Friday 29 March 2013

கொழும்பில் முஸ்லிம்கள் மீது சிங்களவர் இனவெறித்தாக்குதல்

 

இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பொரலஸ்கமுவ பெப்பிலியான சந்தியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான பிரபல துணிக்கடை ஒன்றின் மீது பௌத்த பிக்குகள் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 வன்முறைக் கும்பலொன்று கடையின் மீது கற்களை வீசியெறிந்து தாக்குதல் நடத்தியதுடன் கடை உரிமையாளர்களையும் கீழ்த்தரமாக விமர்சித்து கோசமிடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். பிக்குகள் தலைமையிலான கூட்டம் திடிரென்று 500 பேரளவில் அதிகரித்ததாகவும், அவர்கள் அங்கு கூடிய ஊடகவியலாளர்களையும் சுற்றிவளைத்துக் கொண்டதாகவும் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

 வன்முறைகள் பரவமுன்னர், அங்கிருந்த பொலிசார் வன்முறையாளர்களைத் தடுக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். வன்முறைகள் பரவிய பின்னரே, பொலிசார் பின்னர் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது. 'சிறப்பு அதிரடிப் படையினரையும் காவல்துறையினரையும் மேலதிகமாக ஈடுபடுத்தி பிரதேசத்துக்கு பாதுகாப்பு' அளித்துவருவதாக இலங்கை காவல்துறை பேச்சாளர் புத்திக சிறிவர்தன ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்துள்ளார்.

 'சில மணிநேரத்துக்குள்' நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், காதல் விவகாரம் ஒன்றினாலேயே இந்தத் துணிக்கடை மீது இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்குவந்த பின்னர், அங்கு கடந்த 4 ஆண்டுகளில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த கடும்போக்கு அமைப்புகள் மேற்கொண்டுவரும் பிரச்சாரங்களுக்கு மத்தியிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. வரும் ஏப்ரல்மாத புத்தாண்டுத் தருணத்தில் மக்கள் முஸ்லிம் கடைகளில் பொருள் வாங்கக்கூடாது என்று கடும்போக்கு பௌத்த வாத அமைப்புகள் தொலைபேசி எஸ்எம்எஸ் மூலம் பிரச்சாரம் செய்துவந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment