Saturday, 16 February 2013

முஸ்லிம்களின் புர்காவை இலங்கையில் தடை செய்ய வலியுறுத்து


முஸ்லிம் பெண்கள் தமது உடல் முழுதையும் மறைக்கும் வகையில் அணியும் புர்கா ஆடையானது கடவுச்சீட்டு விநியோகத்துக்கு பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்துதாகவும்  இதனால் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்க்காவை இலங்கையில் தடைசெய்ய வேண்டுமென்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் பெண்கள் தமது முகத்தை மறைக்கும் வகையில் அணியும் புர்க்காவை அகற்றுமாறு உள்ளூர் தனியார் வானொலி செய்திச்சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் சூலானந்த பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முன்னதாக குறித்த தனியார் வானொலி முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் எஸ்.எம்.எஸ். வாக்கெடுப்பொன்றையும் நடத்தியதாக தெரிகிறது.
இதில் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் புர்காவையோ அல்லது பர்தாவையோ அகற்றத் தயாரில்லை என தெரியவந்ததாகவும் அறியமுடிகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் சூலானந்த பெரேரா, இது தொடர்பில் ஆட்சேபனையுள்ளவர்கள் எந்தவொரு நேரத்திலும் தன்னைச் சந்திக்க முடியுமென தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த தனியார் வானொலியின் கருத்துக்கணிப்பின் போது, பொது பல சேனா புர்காவை கொள்ளையர்களின் ஆடையாக அடையாளப்படுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

எனினும் இதற்கு பதிலளித்துள்ள உலமா சபை குறித்த ஆடையானது தமது மதத்தில் உள்ளதென்றும் அதனை ஒருபோதும் அகற்ற முடியாது எனவும் தெளிவாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தோழியாக முன்னாள் மகளிர் பிரிவு பொறுப்பாளர் தமிழினி


வவுனியா நலன்புரி முகாமில் அண்மையில் இடம்பெற்ற முன்னாள் போராளிகளின் திருமண நிகழ்வொன்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த ‘தமிழினி’ மணமகளுக்கு தோழியாக கலந்து கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

சுப்பிரமணியம் சிவகாமி என்னும் சொந்த பெயர் கொண்ட தமிழினி கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்தவர்.

1991ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைந்துகொண்டார்.

27.05.2009 அன்று வவுனியா நலன்புரி முகாமில் கைது செய்யப்பட்ட தமிழினி கொழும்புக்கு கொண்டு வரப்பட்டு கடுமையான விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கமைய வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.
26.06.2012 அன்று வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு புனர்வாழ்வு பெற்று வருகிறார்.

ஒருவருட காலத்திற்கான புனர்வாழ்வுக்கு அவர் உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

தொடரும் ஊடக அடக்குமுறை; சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது துப்பாக்கிச் சூடு


சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் பாரூக் சவுகத்தலி என்பவரின்  மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.

பாரூக்கின் வீட்டுக்குள் பிரவேசித்த மூன்று இனந்தெரியாத நபர்கள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பாரூக், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கழுத்துப் பகுதியில் துப்பாக்கிச் சன்னம் பாய்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், உயிராபத்து எதுவும் கிடையாது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடி விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீதான துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஊடகவியலாளர் பரான் சவுகரலி மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணையை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மாஅதிபருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தெஹிவளை மவுன்லெவனியா வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்றிரவு இரவு துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான பரான் சவுகரலி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர் தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

சண்டேலீடர் பத்திரிகை கடந்த காலங்களில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துவந்த ஒரு புலனாய்வுச் செய்தி இதழ்.

புலனாய்வுச் செய்திகளை எழுதிவந்த சௌக்கத் அலி தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று ஏற்கனவே தெரிவித்திருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கடந்த ஒரு தசாப்த காலத்தில் இலங்கையில் பல ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் எந்தவொரு படுகொலை தொடர்பிலும் நீதி விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்படவில்லை என்கின்ற விமர்சனங்கள் தொடர்ந்தும் இருந்த வண்ணம் உள்ளன.