற்போது மேற்குலக நாடுகள் மீது தனது வலுவான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளமை காரணமாக, இலங்கைக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானிய பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இவ்வாறான மேற்கத்தைய எதிர்ப்பு நிலை காரணமாக அங்கு பயணம் செய்யும் தனது நாட்டுப் பிரஜைகள் கவனமாகச் செயற்பட வேண்டுமெனவும் அது கேட்டுள்ளது.

இலங்கையிலுள்ள பிரித்தானிய துதுவராலயம் உட்பட ஏனைய வெளிநாட்டு தூதரங்களுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்யும் பிரஜைகள் ஆபத்துகளை எதிர்நோக்கிய சந்தர்ப்பங்கள் குறைவாகக் காணப்பட்டாலும், வேறு பல சம்பவங்கள் மூலம் அவர்கள் பாதிப்புகளை எதிர்நோக்குகின்றனர்.

அத்துடன் இலங்கையில் தொடர்ந்தும் பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளை அரசாங்கம் தோற்கடித்திருந்தாலும் அரச பயங்கரவாதம் மேலோங்கிக் காணப்படுகிறது.
தடுத்து வைத்தல், கைது போன்றன இடம்பெறுகின்றன.

இராணுவக் கெடுபிடிகள், சோதனைச் சாவடிகளும் இலங்கையில் தாராளமாகவே காணப்படுகின்றன.

ஆயுதக் குழுக்களினால் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள் தொடர்வதாகவும் பிரித்தானியா அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment