Tuesday 18 March 2014

வடக்கில் தொடரும் இராணுவ அடாவடி


 வடபுலத்தில் இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திவரும் கைதுகள் மற்றும் அடாவடித்தனங்களால் வன்னி அதிர்ந்தவண்ணமுள்ளது. கிளிநொச்சியில் ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் கைதுசெய்யப்பட முன்னர் மார்ச் 12 ஆம் திகதி திருமலை பாலையூற்றைச் சேர்ந்த பாலகுருபரன் தர்மிலா என்கின்ற கர்ப்பிணி தாய் அவரது நான்கு வயது மகனுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இவரது கணவரும் யாழ்ப்பாணம் ஏழாலைப்பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இதேநாள் விசுவமடுவில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த தாய் மற்றும் இருபிள்ளைகள் கைதாகியுள்ளனர். அவ்வாறு கைதுசெய்யப்பட்ட பிள்ளைகளுள் ஒருவரான் நிதர்சனா – வயது 27 பயங்கரவாத தடுப்பு பொலிசாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில்இரு இளைஞர்கள் பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கடுமையான தாக்குதல்களின் பின்னராக விடுவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று காலை அப்பிரதேசத்திற்குச் சென்ற பொலிஸாரும் இராணுவப் புலனாய்வாளர்களும் கைது செய்யப்பட்ட 34 வயதுடைய யோ. கலாதரன் என்பவரின் சாயலை ஒத்த புகைப்படத்தை அங்குள்ள கடைகளிலும் வீதியில் சென்றவர்களிடமும் காட்டி விசாரித்துள்ளனர்.

அதன் பிரகாரம் ஆனந்தபுரம் வீதியிலுள்ள குறித்த இளைஞனின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் அவருக்கு கைவிலங்கைப் போட்டுக் கைது செய்தனர். இச்சம்பவத்தை தொலைபேசியில் வீடியோப் பதிவு செய்ய முயற்சி செய்த குறித்த இளைஞனின் தம்பியான யோ. 31 வயதுடைய சுதாகரன் என்பவரையும் தமது பணிக்கு இடையூறு விளைவித்தார் எனக் கூறி அவரையும் கைது செய்து அழைத்துச் சென்றிருந்தனர்.

எனினும் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பளையில் நேற்றும் இளைஞரொருவர் கைதாகியுள்ளார். இதையடுத்து கைதானவர்களது எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியினில் மற்றுமொரு இளைஞன் நேற்று கைதான போதும் அவர் பின்னராக விடுவிக்கப்பட்டுள்ளான். இன்று காலை வரையாக வன்னியில் எண்மர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.