Sunday, 6 October 2013

சூடான் ஜனாதிபதியின் நிலை இலங்கைக்கும் ஏற்படுமா?


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐநா பொதுச்சபையில் நிகழ்த்திய உரை குறித்து, அமெரிக்காவின் பிரபலமான லொஸ்ஏஞ்சல்ஸ் ரைம்ஸ் நாளிதழில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.

அந்தக் கட்டுரையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அடுத்தமுறையும் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க வருவாரேயானால் அதிகளவில் அசௌகரியமான வரவேற்பை பெறக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தார் அதை எழுதிய சசாங் பெங்காலி.

ஐநா பொதுச்சபைக் கூட்டங்களில் முன்னரெல்லாம் லிபிய அதிபர் கடாபி, ஈரானிய அதிபர் மஹ்மூட் அகமட்நிஜாட் போன்றவர்கள் ஐநாவையும் மேற்குலகையும் அதிகம் விமர்சிப்பவர்களாக இருந்து வந்துள்ளனர்.
இப்போது அவர்கள் யாரும் பதவியில் இல்லை.

கடாபி மரணமாகிவிட்டார். ஈரானிய அதிபராக இருந்த அகமட்நிஜாட் பதவியை விட்டு விலகிவிட்டார்.

இந்தநிலையில் பொதுச்சபையின் 68வது கூட்டத்தொடரில் ஐநாவைப் பற்றியும் மேற்குலகைப்பற்றியும் சூசகமான முறையில் விமர்சித்து சர்ச்சையைக் கிளப்பியிருந்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. மனித உரிமை, ஜனநாயகம் போன்ற ஆயுதங்களை வைத்து சிறிய நாடுகளை வல்லமை மிக்க நாடுகள் துன்புறுத்துவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்தக் கருத்து இலங்கை மீதாக அமெரிக்காவினதும், மேற்குலகினதும் அழுத்தங்களின் வெளிப்பாடுதான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

சிறிய நாடான இலங்கை மீது மனித உரிமை உள்ளிட்ட விவகாரங்களைப் பயன்படுத்தி அனைத்துலக சமூகம் அதிகளவு அழுத்தங்களைக் கொடுக்கிறது என்பது இலங்கை அரசாங்கத்தினது கருத்தாக உள்ளது.

ஆனால் சர்வதேச சமூகத்தினது பார்வையில் குறிப்பாக மேற்குலகின் பார்வையில் இலங்கை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத நாடாக எதேச்சதிகார நாடாகப் பார்க்கப்படுகிறது.

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வெளியிட்ட கருத்தை இந்த நாடுகள் பெரும்பாலும் ஏற்கின்ற நிலையில் இருக்கின்றன.

எதேச்சதிகாரப் போக்கில் செல்வதாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் தாம் பதவிக்கு வந்த பின்னர் எத்தனை தேர்தல்களை நடத்தியிருக்கிறோம் என்று கணக்குக் காட்டியிருக்கிறது.

ஆனால் தேர்தல் மூலமான தெரிவு என்பது முற்றிலும் ஜனநாயக சூழலைப் பிரதிபலிப்பதாக அர்த்தமில்லை என்பதே மேற்குலகின் வாதம்.

ஏனென்றால் பல தசாப்தங்களாக ஆட்சயைத் தம் கைக்குள் வைத்திருந்த பல சர்வாதிகாரிகள் தேர்தலைத் தமக்கு சார்பாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் தான்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஆட்சியில் இருக்கும் ஸிம்பாப்வே அதிபர் ரொபர்ட் முகாபே அண்மையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் 7வது தடவையாக வெற்றி பெற்றிருந்தார்.

ஆனால் அங்கு மோசமான மனித உரிமை மீறல்கள் நடப்பதும், அவரது ஆட்சி சர்வாதிகாரப் போக்கு கொண்டது என்பதும் வெளிப்படையான உண்மைகள்.
ஆனாலும் அவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களால் வெற்றி பெற முடியவில்லை.
இப்படிப்பட்ட சூழலுக்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

ஆட்சியிலிருப்பவர்கள் எல்லாவற்றையும் தன் கைக்குள் போட்டுக் கொண்டு பிறர் வெற்றி பெற முடியாதளவுக்கு தேர்தலில் செல்வாக்கு செலுத்துபவராக இருக்க வேண்டும்.

அல்லது வலுவான எதிர்க்கட்சியோ வேட்பாளரோ இல்லாதிருக்க வேண்டும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் இவற்றில் எந்தச் சூழல் உள்ளது என்பதை புரிந்து கொள்வது ஒன்றும் சிரமமான காரியமில்லை.

இலங்கையில் அரசாங்கத்தை எதிர்த்து, தேர்தலில் வெற்றி கொள்வது எத்தகைய சிரமமான காரியம் என்பதை உலகம் ஓரளவுக்கேனும் புரிந்து கொண்டுள்ளது.

அதையெல்லாம் தாண்டி வெற்றி பெற வேண்டும் என்றால் அண்மையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களித்தது போன்று பெருமளவு மக்கள் துணிச்சலோடும் எழுச்சியோடும் வாக்களிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
போர் வெற்றி மாயை என்ற தெற்கிலுள்ள மக்களின் பலவீனத்தை அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தனது அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்வதை உலகம் அவ்வளவாக சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை.

அதனால்தான் நவநீதம்பிள்ளையின் வாயில் இருந்து எதேச்சதிகாரப் போக்கு பற்றிய கருத்து வெளியானது.

அதுமட்டுமன்றி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முழுமையான அறிக்கையை அவர் சமர்ப்பிக்கப் போகிறார்.

அவரது வாய்மூல அறிக்கையில் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் முன்னேற்றகரமான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதுமட்டுமன்றி வரும் 2014 மார்ச் மாதத்துக்குள் பொறுப்புக் கூறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் தனியான விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் கடப்பாடு சர்வதேச சமூகத்துக்கு உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சர்வதேச விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் அதிகாரத்தை நவநீதம்பிள்ளை கொண்டிருக்காது போனாலும் சர்வதேச சமூகத்தின் துணையுடன் அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளும் நிலையில் அவர் இருக்கிறார்.

அவரது நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதாக அமெரிக்கா ஒன்றுக்கு இரண்டு முறை அதிகாரபூர்வமாகவும் அறிவித்துள்ளது.

ஆக வரும் மார்ச் மாதத்துக்குள் பொறுப்புக் கூறுவதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்க அரசாங்கம் தவறினால் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் சர்வதேச சமூகம் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
ஆனால் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லாது போனாலும் சர்வதேசப் பொறிமுறையைத் தவிர்ப்பதற்கான எந்த முயற்சிகளிலும் ஈடுபட அது தயாராக இல்லை.

இத்தகையதொரு சூழலில் தான் லொஸ்ஏங்சல்ஸ் ரைம்ஸ் கட்டுரை கடாபி, அஹமட்நிஜாட் போன்றவர்களையும் நினைவுபடுத்தி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பற்றிய கட்டுரையை வரைந்துள்ளது.

அதுமட்டுமன்றி டார்பூர் பிராந்தியத்தில் இனப்படுகொலை மற்றும் பிற குறறங்களில் ஈடுபட்டதற்காக அனைத்துலக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சூடானிய அதிபர் ஒமர் ஹசன் அகமட் பஷிரையும் தொடர்புபடுத்தி இந்தக் கட்டுரை வரையப்பட்டுள்ளது.

சூடானிய அதிபர் பஷீர் இம்முறை ஐநா பொதுச்சபைக் கூட்டத்துக்கு செல்ல முடியவில்லை.

காரணம் அவர் மீதான போர்க்குற்ற விசாரணை தான்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறத் தவறினால் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புத் தான், அடுத்தமுறை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐநா பொதுச்சபைக் கூட்டத்துக்கு வருவாரேயானால் அசௌகரியமான வரவேற்பை சந்திக்க நேரலாம் என்று லொஸ்ஏஞ்சல்ஸ் ரைம்ஸ் கட்டுரை குறிப்பிட்டதற்குக் காரணம்.

இது இலங்கை அரசாங்கம் சர்வதேச அளவில் பாரிய நெருக்கடிகளைச் சந்திப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன என்ற கருத்தையே பிரதிபலிக்கிறது.

No comments:

Post a Comment