Thursday, 10 April 2014

தமிழீழ விடுதலைப்புலிகள் கொழும்பில் சிக்கிய எப்படி? பாகம் 02


இலங்கையில் இறுதி யுத்தம் மும்மரமாக நடந்து கொண்டிருந்தபோது, இலங்கை உளவுத்துறை SIS-க்கு, வெளிநாட்டு உளவுத்துறை ஒன்றிடம் இருந்து உளவுத் தகவல் ஒன்று வந்தது. வெளிநாட்டு உளவுத்துறை, வெறும் தகவலை மட்டும் கொடுக்கவில்லை. கொழும்புவில் இருந்த விடுதலைப்புலிகளின் இணைப்பாளர் பயன்படுத்திய போன் இலக்கத்தையும் கொடுத்தது.

இலங்கை உளவுத்துறையினர் இந்த செல் போன் இலக்கத்தை தொடர்பு கொள்ள முயன்றபோது, மறுமுனையில் யாரும் பேசவில்லை.
இது விடுதலைப் புலிகளின் வழமையான பாணி என்பது இலங்கை உளவுத்துறைக்கு தெரியும். கொழும்புவில் ஊடுருவியிருந்த விடுதலைப் புலிகள், தமது இயக்க வேலைகளுக்கு ஒரு பிரத்தியேக போன் வைத்திருப்பார்கள். சொந்த பாவனைக்கு வேறு போன் வைத்திருப்பார்கள். இயக்க பாவனைக்கான போனில், தமக்கு தெரிந்த, பரிச்சயமான இலக்கத்தில் இருந்து அழைப்பு வராவிட்டால், பேச மாட்டார்கள்.

இதனால், வெளிநாட்டு உளவுத்துறையிடம் இருந்து, விடுதலைப்புலி இணைப்பாளரின் செல் போன் இலக்கம் கிடைத்தும், உடனடி பலன் ஏதும் கிட்டவில்லை இலங்கை உளவுத்துறைக்கு.

அந்த இலக்கத்துக்குரிய சிம் கார்ட் யாருடைய பெயரில் எடுக்கப்பட்டது என்று பார்த்தபோது, போலி பெயர், மற்றும் முகவரியில் எடுக்கப்பட்ட சிம் என்று தெரிந்தது. அதிலும் பயனில்லை.

அந்த இலக்கத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட போன் அழைப்புகள் பற்றிய தகவல்களை பெற்று அவற்றை செக் பண்ணினார்கள்.

இன்-கம்மிங், மற்றும் அவுட்-கோயிங் கால்கள், இரண்டும் சேர்த்து மொத்தம் 74 இருந்தன. இதில் 70 கால்கள் வெளிநாடுகளுக்கு போனவை, அல்லது, வெளிநாட்டில் இருந்து வந்தவை. 4 லோக்கல் கால்கள். இந்த 4 கால்களுமே மிஸ்ட்டு கால்கள். அவை இரு லோக்கல் இலக்கங்களை அழைத்த கால்கள்.
ஒரு லோக்கல் இலக்கத்துக்கு ஒரு கால், மற்றொரு இலக்கத்துக்கு மூன்று கால்கள். இரண்டு இலக்கங்களுமே, ஓரிரு எண்கள் மாறுபடும், நெருக்கமான இலக்கங்கள்.

இந்த இரு லோக்கல் இலக்கங்களையும் ஆராய்ந்தது இலங்கை உளவுத்துறை.
இவற்றில் ஒரு இலக்கம், தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட அழைப்பு என தெரிந்தது. அதை விட்டுவிட்டு மற்றைய இலக்கத்தை பார்த்தால், அது ஒரு எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி அலுவலகத்தின் இலக்கம்.

இதுதான், உளவுப் பிரிவுக்கு கிடைத்த முதலாவது தடயம்.

அந்த போன் இலக்கத்துக்குரிய எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சியை உளவுத்துறை கண்காணித்ததில், அதன் உரிமையாளர் வெளிநாடு சென்றிருப்பது தெரிந்தது.
விடுதலைப்புலி இணைப்பாளரின் போனில் இருந்து அழைப்புகள் வந்தபோது, எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளர், இலங்கையில் இல்லை என்பதை, இமிகிரேஷன் இலாகா முலம் உறுதி செய்து கொண்டது உளவுத்துறை. அதுதான், விடுதலைப்புலி இணைப்பாளரின் அழைப்பு, மிஸ்ட்டு காலாக போயிருந்தது என்பது புரிந்தது.

எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளரின் பெயரை, இமிகிரேஷன் பிளாக் லிஸ்ட்டில் சேர்த்துக் கொண்டது உளவுத்துறை.

இதையடுத்து இந்த நபர் வெளிநாட்டில் இருந்து கொழும்பு வந்து இறங்கியபோது, விமான நிலைய இமிகிரேஷனில் தடுக்கப்பட்டார். இமிகிரேஷன் அதிகாரிகளிடம் இருந்து தகவல் வரவே, விமான நிலையம் சென்று அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது, உளவுத்துறை.
எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளரை, விடுதலைப்புலி இணைப்பாளர் அழைத்த (அவரது சொந்த) இலக்கத்தில் இருந்து, வெளிநாட்டு உளவுத்துறை கொடுத்த செல் போன் இலக்கத்தை அழைக்க வைத்தார்கள், உளவுத்துறையினர்.

இப்போது, மறுமுனையில் போன் எடுக்கப்பட்டது. (காரணம், விடுதலைப்புலி இணைப்பாளருக்கு தெரிந்த, பரிச்சயமான இலக்கம் அது!)

உளவுத்துறையினர் சொல்லிக் கொடுத்தபடியே பேசினார், எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளர். தாம் வெளிநாடு சென்றிருந்ததாகவும், இப்போது நாடு திரும்பி, தமது போனில் பதிவாகி உள்ள மிஸ்ட்டு கால்களை தொடர்பு கொள்வதாகவும் சொன்னார் அவர்.

மறுமுனையில் பேசியவர், “என்னை இந்த இலக்கத்தில் அழையுங்கள்” என மற்றொரு போன் இலக்கத்தை கொடுத்தார்.

இவர் விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவர்தான் என்பது ஓரளவுக்கு உறுதியானது. அவர் கொடுத்த மற்ற இலக்கத்தை அழைத்தார், எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளர். முதலில் பேசிய அதே நபர், மறுமுனையில் பேசினார்.

இந்த அழைப்புகள், இலங்கை உளவுத்துறை SIS-ன் அலுவலகத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டன. அந்த அலுவலகத்தின் கன்ட்ரோல் ரூமில், செல் போன்களை ட்ராக் செய்யும் வசதி இருந்தது.

அதில் இருந்து, எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளருடன் பேசியவர் வைத்திருந்த இரு செல்போன்களும், நீர்கொழும்பு (நிகொம்போ) பகுதியில் இருந்து பேசப்படுவதை, உளவுத்துறை தெரிந்து கொண்டது.

“என்ன விஷயம்?” என எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளர் கேட்டபோது, மறுமுனையில் பேசியவர், “அவசரமான இரண்டு பேரை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. இது அவசரம்” என்றார்.

கொழும்பு நகரில் தங்கியுள்ள விடுதலைப்புலிகளில் யாராவது மீது, போலீஸ் சி.ஐ.டி, அல்லது உளவுத்துறையினரின் பார்வை பட்டுவிட்டால், உடனே அந்த நபரை எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பி விடுவது என்பதும், விடுதலைப் புலிகளின் நடைமுறை என்பதை, உளவுத்துறை தெரிந்து வைத்திருந்தது.

“சரி. அனுப்பி வைக்கலாம். அது பற்றி பேச உங்களை எங்கு சந்திக்கலாம்?” என்று கேட்டார், எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளர்.

மறுமுனையில் பேசியவர் (நிஜமாகவே விடுதலைப்புலி இணைப்பாளர்களில் ஒருவர்), நீர்கொழும்புவில் உள்ள இடம் ஒன்றை குறிப்பிட்டு, “இன்று மாலை 5 மணிக்கு அங்கு இருப்பேன். வாருங்கள், பேசலாம்” என்றார்.

(தொடரும்..)

Friday, 4 April 2014

தமிழீழ விடுதலைப்புலிகள் கொழும்பில் சிக்கிய எப்படி? பாகம் 01


இலங்கை ராணுவத்துடன் நடந்த சுமார் 30 ஆண்டுகால யுத்தத்தின்போது, ராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்ட போதெல்லாம், புலிகள் கையாண்ட முக்கிய தந்திரம், தெற்கே சிங்களப் பகுதிகளிலும், தலைநகர் கொழும்புவிலும் எதிர்பாராத இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்க வைப்பதுதான்.


தற்கொலை தாக்குதல்கள் மூலம் வெடிக்கும் வெடிகுண்டுகளால் பலத்த சேதம் ஏற்படும். அல்லது, இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர் கொல்லப்படுவார். அதையடுத்து, இலங்கை ராணுவம் அடக்கி வாசிக்க தொடங்கும். புலிகளுக்கு தம்மை பலப்படுத்திக் கொள்ள அவகாசம் கிடைக்கும்.

1990களில் இருந்தே நடந்துவந்த நடைமுறை இது. புலிகளின் உளவுத்துறையின் ஒரு பிரிவும், தற்கொலை போராளி பிரிவான கரும்புலிகளும் இணைந்து நடத்திய குண்டுவெடிப்புகள் அவை.
இறுதி யுத்தத்தின்போது, விடுதலைப் புலிகள் ஒவ்வொரு நகரமாக கைவிட்டு பின்வாங்கி சென்றுகொண்டிருந்தபோதும், இந்த தந்திரம் கடுமையாக முயற்சிக்கப்பட்டது. ஆனால், முன்பு கிடைத்தது போன்ற வெற்றிகள் புலிகளுக்கு கிடைக்கவில்லை.

இறுதி யுத்தம் நடந்தபோது நடந்த சம்பவங்களை கவனமாக பார்த்தீர்கள் என்றால், யுத்தத்தின் இறுதி மாதங்களில், சிங்களப் பகுதிகளிலோ, கொழும்புவிலோ எந்தவொரு குண்டும் வெடிக்கவில்லை என்பதை கவனிக்கலாம். அந்த காலப்பகுதியில் எந்தவொரு தற்கொலை தாக்குதலும் நடக்கவில்லை.

சில தமிழ் மீடியாக்களில், “விடுதலைப் புலிகள், தற்கொலை தாக்குதல் நடத்தி வெளிநாடுகளின் அதிருப்தியை சம்பாதிக்க விரும்பாத காரணத்தாலேயே, அவற்றை முழுமையாக நிறுத்திவிட்டு, நேரடியாக சண்டைபோட்டு, கொஞ்சம் கொஞ்சமாக பின்வாங்கிச் சென்று, அனைத்தையும் முழுமையாக இழந்தார்கள்” என விளக்கம் கொடுக்கிறார்கள்.

அவர்களை பொறுத்தவரை அப்படியே இருந்துவிட்டு போகட்டும்.
நிஜமாக நடந்தது என்னவென்றால், இறுதி யுத்தத்தின் இறுதி மாதங்களில் கொழும்புவில் விடுதலைப்புலிகளால் திட்டமிடப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்கள் ஏதையும், அவர்களால் நடத்த முடிந்திருக்கவில்லை. காரணம், கொழும்புவில் விடுதலைப்புலிகளின் தாக்குதல்களை திட்டமிட்டு நடத்திய இணைப்பாளர்கள் ஒவ்வொருவராக இலங்கை உளவுத்துறையினரிடம் அகப்பட்டுக் கொண்டார்கள்.

அவர்களில் பலர், தற்போதும் இலங்கை சிறைகளில் உள்ளார்கள். உரிய அனுமதி பெற்று சென்று அவர்களை சந்தித்து கேட்டால், விளக்கமாக சொல்வார்கள். இப்போது இந்த விவகாரங்கள் எதுவும் ரகசியம் கிடையாது.
இறுதி யுத்தம் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவடைந்தது. அதற்கு சில மாதங்களுக்கு முன்னரே விடுதலைப் புலிகள் தமது நிலைமை மிக மோசம் என்பதை புரிந்து கொண்டிருந்தார்கள். யுத்தத்தை நிறுத்தினால்தான், தம்மை பலப்படுத்திக்கொள்ள முடியும் என்பதை புரிந்து கொண்டார்கள். இதற்குமுன், போர் நிறுத்தத்தை கொண்டுவர உதவிய வெளிநாடுகள், கழுவிய நீரில், நழுவிய மீனாக இருந்தன.

இதனால், கொழும்புவில் பெருமளவில் குண்டுகள் வெடித்து நாட்டையே அதிரவைத்தால்தான், முன்னேறும் ராணுவத்தை தடுத்து நிறுத்த முடியும் என்ற நிலை.

இலங்கையின் தெற்கு பகுதியில், முக்கியமாக கொழும்புவின் புறநகர பகுதியில், பல இடங்களில் விடுதலைப்புலிகளால் வெடிகுண்டுகளும், ஆயுதங்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

அவற்றை வெடிக்க வைப்பதற்காக தற்கொலை தாக்குதல்கள் செய்ய அனுப்பி வைக்கப்பட்ட கரும்புலிகளும், கொழும்புவின் வெவ்வேறு பகுதிகளில் மக்களோடு மக்களாக கலந்து போய் இருந்தார்கள்.

இந்த கரும்புலிகள், தாமாக மறைவிடத்துக்கு போய், வெடிகுண்டு ஒன்றை எடுத்துச் சென்று வெடிக்க வைப்பது என்பதல்ல நடைமுறை.
தற்கொலை தாக்குதல் செய்ய தயாராக இருந்த கரும்புலிகளுக்கே, வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்த மறைவிடங்கள் தெரியாது. வன்னியில் இருந்த புலிகளின் உளவுப்பிரிவு தலைமைக்கும், இந்த கரும்புலிகளுக்கும் இடையே இணைப்பாளர்களாக இருந்த சிலருக்கு மட்டுமே, இந்த மறைவிடங்கள் தெரியும்.

இந்த இணைப்பாளர்களே, வன்னி யுத்த களத்துக்கு வெளியே நடந்த தாக்குதல்களுக்கு முதுகெலும்பு போன்றவர்கள்.

எப்படியென்றால், கொழும்புவில் இருந்த இந்த இணைப்பாளர்களிடம்தான் வன்னியில் இருந்து கரும்புலிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்கள் தங்குவதற்காக வெவ்வேறு மறைவிடங்களை ஏற்பாடு செய்வது இந்த இணைப்பாளர்களே. அத்துடன், வன்னியில் இருந்து வெடிப் பொருட்கள் வருவதும் இந்த இணைப்பாளர்களுக்குதான். வெடிப் பொருட்களை கொழும்புவின் வெவ்வேறு இடங்களில் மறைத்து வைப்பதும், இந்த இணைப்பாளர்களே.

அதன்பின், வன்னியில் இருந்து உத்தரவு வரும், குறிப்பிட்ட பிரமுகரையோ, இலக்கையோ தாக்கும்படி.

அந்த தாக்குதலை நடத்த உரிய இடத்தை தேர்ந்தெடுப்பது, மறைவிடத்தில் உள்ள கரும்புலி ஒருவரை தயார் செய்வது, வேறொரு மறைவிடத்தில் உள்ள வெடிகுண்டை கரும்புலியிடம் கொடுப்பது, உடலில் குண்டு பொருத்தப்பட்ட கரும்புலியை, தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தில் கொண்டுபோய் சேர்ப்பது எல்லாமே, இந்த இணைப்பாளர்களின் கையில்தான்!

மொத்தத்தில், வன்னியில் இருந்தவர்களுக்கு, கொழும்புவில் கரும்புலிகளின் மறைவிடங்கள் எங்கே என்று தெரியாது. கொழும்புவில் இருந்த கரும்புலிகளுக்கு, கொழும்புவில் வெடிகுண்டுகள் இருந்த மறைவிடங்கள் எங்கே என்று தெரியாது. அனைத்தும் தெரிந்தவர்கள், இந்த இணைப்பாளர்கள்.
இப்படியான இணைப்பாளர்கள்தான், இறுதி யுத்தத்தின் இறுதி மாதங்களில் கொழும்புவில் ஒவ்வொருவராக சிக்கிக் கொண்டார்கள்!

இறுதி யுத்தம் மும்மரமாக நடந்து கொண்டிருந்தபோது, இலங்கையின் உளவுத்துறை SIS-க்கு (State Intelligence Service), வெளிநாட்டு உளவுத்துறை ஒன்றிடம் இருந்து உளவுத் தகவல் ஒன்று வந்தது.

(இலங்கை உளவுத்துறை SIS, பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பு. முன்பு National Intelligence Bureau என்ற பெயரில் செயல்பட்ட அமைப்புதான், SIS என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் தற்போதைய டைரக்டர், சந்திரா வாஹிஸ்த)
வெளிநாட்டு உளவுத்துறை, தமது நாட்டில் இருந்த விடுதலைப்புலிகள் செயல்பாட்டாளர் ஒருவருடைய போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. அப்போது, வெளிநாட்டு விடுதலைப்புலிகள் செயல்பாட்டாளரிடம் இருந்துதான், கொழும்புவில் உள்ள இணைப்பாளர்களுக்கு உத்தரவுகள் போவதை, வெளிநாட்டு உளவுத்துறை தெரிந்து கொண்டது.

இந்த காலப்பகுதியில் (2009-ம் ஆண்டு ஆரம்பம்), அந்த வெளிநாட்டுக்கு அவர்களது நாட்டில் விடுதலைப் புலிகளால் பலத்த இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. அந்த நாட்டில் நடத்தப்பட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களால், அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வந்தது.

அதை தடுக்க முயன்றால், அரசியல் ரீதியாக குறிப்பிட்ட வெளிநாட்டு அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும்.

இதனால், ஆர்ப்பாட்டங்களை வெளிப்படையாக தடுக்காமல், இதற்கெல்லாம் மூல காரணமாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை, இலங்கையில் முடித்து விடுவது நல்லது என்ற முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

அந்த அடிப்படையிலேயே, தமது நாட்டில் இருந்து, கொழும்புவில் உள்ள இணைப்பாளர் ஒருவருக்கு உத்தரவுகளை கொடுக்கும் வெளிநாட்டு செயற்பாட்டாளர் தொடர்பான உளவுத் தகவலை, இலங்கை உளவுத்துறை SIS-க்கு கொடுத்தது, வெளிநாட்டு உளவுத்துறை.

வெளிநாட்டு உளவுத்துறை, வெறும் தகவலை மட்டும் கொடுக்கவில்லை. கொழும்புவில் இருந்த விடுதலைப்புலிகளின் இணைப்பாளர் பயன்படுத்திய போன் இலக்கத்தையும் கொடுத்தது. “கொழும்புவில் உள்ள இந்த இலக்கத்தில் இருந்து அழைத்துதான், உத்தரவுகளை பெற்றுக் கொள்கிறார்கள்”

(தொடரும்..)

Tuesday, 18 March 2014

வடக்கில் தொடரும் இராணுவ அடாவடி


 வடபுலத்தில் இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திவரும் கைதுகள் மற்றும் அடாவடித்தனங்களால் வன்னி அதிர்ந்தவண்ணமுள்ளது. கிளிநொச்சியில் ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் கைதுசெய்யப்பட முன்னர் மார்ச் 12 ஆம் திகதி திருமலை பாலையூற்றைச் சேர்ந்த பாலகுருபரன் தர்மிலா என்கின்ற கர்ப்பிணி தாய் அவரது நான்கு வயது மகனுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இவரது கணவரும் யாழ்ப்பாணம் ஏழாலைப்பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இதேநாள் விசுவமடுவில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த தாய் மற்றும் இருபிள்ளைகள் கைதாகியுள்ளனர். அவ்வாறு கைதுசெய்யப்பட்ட பிள்ளைகளுள் ஒருவரான் நிதர்சனா – வயது 27 பயங்கரவாத தடுப்பு பொலிசாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில்இரு இளைஞர்கள் பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கடுமையான தாக்குதல்களின் பின்னராக விடுவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று காலை அப்பிரதேசத்திற்குச் சென்ற பொலிஸாரும் இராணுவப் புலனாய்வாளர்களும் கைது செய்யப்பட்ட 34 வயதுடைய யோ. கலாதரன் என்பவரின் சாயலை ஒத்த புகைப்படத்தை அங்குள்ள கடைகளிலும் வீதியில் சென்றவர்களிடமும் காட்டி விசாரித்துள்ளனர்.

அதன் பிரகாரம் ஆனந்தபுரம் வீதியிலுள்ள குறித்த இளைஞனின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் அவருக்கு கைவிலங்கைப் போட்டுக் கைது செய்தனர். இச்சம்பவத்தை தொலைபேசியில் வீடியோப் பதிவு செய்ய முயற்சி செய்த குறித்த இளைஞனின் தம்பியான யோ. 31 வயதுடைய சுதாகரன் என்பவரையும் தமது பணிக்கு இடையூறு விளைவித்தார் எனக் கூறி அவரையும் கைது செய்து அழைத்துச் சென்றிருந்தனர்.

எனினும் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பளையில் நேற்றும் இளைஞரொருவர் கைதாகியுள்ளார். இதையடுத்து கைதானவர்களது எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியினில் மற்றுமொரு இளைஞன் நேற்று கைதான போதும் அவர் பின்னராக விடுவிக்கப்பட்டுள்ளான். இன்று காலை வரையாக வன்னியில் எண்மர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thursday, 14 November 2013

கடற்படை முகாமில் தமிழ்ப்பெண் மீது பாலியல் சித்திரவதை

சிறிலங்காப் படையினரின் சித்திரவதையிலிருந்து தப்பி அகதித்தஞ்சம் கோரிய ஒருவரின் மனைவி வடக்கில் உள்ள கடற்படை முகாம் ஒன்றில் பல தடவை பாலியல் சித்திரவதை செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலான காணொலி ஆதாரத்தினை அவுஸ்திரேலியாவில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெற்றுவருகின்ற நிலையில் சனல் 4 அடுத்தடுத்து காணொலித் தொகுப்புக்களை வெளியிட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ள அவுஸ்திரேலிய தொலைக்காட்சியின் காணொலியும் இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, 29 October 2013

லண்டனில் இலங்கைச் சிங்கள இளைஞர் ஒருவர் கொலை!


இலங்கையில் இருந்து லண்டன் சென்று பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்றுக் கொண்டிருந்த சிங்கள இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய சென்ற 25 வயதான தவிஷ பீரிஸ் என்ற இந்த இளைஞர், தென் யோக்சயார் என்ற இடத்தில் தொழில் செய்துகொண்டிருந்த நிலையில் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
2011ம் ஆண்டு பிரித்தானியாவுக்கு சென்ற  தவிஷ பீரிஸ் செபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தில் சொப்ட்வெயார் எஞ்சினியரிங் துறையில் கல்வி கற்றுவந்தார்.

இதேவேளை தமது படிப்புக்கும் இலங்கையில் உள்ள தமது குடும்பத்துக்கும் தேவையான பணத்தை உழைப்பதற்காக பீசா உணவகம் ஒன்றில் விநியோகப் பையனாகவும் அவர் தொழில் செய்து வந்தார் என்று யோக்சயார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற ஆடைகளை கொள்வனவு செய்திட FASHIONTAMIL

தாயக மீட்புக்காக ஆயுதக் கொள்வனவு செய்த சுரேசுக்கு கனடாவில் 2 வருட சிறை

 

அமெரிக்காவில் 2006ம் ஆண்டு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழரான சுரேஸ் சிறீஸ்கந்தராசாவுக்கு 2வருட சிறைத்தண்டனை விதித்து நேற்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி குற்றம் சுமத்தப்பட்டுள்ள வோட்டர்லூ சுரேஸ் என்று அழைக்கப்படும் 33 வயதான சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் வழங்கியுள்ளது.

வோட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பொறியியல்துறை மாணவரான சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா 2006 ம் ஆண்டு கனடாவில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராசாவும் மேலும் மூவரும் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்தனர் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக உதவினர் என்ற குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

இந்தநிலையில் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட சுரேஸ் அமெரிக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீடு 2012ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது.

இதன்போது தாம் விடுதலைப் புலிகளுக்காக வானூர்தி உபகரணங்கள், நீர்மூழ்கி கப்பல்கள், இரவு நேர வெளிச்சம் பாய்ச்சி மற்றும் தொலைத்தொடர்புகள் குறித்த ஆராய்ச்சிகளில் உதவியதாக சுரேஸ் நீதிமன்றத்தில் குற்றத்தை ஏற்றுக்கொண்டார்.

Waterloo Suresh என்று அழைக்கப்படும் கனடிய தமிழர், விடுதலைப் புலிகளுக்கு இராணுவ மென்பொருட்களை வாங்க உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டு 2006 ஆகட்ஸ் மாதம் கனடாவில் கைது செய்யப்பட்டு 6 வருட சட்ட போராட்டங்களின் பின் கடந்த டிசம்பர் மாசம் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

அவருக்கு நேற்று New York நீதி மன்றத்தில் 2 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அரச சட்டத்தரணிகள் அவருக்கு அதிகபட்ச தண்டனையான 15 வருடங்களை வழங்குமாறு கேட்டிருந்தனர்.

சுரேஸ் அவர்களின் சட்டத்தரணி அவருக்கு ஆதராவதாக பல அரச, சமூக, தொழில் துறை சார்ந்த புத்திஜீவிகளின் ஆதரவு கடிதங்களையும் மேற்கோள் காட்டி குறிப்பாக Craig Scott என்ற கனடிய M.P சுரேஸை கனடிய தமிழர்களுக்கும் மற்றும் கனடிய குடியேற்ற வாசிகளுக்கும் இவர் ஓர் முன்னுதாரணமானவர் என்றும், மற்றும் கல்வியிலும் Engineering, Business Studies, மற்றும் Arts துறைகளில் மிகத் திறமையானவர் என்றும் பின்பு சட்டத்துறை படிப்பினையும் மேற்கொண்டிருந்தார் என்று அவர் அக்கடித்தத்தில் தெரிவித்திருந்தார்.

அத்தோடு அமெரிக்காவில் சிறையிலிருந்த நிலையிலும் அங்கு கைதிகளுக்கு கல்வி கற்பித்தலில் மிகச் சிறப்பாக செயலாற்றினார். இது போன்ற செயல்களால் மற்றவர்களுக்கு எப்போதும் உதவும் மிகச்சிறப்பான மனமுடையவர் என்றும் கூறப்பட்டது.

இவரின் தண்டனைக் காலம் இதுவரை கனடாவிலும் அமெரிக்காவிலும் சிறையிலிருந்த காலங்கள் கணக்கில் எடுக்கப்படும் என அறியப்படுகின்றது.

Thursday, 24 October 2013

இலங்கையில் இப்போது என்ன நடக்கிறது; இடித்துரைத்தது பி. பி. சி

போர் முடிவடைந்துவிட்டது. சமாதானம் வந்துவிட்டதாக இலங்கை அரசு கூறியுள்ளது. ஆனால் அங்கே உண்மையாக நடப்பது என்ன ? இதோ BBC நிருபர் யாழ் சென்று எடுத்த அடுத்த ஆவணப்படம் நேற்று மாலை(புதன்கிழமை) வெளியாகியுள்ளது. 

இலங்கையில் இளைஞர்களும் பெண்களும் இன்னமும் சித்திரவதைகளுக்கும் , பாலியல் துண்புறுத்தலுக்கும் ஆளாகிவருகிறார்கள் என்பதனை இந்த ஆவணப்படம் வெளிவாக எடுத்து காட்டுகிறது. 4 நிமிட நேரத்தில், இலங்கையில் தற்போது என்ன நடக்கிறது என்பதனை BBC வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. 

இதில் ஒரு பெண் தன்னை இலங்கை இராணுவத்தினர் மாறி மாறி கற்பழித்ததாக கூறியுள்ளார். இதனால் தான் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதோடு, அதற்கான மாத்திரைகளையும் எடுத்துவருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆண் ஒருவர் தனது சாட்சியத்தையும் இங்கே பதிவுசெய்துள்ளார். தன்னை சந்தேகத்தின் அடிப்படையில் இராணுவம் கைதுசெய்தது என்றும், தன்னை சொல்லொனா சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


தன்னை சிறையில் வைத்து விசாரிக்கும்போது ஒவ்வொரு கேள்விகளைக் கேட்க்கும்போதும், தனது ஆண் குறியை இலங்கை இராணுவம் கசக்கி தன்னை துண்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவருமே தமது முகத்தை காட்ட மறுத்துவிட்டபோதும், BBC இதனை ஆவணப்படுத்தியுள்ளது. 

இலங்கையில் காமன்வெலத் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ள இன் நிலையில், பல ஆதாரங்கள் இலங்கைக்கு எதிராக வெளியாகியவண்ணம் உள்ளது. இது இலங்கை அரசின் மேல் பல அழுத்தங்களை பிரியோகித்தவண்ணம் உள்ளது. 

Tuesday, 22 October 2013

பீரிசிற்கு எதிராக பிரித்தானியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்


பிரித்தானியாவில் அமைச்சர் ஜீ.எல். பீரிசிற்கு எதிராக இன்று மாலை WC1E 7HU, Malet Street  என்னும் முகவரியில் அமைந்துள்ள Senate House  முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று ஒன்று நடைபெற்றுள்ளது.


ஜீ. எல் பீரிஸின் லண்டன்  வருகையை எதிர்த்தும், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கையில் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டு கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்  இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இதில் பெருமளவிலான தமிழர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

Monday, 21 October 2013

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழ்ப் பெண்!


பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அடுத்து நடக்கவுள்ள தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் உமா குமரன் என்ற இலங்கைத் தமிழ்ப் பெண் போட்டியிடவுள்ளார்.

உமா குமரனின் பெற்றோர் இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரினால், லண்டனுக்கு குடிபெயர்ந்தனர்.

லண்டனில் பிறந்த உமா குமரன், ஹரோ தொகுதியில் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

லண்டன் குயீன்ஸ் மேரி பல்கலைக்கழகத்தில், அரசியலில் பட்டம் பெற்ற உமா குமரன், பொதுக் கொள்கையில், முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம், பிரெஞ், ஜேர்மன் ஆகிய ஐந்து மொழிகளைப் பேசும் திறன் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Saturday, 19 October 2013

பூசாவில் தடுப்புக்காவலில் இருக்கும் இளைஞரின் குடும்பத்தினர் மீண்டும் சுவிஸ் திரும்பினர்


இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளும், கைதுகளும், பாலியல் வன்புணர்வு சம்பவங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில் வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள தமிழ் அகதிகளின் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு திருப்பியனுப்பப்படுவது தொடர்ச்சியாக நிகழ்வாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு திருப்பியனுப்பப்படுவோர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக மனித உரிமை அமைப்புகள்  தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் நிலையில், அண்மையில் சுவிற்சர்லாந்திலிருந்து திருப்பியனுப்பப்பட்ட குடும்பம் ஒன்றின் குடும்பத்தலைவன் கைது செய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இலங்கையைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை அகிலரூபன் அவரது கர்ப்பிணி மனைவியான சாளினி மற்றும் இவர்களது பிள்ளைகளான தமிழவன் (4 வயது), ஓவியா (3 வயது) ஆகியோர் 21.08.2013 அன்று சுவிஸ் அரசாங்கத்தினால் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். 28.08.2013 அன்று இலங்கை விமான நிலையத்தைச் சென்றடைந்த இவர்கள் விமானநிலையத்தில் 13 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட பின்னர், அகிலரூபன் கைது செய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவரது மனைவியின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு மனைவியும், இரண்டு குழந்தைகளும் சுவிஸ் அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டதையடுத்து 14.08.2013 அன்று மீண்டும் சுவிற்சர்லாந்து திரும்பியுள்ளனர்.

இவர்கள் தற்பொழுது செங்காளன் மாநிலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனினும், தனது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு சூரிச் மாநிலத்தில் தங்கள் உறவினர்களுக்கு அண்மையில் தங்க வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இவரைப்போன்று, ஜூலை 12 ஆம் திகதி திருப்பியனுப்பப்பட்ட தமிழ் இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டு கொழும்பிலுள்ள சிறைச்சாலை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் பலத்த சித்திரவதைகளுக்கும், அடிகாயங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக இவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இவ்விரு கைதிகளினதும் தகவல்கள் மற்றும் உடல்நிலை பற்றிய தகவல்களைப் பெற சுவிஸ் தூதரகம், யு.என.;எச்.சி. ஆருடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சுவிஸ் அகதிகள் அதிகார சபையின் இயக்குனர் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை அகதிகள் தற்போதைக்குத் திருப்பியனுப்பப்படமாட்டார்கள். எனினும், இதுவொரு தற்காலிக நடவடிக்கை தான். நாட்டிற்குத் திருப்பியனுப்பக் காத்திருக்கும் 140 இலங்கையரையும் யு.என்.எச்.சி.ஆர் மூலம் தஞ்ச நடைமுறையின் கீழ் வெளிப்புற விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்.

இவர்கள் தாங்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், உயிராபத்தை எதிர்கொள்ள நேரிடும் என முன்னரே சுவிஸ் அதிகாரிகளிடம் எழுத்து மூலம் தெரிவித்துள்ள நிலையிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாதம் திருப்பியனுப்பப்பட்டவரின் சட்டத்தரணி தெரிவிக்கையில், தனது வாடிக்கையாளர் ஏற்கனவே இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமையால் தலையில் ஏற்பட்ட காயங்கள் தொடர்பாகவும் தெரிவித்திருந்தார். அவர் விடுதலையாக கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

சுவிஸ் அகதிகள் சபையின் 2011 கோடை கால அறிக்கையின் பிரகாரம், மத்திய நிர்வாக நீதிமன்றத்தினால் தமிழர்களுக்குத் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை நியாயமான என்பதை வலியுறுத்தினார். ஐரோப்பிய நாடுகளில் சுவிற்சர்லாந்து மட்டுமே தற்பொழுது திருப்பியனுப்புவதை நிறுத்தி வைத்துள்ளது. எனினும், இதுவொரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே என்றார்.

கைது செய்யப்பட்ட இருவரும் சுவிற்சர்லாந்தில் புலிகளுக்கு ஆதரவாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் என இலங்கை அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Wednesday, 9 October 2013

கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட சத்தி சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார் CTV நிறுவனம்


500 புகலிடக் கோரிக்கையாளர்களை கப்பல் மூலம் கனடாவுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக CTV நிறுவன ஆவண செய்தியில் சுட்டிக்  காட்டப்பட்டுள்ளது.

நாடு கடத்தப்பட்டதன் பின் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி சுமார் ஒரு வருடகாலம் தான் சிறை வைக்கப்பட்டிருந்ததாக சத்தி எனப்படும் சத்தியபவன் ஆசீர்வாதம் தெரிவித்துள்ளார். 

பிளாஸ்டிக் பைப்புகளால் தாக்கப்பட்டு, உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தவித்ததாக பாதிக்கப்பட்ட சத்தியபவன் ஆசீர்வாதம் தனது கனேடிய சட்டத்தரணியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 

'என் உடலில் தண்ணீர் தாகம் ஏற்பட்டு நான் தண்ணீர் கேட்டபோது அவர்கள் என்னை அடித்தனர், எனது கண்ணை கட்டி கைகளையும் கட்டி போட்டனர், நிர்வாணமாக்கப்பட்டேன், குளிர்ந்த, இருண்ட அறையில் அடைக்கப்பட்டேன். அந்த நாட்களை என்னால் எண்ண முடியவில்லை.' என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில் சத்தி அண்மையில் இடம்பெற்ற விபத்தொன்றில் உயிரிழந்ததாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். 

2010ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம்; 500 புகலிடக் கோரிக்கையாளர்கள் சன் சீ கப்பலில் கனடாவை சென்றடைந்தனர். 

இவர்களை சட்டத்துக்கு புறம்பாக கனடாவுக்குள் அழைத்துச் சென்ற குற்றச்சாட்டில் சத்தி கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், இலங்கை சிறையில் வைத்து சத்தியபவன் ஆசீர்வாதம் மீது சித்திரவதை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Monday, 7 October 2013

தமிழர் அரசுக்காக அரியணை ஏறும் நாள் இன்று!

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக ஓய்வு பெற்ற நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் அவர்கள் நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் செய்து பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சர் என்ற பெருமையோடு ஈழத்தமிழ் அரசின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி.வி. விக்னேஸ்வரன் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் கிடைக்க, வாழ்வு சிறக்க இந்த வேளையில் நாம் எல்லோரும் இறைவனைப் பிரார்த்திப்போம்.
பொதுவில் எந்த ஆரம்பக் கருமங்களுக்கும் விநாயகராகிய விக்னேஸ்வரப் பெருமானை வழிபாடாற்றி கருமங்களைத் தொடங்குவதே வழமை.

அந்த வகையில் வடக்கு மாகாண சபையின் முதலாவது தமிழ் அரசுக்கு விநாயகப் பெருமானின் நாமத்தைக் குறிக்கும் விக்னேஸ்வரனே முதலமைச்சர் என்ற அரியணையில் அமர்வது சாலப் பொருத்தமுடையது.
இந்த நாட்டின் உச்ச நீதிமன்றின் நீதியரசராக இருந்த ஒருவர் வடக்கு மாகாண தமிழ் அரசின் அரசராக இன்று அரியணை ஏறுவது தமிழர்களின் தகை சான்ற பெருமையை பறைசாற்றுவதாகும்.

உன்னதமான நீதியரசர். எல்லா இனங்களையும் எல்லா சமயங்களையும் மதிக்கின்ற ஒரு பேரறிஞர்.

எந்தக் கட்சியும் அரசியலும் சாராத ஒப்புரவாளருக்கு தமிழ் மக்கள் தங்களின் பெறுமதியான வாக்குகளை வாரி வழங்கி அவரை தமிழர்களின் ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டனர்.

இது தமிழ் மக்களின் நீதி நெறி தவறாத சால்புடமைக்கும் அறிவுடமைக்கும் தக்க சான்றாகும்.

அதேநேரம் வடக்கு மாகாண சபை என்பதைத் தான் நாம் தேடிக் கண்டோமா? என்று கேட்பதிலும் நியாயமிருக்கவே செய்யும்.

ஒரு காலத்தில் எங்கள் கையில் வடக்கும் கிழக்கும் இணைந்த அரசு கிடைத்ததல்லவா! அதைக் கைவிட்டுவிட்டு இப்போது வடக்கு மாகாணசபை தமிழர்களின் அரசு என்று நீங்கள் கூறுவது சரியானதா? என்று உங்களில் யாரேனும் ஆதங்கம் கொண்டால் அதுவும் ஏற்புடையதே.

எனினும், என்ன செய்வது! கால சூழ்நிலைகள், சர்வதேச மாற்றங்கள், எங்களுக்குள் இருந்த ஒற்றுமையீனங்கள் கூடவே நாங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த கர்மவினைப்பயன்கள் என எல்லாமும் சேர்ந்து எங்களை வஞ்சித்துவிட்டன.

இதனால், வாழவேண்டிய எத்தனையோ எங்கள் உறவுகளை நாம் பறிகொடுத்து விட்டோம். எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கண்ணீர் விட்டுக் கதறிய அப்பாவித் தமிழ் மக்களை காப்பாற்றுவார் யாரு மின்றி இழந்து விட்டோம். இந்தத் துயரம் சாதாரணமானதல்ல. இந்தத் துன்பமான வரலாற்றை எங்கள் இதயங்களில் சுமந்து கொள்கிறோம்.

அதேநேரம், வடக்கு மாகாண அரசு என்பதில் இருந்து எங்கள் உரிமையைப் பெற்றுக் கொள்ளும் ஒரு புதிய பாதையை வகுத்துக் கொள்வதே சமகால சர்வதேச சூழமைவுக்கு ஏற்புடையதாகும்.

உலக நாடுகளும் ஐ.நா சபையும் இலங்கை அரசின் இனச்சார்புடமையை நன்கு விளங்கிக் கொண்டிருக்கும் போது, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என்று அவகாசம் கொடுத்து எச்சரித்திருக்கும் போது நாங்களும் கிடைத்த ஆசனக்கல்லில் அமர்ந்து கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
ஆசனம் கருங்கல்லா, பவளக்கல்லா, சிம்மாசனமா என்பதல்ல கேள்வி.
ஆசனத்திலிருந்து செய்கின்ற கடும் தவமே எங்களுக்கான உரிமையைப் பெற்றுத் தரும் வேள்வி.

இந்த வேள்வியை ஒற்றுமை என்னும் நெய்யூற்றி அனைவரும் வளர்ப்போம்.
அது நிச்சயம் எங்களுக்கு பேரொளி ஆகும்.

Sunday, 6 October 2013

தடுப்பிலுள்ள இரு தமிழர்களை சந்திக்க சுவிஸ் அதிகாரிகளுக்கு சிறிலங்கா அனுமதி

சுவிற்சர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டு, சிறிலங்காவில் கைது செய்யப்பட்ட இருவரையும், பார்வையிடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம், சுவிஸ் அதிகாரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.  

குடியேற்றத்துக்கான சுவிஸ் சமஸ்டிப் பணியகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.   கடந்த 2011ம் ஆண்டில் புகலிடம் மறுக்கப்பட்ட இரு தமிழர்களை சுவிற்சர்லாந்து திருப்பி அனுப்பியிருந்தது. 

இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.   இதையடுத்தே, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புவதை, சுவிஸ் அரசாங்கம் கடந்த ஓகஸ்ட் 26ம் நாள், இடைநிறுத்தியது. 

 இந்தநிலையில், தற்போதும் சிறிலங்கா அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு தமிழர்களையும், சுவிஸ் அதிகாரிகள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   குறிப்பிட்ட இருவரினதும், புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டதில் குறைபாடுகள் இருந்திருக்கலாம் என்றும் சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வீரகேசரி நடராஜா, தினக்குரல் ரவிவர்மா - இலங்கையின் இரு பிரபல ஊடகவியலாளர்கள் மறைவு

வீரகேசரி நாளிதழின் முன்னாள் பிரதம ஆசிரியர், எஸ்.நடராஜாவும், தினக்குரல் நாளிதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய ரவிவர்மாவும், நேற்று காலமாகினர். 

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான எஸ்.நடராஜா, 1950களில் ஊடகத்துறைக்குள் நுழைந்து, நான்கு பத்தாண்டுகளாக வீரகேசரி ஆசிரியபீடத்தில் பல்வேறு பொறுப்புவாய்ந்த பதவிகளை வகித்தவராவார்.

இவர் 1997ம் ஆண்டு தொடக்கம், 2005ம் ஆண்டு வரை- வீரகேசரியின் பிரதம ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றார். 

வாயாடி, குருவி போன்ற புனைபெயர்களில் வெளியான இவரது பத்திகள் மிகவும் பிரபலமானவையாகும். 

அதேவேளை, தினக்குரல் நாளிதழில் உதவிஆசிரியராக பணியாற்றிய, ரவிவர்மாவும் நேற்று சுகவீனம் காரணமாக காலமானார்.

இவர், நீண்டகாலமாக தினக்குரல் ஆசிரியபீடத்தில் பணியாற்றிய இவர், சிறந்த அரசியல் கட்டுரைகள், பத்திகளையும் எழுதி வந்தவர். 

கடந்த சில ஆண்டுகளாக இவர் சுகவீனமுற்றிருந்தார். 

மூத்த ஊடகவியலாளர் எஸ்.நடராஜா மற்றும் ரவிவர்மா ஆகியோரின் இழப்பு தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும். 

சூடான் ஜனாதிபதியின் நிலை இலங்கைக்கும் ஏற்படுமா?


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐநா பொதுச்சபையில் நிகழ்த்திய உரை குறித்து, அமெரிக்காவின் பிரபலமான லொஸ்ஏஞ்சல்ஸ் ரைம்ஸ் நாளிதழில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.

அந்தக் கட்டுரையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அடுத்தமுறையும் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க வருவாரேயானால் அதிகளவில் அசௌகரியமான வரவேற்பை பெறக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தார் அதை எழுதிய சசாங் பெங்காலி.

ஐநா பொதுச்சபைக் கூட்டங்களில் முன்னரெல்லாம் லிபிய அதிபர் கடாபி, ஈரானிய அதிபர் மஹ்மூட் அகமட்நிஜாட் போன்றவர்கள் ஐநாவையும் மேற்குலகையும் அதிகம் விமர்சிப்பவர்களாக இருந்து வந்துள்ளனர்.
இப்போது அவர்கள் யாரும் பதவியில் இல்லை.

கடாபி மரணமாகிவிட்டார். ஈரானிய அதிபராக இருந்த அகமட்நிஜாட் பதவியை விட்டு விலகிவிட்டார்.

இந்தநிலையில் பொதுச்சபையின் 68வது கூட்டத்தொடரில் ஐநாவைப் பற்றியும் மேற்குலகைப்பற்றியும் சூசகமான முறையில் விமர்சித்து சர்ச்சையைக் கிளப்பியிருந்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. மனித உரிமை, ஜனநாயகம் போன்ற ஆயுதங்களை வைத்து சிறிய நாடுகளை வல்லமை மிக்க நாடுகள் துன்புறுத்துவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்தக் கருத்து இலங்கை மீதாக அமெரிக்காவினதும், மேற்குலகினதும் அழுத்தங்களின் வெளிப்பாடுதான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

சிறிய நாடான இலங்கை மீது மனித உரிமை உள்ளிட்ட விவகாரங்களைப் பயன்படுத்தி அனைத்துலக சமூகம் அதிகளவு அழுத்தங்களைக் கொடுக்கிறது என்பது இலங்கை அரசாங்கத்தினது கருத்தாக உள்ளது.

ஆனால் சர்வதேச சமூகத்தினது பார்வையில் குறிப்பாக மேற்குலகின் பார்வையில் இலங்கை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத நாடாக எதேச்சதிகார நாடாகப் பார்க்கப்படுகிறது.

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வெளியிட்ட கருத்தை இந்த நாடுகள் பெரும்பாலும் ஏற்கின்ற நிலையில் இருக்கின்றன.

எதேச்சதிகாரப் போக்கில் செல்வதாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் தாம் பதவிக்கு வந்த பின்னர் எத்தனை தேர்தல்களை நடத்தியிருக்கிறோம் என்று கணக்குக் காட்டியிருக்கிறது.

ஆனால் தேர்தல் மூலமான தெரிவு என்பது முற்றிலும் ஜனநாயக சூழலைப் பிரதிபலிப்பதாக அர்த்தமில்லை என்பதே மேற்குலகின் வாதம்.

ஏனென்றால் பல தசாப்தங்களாக ஆட்சயைத் தம் கைக்குள் வைத்திருந்த பல சர்வாதிகாரிகள் தேர்தலைத் தமக்கு சார்பாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் தான்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஆட்சியில் இருக்கும் ஸிம்பாப்வே அதிபர் ரொபர்ட் முகாபே அண்மையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் 7வது தடவையாக வெற்றி பெற்றிருந்தார்.

ஆனால் அங்கு மோசமான மனித உரிமை மீறல்கள் நடப்பதும், அவரது ஆட்சி சர்வாதிகாரப் போக்கு கொண்டது என்பதும் வெளிப்படையான உண்மைகள்.
ஆனாலும் அவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களால் வெற்றி பெற முடியவில்லை.
இப்படிப்பட்ட சூழலுக்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

ஆட்சியிலிருப்பவர்கள் எல்லாவற்றையும் தன் கைக்குள் போட்டுக் கொண்டு பிறர் வெற்றி பெற முடியாதளவுக்கு தேர்தலில் செல்வாக்கு செலுத்துபவராக இருக்க வேண்டும்.

அல்லது வலுவான எதிர்க்கட்சியோ வேட்பாளரோ இல்லாதிருக்க வேண்டும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் இவற்றில் எந்தச் சூழல் உள்ளது என்பதை புரிந்து கொள்வது ஒன்றும் சிரமமான காரியமில்லை.

இலங்கையில் அரசாங்கத்தை எதிர்த்து, தேர்தலில் வெற்றி கொள்வது எத்தகைய சிரமமான காரியம் என்பதை உலகம் ஓரளவுக்கேனும் புரிந்து கொண்டுள்ளது.

அதையெல்லாம் தாண்டி வெற்றி பெற வேண்டும் என்றால் அண்மையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களித்தது போன்று பெருமளவு மக்கள் துணிச்சலோடும் எழுச்சியோடும் வாக்களிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
போர் வெற்றி மாயை என்ற தெற்கிலுள்ள மக்களின் பலவீனத்தை அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தனது அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்வதை உலகம் அவ்வளவாக சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை.

அதனால்தான் நவநீதம்பிள்ளையின் வாயில் இருந்து எதேச்சதிகாரப் போக்கு பற்றிய கருத்து வெளியானது.

அதுமட்டுமன்றி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முழுமையான அறிக்கையை அவர் சமர்ப்பிக்கப் போகிறார்.

அவரது வாய்மூல அறிக்கையில் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் முன்னேற்றகரமான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதுமட்டுமன்றி வரும் 2014 மார்ச் மாதத்துக்குள் பொறுப்புக் கூறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் தனியான விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் கடப்பாடு சர்வதேச சமூகத்துக்கு உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சர்வதேச விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் அதிகாரத்தை நவநீதம்பிள்ளை கொண்டிருக்காது போனாலும் சர்வதேச சமூகத்தின் துணையுடன் அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளும் நிலையில் அவர் இருக்கிறார்.

அவரது நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதாக அமெரிக்கா ஒன்றுக்கு இரண்டு முறை அதிகாரபூர்வமாகவும் அறிவித்துள்ளது.

ஆக வரும் மார்ச் மாதத்துக்குள் பொறுப்புக் கூறுவதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்க அரசாங்கம் தவறினால் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் சர்வதேச சமூகம் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
ஆனால் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லாது போனாலும் சர்வதேசப் பொறிமுறையைத் தவிர்ப்பதற்கான எந்த முயற்சிகளிலும் ஈடுபட அது தயாராக இல்லை.

இத்தகையதொரு சூழலில் தான் லொஸ்ஏங்சல்ஸ் ரைம்ஸ் கட்டுரை கடாபி, அஹமட்நிஜாட் போன்றவர்களையும் நினைவுபடுத்தி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பற்றிய கட்டுரையை வரைந்துள்ளது.

அதுமட்டுமன்றி டார்பூர் பிராந்தியத்தில் இனப்படுகொலை மற்றும் பிற குறறங்களில் ஈடுபட்டதற்காக அனைத்துலக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சூடானிய அதிபர் ஒமர் ஹசன் அகமட் பஷிரையும் தொடர்புபடுத்தி இந்தக் கட்டுரை வரையப்பட்டுள்ளது.

சூடானிய அதிபர் பஷீர் இம்முறை ஐநா பொதுச்சபைக் கூட்டத்துக்கு செல்ல முடியவில்லை.

காரணம் அவர் மீதான போர்க்குற்ற விசாரணை தான்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறத் தவறினால் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புத் தான், அடுத்தமுறை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐநா பொதுச்சபைக் கூட்டத்துக்கு வருவாரேயானால் அசௌகரியமான வரவேற்பை சந்திக்க நேரலாம் என்று லொஸ்ஏஞ்சல்ஸ் ரைம்ஸ் கட்டுரை குறிப்பிட்டதற்குக் காரணம்.

இது இலங்கை அரசாங்கம் சர்வதேச அளவில் பாரிய நெருக்கடிகளைச் சந்திப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன என்ற கருத்தையே பிரதிபலிக்கிறது.

Wednesday, 24 April 2013

அவுஸ்திரேலியாவிலிருந்து வந்த தமிழ் இளைஞன் மீது இராணுவ புலனாய்வுப் பிரிவினர் சித்திரவதை


 அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை வந்த மற்றுமொரு தமிழ் இளைஞர் இலங்கையில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் சித்திரவதை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் ஏபிசி என்ற ஊடகத்திற்கு 7.30 செய்திக்கு அழைப்பை ஏற்படுத்திய இலங்கை பிரஜையான குமார் என்பவர் தனக்கு நடந்த துன்பத்தை கூறியுள்ளார்.

குமார் குறித்த ஊடகத்திற்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,
2008ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்தேன். இலங்கையிலுள்ள எனது உறவினருக்கு சுகவீனம் ஏற்பட்டபோது அண்மையில் இலங்கை சென்றிருந்தேன். 

அப்போது நானும் என்னுடைய சகோதரரும் ஆயுதம் தாங்கிய குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டோம்.  கடத்திச் சென்றவர்கள் என்னை ஒரு இருட்டறைக்குள் பூட்டி வைத்தனர். உறங்க இடமின்றி நாய் போல நான் தரையில் விழுந்தேன்.

அப்போது நான் இறப்பதுபோல நினைத்ததோடு, தனது பிள்ளைகள் குடும்பத்தாரையும் ஒருநிமிடம் நினைத்துக் கொண்டேன்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் உனக்கும் தொடர்புள்ளதாக என கேட்டு என்னை சித்திரவதை செய்தனர்.
இதற்கு 2007ம் ஆண்டு நான் பஸ் சாரதியாக கடமை புரிந்த போது புலிகள் அமைப்பு வழங்கிய பொதி ஒன்றை எடுத்துச் சென்றமையே எனக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு என கூறினேன்.

இலங்கை சென்றிருந்தபோது எனக்கு நடந்ததை மறக்க முடியாது. எனக்கு நேர்ந்ததுபோல் வேறு எவருக்கும் நேரக்கூடாது. வேறு எவரும் இவ்வாறான சித்திரவதைகளை அனுபவிக்க கூடாது எனவும் நான் கடவுளை பிரார்த்திக்கிறேன்.

தனி அறையில் வைத்து என்னை சிலர் தாக்கியதால் எனக்கு இப்போது முதுகெலும்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருட்டறைக்குள் குடிபோதையில் புகுந்த இருவர் என்மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டனர்.
நான் கடத்தப்பட்டு நான்காவது நாள் எனது உடலின் பின்பகுதியில் சூடான இரும்பினால் சூடு வைத்தனர். அப்போதே எனது வாழ்க்கை முடிந்து விட்டதாக எண்ணி அச்சப்பட்டேன்.

என்னுடைய உடலின் பின்புறத்தைப் பார்த்தால் சித்திரவதை சம்பவம் மிக அண்மையில் இடம்பெற்றுள்ளது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வர்.
20, 000 அமெரிக்க டொலர்களை லஞ்சமாக கொடுத்து எனது உறவினர் (மாமா) கடத்தியவர்களிடமிருந்து என்னை மீட்டார் இவ்வாறு குமார் அவுஸ்திரேலிய ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இக்குற்றச்சாட்டு பொய்யானது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
குமாருக்கு அவ்வாறு துன்புறுத்தல் நடந்திருந்தால் அவர் அது குறித்து தன்னிடமோ அல்லது உயர் அதிகாரிகளிடமோ முறைப்பாடு செய்தால் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என திசர சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிப்படையான நீதித்துறை விசாரணைகளை மேற்கொள்ளும் என திசர சமரசிங்க கூறியுள்ளார்.

Monday, 15 April 2013

சித்திரவதை என்பது சிறிலங்காவில் அமைப்புரீதியாக உள்ளது - ஹாங்காங் நீதிமன்றம்!

 

தமிழர்களின் உலகளாவிய எதிர்ப்புப் போராட்டத்திற்குஒரு உந்து விசையாக ஹாங்காங் மேல்நீதிமன்றம் ஒன்று இரு தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன் சிறிலங்காவில் சித்திரவதை அமைப்புரீதியாகக் கையாளப் படுகிறது என்று உறுதி செய்துள்ளது.

அவர்கள் இருவரும் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதற்கும் கொல்லப்படுவதற்கும் வாய்ப்புள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட அந்த இருவரின் பெயர்களை பாதுகாப்பு காரணம் கருதி நீதிமன்றம் வெளியிட மறுத்துள்ளது. முள்ளிவாய்க்காலுக்கான விசாரணை இன்னமும் நடத்தப் படுவதில் தடைகள் இருந்தாலும் சிறிலங்காவின் அரச பயங்கரவாதம் குறித்தும் தமிழர்களின் போராட்டம் குறித்தும் எல்லா நாடுகளிலும் நேர்முகமான பார்வை உள்ளது.

சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 19 பேரின் நிலைக்கெதிராக ஹாங்காங் சித்திரவதைக்கு இலக்காகும் வாய்ப்புள்ள அகதிகளை அவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பாத சர்வதேசக் கொள்கையை நடைமுறைப்படுத்தியுள்ளது. சிறிலங்காவில் நடத்தப் படும் சித்திரவதைகளை வருணித்த ஹாங்காங் நீதிமன்றம் மின்னதிர்ச்சியூட்டுதல் பெட்ரோல் புகை செலுத்தி மூச்சுவிடமுடியாமல் செய்தல் இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு வற்புறுத்துதல் போன்றவை பல குடியரசுத் தலைவர்களின் ஆட்சியினூடாக சிறிலங்காவில் முறையாக வடிவம் பெற்று வளர்ந்து வந்திருக்கிறது என்று இச்செய்தியை வெளியிட்ட 'இனப்படுகொலைக்கெதிரான தமிழர்கள்' என்ற அமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார்.

மேற்கண்ட இருவருக்கும் மார்க் டேலி பீட்டர் பேர்ணஸ் என்ற இரு வழக்குறைஞர்கள் வழக்கு நடத்தினர். அவர்களில் பேர்ணஸ் கூறுகையில் 'இது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் பாதுகாப்பு தேவைப்படும் ஒருவருக்கு நீதியை வழங்க நமது நடைமுறை உதவியிருக்கிறது இது இதைப் போன்ற மற்றையோருக்கும் உதவும்' என்றார்.

சித்திரவதை மற்றும் கொடூரத் தனமைக்கெதிரான – மனிதத் தன்மையற்ற இழிவு செய்யும் முறை அல்லது தண்டனைக்கெதிரான ஐ.நா. சாசனத்தை ஹாங்காங் பின்பற்றத் தொடங்கியுள்ளது.

சுவிஸில் டான் தொலைக்காட்சியை டெக் மூலம் விற்பனை செய்யும் விடுதலைப்புலிகள்


 இலங்கையில் தமிழ் ஊடகங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து சிறிலங்கா அரசின் ஊடகங்களையும் சிறிலங்கா அரசின் அடிவருடி ஊடகங்களையும் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் சிறிலங்கா அடிவருடி ஊடகமான டான் தொலைக்காட்சி, ஈ.பி.டி.பியின் தினமுரசு, உட்பட அரச ஊடகங்களை யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து முற்றாக புறக்கணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் டான் தொலைக்காட்சி போன்ற தமிழின விரோத தொலைக்காட்சிகளை பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறிலங்கா அரசின் அடிவருடி தொலைக்காட்சியான டான் தொலைக்காட்சியை சுவிஸில் டெக் மூலம் விடுதலைப்புலிகள் அமைப்பே விற்பனை செய்து வருகிறது. டான் தொலைக்காட்சியை பார்க்கும் டெக்குகளை விடுதலைப்புலிகள் அமைப்பு மாவீரர்நாள் நிகழ்ச்சியின் போது விற்பனை செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் மூலம் சுவிஸில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பு சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக செயற்படுகிறதா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Saturday, 13 April 2013

உதயன் மீது ஒட்டுக்குழு அட்டகாசம்; அச்சு இயந்திரங்களும் எரிப்பு அதிகாலை சம்பவம்




யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன்நாளிதழ் மீது இன்று அதிகாலை மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

துப்பாக்கிகளுடன் உள்நுழைந்த இனந்தெரியாதவர்கள் சரமாரியாகச் சுட்டபடி அச்சகத்தினுள் புகுந்து அச்சு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் பெற்றோல் ஊற்றி இயந்திரத்தையும் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். அச்சு இயந்திரம் இயங்க முடியாத அளவுக்கு பழுதடைந்திருப்பதுடன் அச்சு இயந்திரப் பெருமளவான அச்சுத் தாள்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
 
உதயன் நாளிதழினை முடக்கும் நோக்குடன் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலினால் பத்திரிகை அச்சிடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இன்று 13ஆம் திகதி அதிகாலை 4.30 மணி அளவில் உதயன் அலுவலக வாசலுக்கு தலைக் கவசம் அணிந்தபடி வந்த மூவரில் ஓருவர் "தூஷண'' வார்த்தைகளால் பாதுகாப்பு ஊழியர்களை ஏசியபடி, அங்கிருந்து ஓடுமாறு விரட்டியபடி வான்நோக்கி வேட்டுக்களைத் தீர்த்திருக்கின்றார். 
 
அவனோடு வந்த மற்றைய இருவரும் பிரதான அச்சு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குச் சென்று பணியாளர்களை வெளியேறுமாறு கூறி வேட்டுக்களைத் தீர்த்தனர். 
 
அச்சகப் பணியாளர்கள் மீதான துப்பாக்கிப் பிரயோகத்துக்கு 9மில்லி மீற்றர் பிஸ்ரல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. துப்பாக்கிச் சூட்டில் மயிரிழையில் உயிர் தப்பிக் கொண்ட பணியாளர்கள் அச்சுக் கூடத்தை விட்டுஓடித் தப்பி விட்டனர். துப்பாக்கிதாரிகள் அச்சு இயந்திரத்தின் மீதும் பிரதான மின்மார்க்கத்தின் மீதும் துப்பாக்கியால் சுட்ட பின்னர் அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த காகித றோல்களைத் தீயிட்டு கொழுத்தி அச்சு இயந்திரத்தின் பிரதான பகுதிகள் மீதும்பெற்றோல் ஊற்றிக்கொழுத்தியுள்ளனர்.
 
தமிழர்களின் குரலாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் உதயனின் குரல்வளையை நசுக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளின் பட்டியல் நீண்டு கொண்டேசெல்கிறது. உதயன், மக்களின் கரங்களில் செல்வதைத் தடுக்கும் வகையில் விநியோகப் பணியை முடக்கும்செயற்பாடுகள் இந்த வருடத்தின் ஆரம்பம் முதலேமேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
கடந்த ஜனவரி 10 ஆம் நாள் உதயன் நாளிதழ் விநியோகப் பணிகளில் ஈடுபட்டிருந்த சமயம் வடமராட்சிப் பகுதியில் வைத்து விநியோகப் பணியாளர் ஒருவர் தாக்கப்பட்டதோடு அவரது மோட்டார் சைக்கிளும், அவர் கொண்டு சென்ற பத்திரிகைகளும் நடு வீதியில் வைத்து தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. அத்துடன் ஜனவரி 15ஆம் நாள் உதயன் ஊடகவியலாளர் யாழ்.பஸ் நிலையத்தில் வைத்து மிக மோசமாகத் தாக்கப்பட்டார். 
 
இதன் தொடர்ச்சியாக யாழ். பஸ் நிலையத்தில் வைத்து உதயன் ஊடகவியலாளர் ஒருவருக்கு சீருடை தரித்த இராணுவ அதிகாரி ஒருவரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
 
கடந்த ஏப்ரல் 3ஆம் திகதி உதயன் கிளிநொச்சி பிராந்திய காரியாலயத்துக்குள் புகுந்துகொண்டகாடையர் குழு அங்கிருந்த பணியாளர்களைப் படுமோசமாகத் தாக்கி காயப்படுத்தியதுடன் பல லட்சம் பெறுமதியான பொருள்கள் சேதமாக்கப்பட்டிருந்தன. 
 
இது தவிர கடந்த காலங்களிலும் உதயன் பல சவால்களை எதிர்கொண்டிருந்தான். 2006ஆம் ஆண்டு மே 2ஆம் நாள் உலக ஊடக நாள் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த வேளை மே முதலாம் நாள் இரவில் உதயன் வளாகத்தினுள் புகுந்த காடையர்கள் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். காடையர்களின் இந்தத் தாக்குதலினால் உதயன் விநியோக முகாமையாளர் மற்றும் உதயன் பணியாளர் ஒருவருமாக இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தின்போது கொல்லப்பட்டனர். 
 
அத்துடன் உதயன் ஆசிரியர் பீடத்தினுள் புகுந்த துப்பாக்கிதாரிகள் அலுவலகக் கணினி மற்றும் அதனுடன் இணைந்த உபகரணங்களையும் அழித்தனர்.
 
கடந்த 2010ஆம் ஆண்டு பெப்பிரவரிமாதம் உதயன் அலுவலகத்தின் மீது கிரனைட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் உதயன் பிரதம ஆசிரியரின் வாசஸ்தலம் மயிரிழையில் தப்பியது.
 
கடந்த ஏப்ரல் 3ஆம்திகதி கிளிநொச்சியில் உதயன் அலுவலகம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து பொலிஸ்மா அதிபரிடம் மேலதிக பாதுகாப்புக் கோரி விண்ணப்பித்த போதும் இதுவரையில் அதற்குரிய எந்த விதநடவடிக்கைகளையும் பொலிஸ்மா அதிபர் மேற்கொள்ளவில்லை.
 
இதேவேளை இன்று அதிகாலை இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸ் அவசரத் தொலைபேசி இலக்கமான 119க்குத் தொடர்புகொண்டபோதும் மேலும் யாழ்.பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்துக்கு உதயன் அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்ட போதும் பொலிஸார் பதிலளிக்கவில்லை.
 
இதன் பின்னர் எமதுகொழும்பு அலுவலகத்தின் ஊடாக யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி சமன்சிகேராவின் கைத்தொலைபேசிக்கு அறிவித்ததன் பின்னரே பொலிஸார் உதயன் பணிமனைக்கு வருகை தந்து விசாரணைகளைமேற்கொண்டனர்.