Saturday 19 October 2013

பூசாவில் தடுப்புக்காவலில் இருக்கும் இளைஞரின் குடும்பத்தினர் மீண்டும் சுவிஸ் திரும்பினர்


இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளும், கைதுகளும், பாலியல் வன்புணர்வு சம்பவங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில் வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள தமிழ் அகதிகளின் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு திருப்பியனுப்பப்படுவது தொடர்ச்சியாக நிகழ்வாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு திருப்பியனுப்பப்படுவோர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக மனித உரிமை அமைப்புகள்  தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் நிலையில், அண்மையில் சுவிற்சர்லாந்திலிருந்து திருப்பியனுப்பப்பட்ட குடும்பம் ஒன்றின் குடும்பத்தலைவன் கைது செய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இலங்கையைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை அகிலரூபன் அவரது கர்ப்பிணி மனைவியான சாளினி மற்றும் இவர்களது பிள்ளைகளான தமிழவன் (4 வயது), ஓவியா (3 வயது) ஆகியோர் 21.08.2013 அன்று சுவிஸ் அரசாங்கத்தினால் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். 28.08.2013 அன்று இலங்கை விமான நிலையத்தைச் சென்றடைந்த இவர்கள் விமானநிலையத்தில் 13 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட பின்னர், அகிலரூபன் கைது செய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவரது மனைவியின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு மனைவியும், இரண்டு குழந்தைகளும் சுவிஸ் அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டதையடுத்து 14.08.2013 அன்று மீண்டும் சுவிற்சர்லாந்து திரும்பியுள்ளனர்.

இவர்கள் தற்பொழுது செங்காளன் மாநிலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனினும், தனது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு சூரிச் மாநிலத்தில் தங்கள் உறவினர்களுக்கு அண்மையில் தங்க வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இவரைப்போன்று, ஜூலை 12 ஆம் திகதி திருப்பியனுப்பப்பட்ட தமிழ் இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டு கொழும்பிலுள்ள சிறைச்சாலை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் பலத்த சித்திரவதைகளுக்கும், அடிகாயங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக இவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இவ்விரு கைதிகளினதும் தகவல்கள் மற்றும் உடல்நிலை பற்றிய தகவல்களைப் பெற சுவிஸ் தூதரகம், யு.என.;எச்.சி. ஆருடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சுவிஸ் அகதிகள் அதிகார சபையின் இயக்குனர் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை அகதிகள் தற்போதைக்குத் திருப்பியனுப்பப்படமாட்டார்கள். எனினும், இதுவொரு தற்காலிக நடவடிக்கை தான். நாட்டிற்குத் திருப்பியனுப்பக் காத்திருக்கும் 140 இலங்கையரையும் யு.என்.எச்.சி.ஆர் மூலம் தஞ்ச நடைமுறையின் கீழ் வெளிப்புற விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்.

இவர்கள் தாங்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், உயிராபத்தை எதிர்கொள்ள நேரிடும் என முன்னரே சுவிஸ் அதிகாரிகளிடம் எழுத்து மூலம் தெரிவித்துள்ள நிலையிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாதம் திருப்பியனுப்பப்பட்டவரின் சட்டத்தரணி தெரிவிக்கையில், தனது வாடிக்கையாளர் ஏற்கனவே இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமையால் தலையில் ஏற்பட்ட காயங்கள் தொடர்பாகவும் தெரிவித்திருந்தார். அவர் விடுதலையாக கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

சுவிஸ் அகதிகள் சபையின் 2011 கோடை கால அறிக்கையின் பிரகாரம், மத்திய நிர்வாக நீதிமன்றத்தினால் தமிழர்களுக்குத் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை நியாயமான என்பதை வலியுறுத்தினார். ஐரோப்பிய நாடுகளில் சுவிற்சர்லாந்து மட்டுமே தற்பொழுது திருப்பியனுப்புவதை நிறுத்தி வைத்துள்ளது. எனினும், இதுவொரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே என்றார்.

கைது செய்யப்பட்ட இருவரும் சுவிற்சர்லாந்தில் புலிகளுக்கு ஆதரவாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் என இலங்கை அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment