Wednesday, 6 March 2013

இணையற்ற மக்கள் நாயகன்!


ஹியூகோ சாவேஸ் எனும் இணையற்ற நாயகன் மீளாத்துயிலில் ஆழ்ந்து விட்டார்.

அமெரிக்காவுக்கு க்யூபாவுடன் இணைந்து மிகப்பெரிய சிம்மசொப்பனமாக இருந்த நாயகன் இவர்.

இளம் வயதில் ராணுவத்தின் மீது ஆசை கொண்டு அதில் இணைந்து பணியாற்றினார். தென் அமெரிக்காவின் இணையற்ற நாயகர்களான சே, சைமன் பொலிவர் ஆகியோரின் வாழ்வும், சிந்தையும் அவரை வீறுகொள்ள வைத்தன.

கேப்டனாக உயர்ந்து ராணுவப்பள்ளியில் பாடம் எடுக்க போனார்; அதற்குள் வெலஸ்கோ எனும் ராணுவ தளபதியை சந்தித்தார். புரட்சிகர கருத்துக்கள் அவரிடம் தெறித்தன; ஊழலில் இருந்து நாட்டை மீட்க வேண்டும் எனும் அவரின் குரல் காதுகளை நிறைத்தது.

பனாமாவின் அதிபரை பார்த்தார். எளிய மக்களுக்கு நிலங்களை பிரித்து கொடுத்த அவரின் சாதனைகள் இவர் நெஞ்சை தொட்டன. அமெரிக்காவின் கைக்கூலியாக இருக்க மாட்டேன் என சொல்லி பெரேஸ் ஆட்சிக்கு வந்தார். ஐ எம் எப் விதித்த கட்டுபாடுகளை ஏற்றுக்கொண்டு அப்படியே செயல்பட்டார்.

மக்களை கண்டுகொள்ளாமல் ஊழல்கள் தூள் பறந்தன. பார்த்தார் சாவேஸ். புரட்சி என முடிவு செய்தார்; போலிவர் படை என அவர் உருவாக்கி இருந்த வீரர் கூட்டம் புரட்சியில் இறங்கியது. புரட்சி தோல்வியடைந்து சிறைப்பட்டார்.

'இப்போதைக்கு தான் தோல்வி மீண்டு வருவோம் தோழர்களே’ என முழங்கினார். அடுத்து ஆட்சிக்கு வந்தவர் இவரை விடுவித்தார். மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். ஆட்சிக்கு வந்தார்.

தன் வருமானத்தை முழுக்க நாட்டுக்கு கொடுத்தார்; ஆடம்பரங்களை கட் செய்தார். முதலில் முதலாளித்துவம் நாட்டை முன்னேற்றும் என பணிகளை அதன் போக்கில் செய்தார். ஒன்றும் மாற்றமில்லை; கேஸ்ட்ரோவை சந்தித்தார். "என் தந்தை போன்றவர் அவர்!" என்றார்.

கேஸ்ட்ரோ, "ஒரு போராளி குறைகிறான் என்றால் நான் இருக்கிறேன்’’ என்றார் நடுவில். ஒரு நாற்பத்தி எட்டு மணிநேரம் அவரை ஆட்சியை விட்டு அனுப்பினார்கள் சில போராட்டக்காரர்கள்.

ராணுவத்தின் உதவியோடு ஆட்சிக்கு வந்தாலும் ஜனநாயக முறையை கைவிடவில்லை மனிதர். எவ்வளவு திட்டங்கள் போட்டாலும் நடைமுறைக்கு வருவதில் சிக்கல் ஏன் என ஆராய்ந்தார். ஏகத்துக்கும் ராணுவத்துக்கு செலவாவதை கண்டார்; ராணுவத்துக்கு மக்கள் சேவை தான் முக்கிய வேலை என அறிவித்து, உணவு பதுக்கல்காரர்களை பிடிக்க, மருத்துவ உதவி தேவைப்படும் மக்களை ராணுவ விமானத்தில் ஏற்றிப்போதல், மருத்துவ சேவை செய்தல் என அதன் போக்கை மாற்றினார்.

பெட்ரோலியம் தான் நாட்டின் உயிர்நாடி; அஞ்சாமல் அமெரிக்காவின் நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோலிய வளத்தை மீட்டு தேசியமயமாக்கினார்.

சோயாபீன்ஸ் உற்பத்தியை மூன்று மடங்கு பெருக்கி விவசாய முன்னணியில் சாதித்தார்; பதினான்கு ஆண்டுகள் தொடர்ந்து வெனிசுலாவின் அதிபராக இருந்த காலத்தில் அமெரிக்காவின் எதேச்சதிகாரத்தை முழுமூச்சாக எதிர்த்தார். பெட்ரோலிய விற்பனையை யூரோவில் செய்ய ஆரம்பித்தார்.

ஒபாமாவை ஜோக்கர் என்றும், புஷ்ஷை பொய்யர், கொலைகாரன், உலகத்தின் மிக மோசமான மனிதன் என சொன்ன சாவேஸ், உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என கம்பீரமாக சொன்னார். அமெரிக்காவுக்கு அவர் எப்படி இருந்தார் என்பதை அவர் கண்டலீசா ரைசிடம் சொன்ன வரிகளே விளக்கும்.. "ஹே குட்டிப்பெண்ணே! சமவெளியில் முற்கள் நிறைந்த மலர் சொரியும் மரம் நான். என்னை கடந்து போகிறவர்கள் மீது நான் இதமான சுகந்தத்தை தெளிப்பேன். என்னை உலுக்கினால் முற்களால் தைத்து விடுவேன்"

44 வயதிலிருந்து இப்பொழுது இறக்கிற வரை மக்களின் நாயகனாக இருந்த சாவேஸ், வறட்டு வார்த்தைகளால் நிறைக்காமல் செயலால் பொல்லிவரின் வாள் போல வெனிசுலா மக்களின் வாழ்க்கையை மீட்ட ரட்சகன்!

‘கண்ணீர் அஞ்சலி காம்ரேட்!’ என்கின்றனர் மக்கள்.

- பூ.கொ.சரவணன்

No comments:

Post a Comment