Tuesday 29 October 2013

லண்டனில் இலங்கைச் சிங்கள இளைஞர் ஒருவர் கொலை!


இலங்கையில் இருந்து லண்டன் சென்று பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்றுக் கொண்டிருந்த சிங்கள இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய சென்ற 25 வயதான தவிஷ பீரிஸ் என்ற இந்த இளைஞர், தென் யோக்சயார் என்ற இடத்தில் தொழில் செய்துகொண்டிருந்த நிலையில் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
2011ம் ஆண்டு பிரித்தானியாவுக்கு சென்ற  தவிஷ பீரிஸ் செபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தில் சொப்ட்வெயார் எஞ்சினியரிங் துறையில் கல்வி கற்றுவந்தார்.

இதேவேளை தமது படிப்புக்கும் இலங்கையில் உள்ள தமது குடும்பத்துக்கும் தேவையான பணத்தை உழைப்பதற்காக பீசா உணவகம் ஒன்றில் விநியோகப் பையனாகவும் அவர் தொழில் செய்து வந்தார் என்று யோக்சயார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற ஆடைகளை கொள்வனவு செய்திட FASHIONTAMIL

தாயக மீட்புக்காக ஆயுதக் கொள்வனவு செய்த சுரேசுக்கு கனடாவில் 2 வருட சிறை

 

அமெரிக்காவில் 2006ம் ஆண்டு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழரான சுரேஸ் சிறீஸ்கந்தராசாவுக்கு 2வருட சிறைத்தண்டனை விதித்து நேற்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி குற்றம் சுமத்தப்பட்டுள்ள வோட்டர்லூ சுரேஸ் என்று அழைக்கப்படும் 33 வயதான சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் வழங்கியுள்ளது.

வோட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பொறியியல்துறை மாணவரான சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா 2006 ம் ஆண்டு கனடாவில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராசாவும் மேலும் மூவரும் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்தனர் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக உதவினர் என்ற குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

இந்தநிலையில் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட சுரேஸ் அமெரிக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீடு 2012ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது.

இதன்போது தாம் விடுதலைப் புலிகளுக்காக வானூர்தி உபகரணங்கள், நீர்மூழ்கி கப்பல்கள், இரவு நேர வெளிச்சம் பாய்ச்சி மற்றும் தொலைத்தொடர்புகள் குறித்த ஆராய்ச்சிகளில் உதவியதாக சுரேஸ் நீதிமன்றத்தில் குற்றத்தை ஏற்றுக்கொண்டார்.

Waterloo Suresh என்று அழைக்கப்படும் கனடிய தமிழர், விடுதலைப் புலிகளுக்கு இராணுவ மென்பொருட்களை வாங்க உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டு 2006 ஆகட்ஸ் மாதம் கனடாவில் கைது செய்யப்பட்டு 6 வருட சட்ட போராட்டங்களின் பின் கடந்த டிசம்பர் மாசம் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

அவருக்கு நேற்று New York நீதி மன்றத்தில் 2 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அரச சட்டத்தரணிகள் அவருக்கு அதிகபட்ச தண்டனையான 15 வருடங்களை வழங்குமாறு கேட்டிருந்தனர்.

சுரேஸ் அவர்களின் சட்டத்தரணி அவருக்கு ஆதராவதாக பல அரச, சமூக, தொழில் துறை சார்ந்த புத்திஜீவிகளின் ஆதரவு கடிதங்களையும் மேற்கோள் காட்டி குறிப்பாக Craig Scott என்ற கனடிய M.P சுரேஸை கனடிய தமிழர்களுக்கும் மற்றும் கனடிய குடியேற்ற வாசிகளுக்கும் இவர் ஓர் முன்னுதாரணமானவர் என்றும், மற்றும் கல்வியிலும் Engineering, Business Studies, மற்றும் Arts துறைகளில் மிகத் திறமையானவர் என்றும் பின்பு சட்டத்துறை படிப்பினையும் மேற்கொண்டிருந்தார் என்று அவர் அக்கடித்தத்தில் தெரிவித்திருந்தார்.

அத்தோடு அமெரிக்காவில் சிறையிலிருந்த நிலையிலும் அங்கு கைதிகளுக்கு கல்வி கற்பித்தலில் மிகச் சிறப்பாக செயலாற்றினார். இது போன்ற செயல்களால் மற்றவர்களுக்கு எப்போதும் உதவும் மிகச்சிறப்பான மனமுடையவர் என்றும் கூறப்பட்டது.

இவரின் தண்டனைக் காலம் இதுவரை கனடாவிலும் அமெரிக்காவிலும் சிறையிலிருந்த காலங்கள் கணக்கில் எடுக்கப்படும் என அறியப்படுகின்றது.

Thursday 24 October 2013

இலங்கையில் இப்போது என்ன நடக்கிறது; இடித்துரைத்தது பி. பி. சி

போர் முடிவடைந்துவிட்டது. சமாதானம் வந்துவிட்டதாக இலங்கை அரசு கூறியுள்ளது. ஆனால் அங்கே உண்மையாக நடப்பது என்ன ? இதோ BBC நிருபர் யாழ் சென்று எடுத்த அடுத்த ஆவணப்படம் நேற்று மாலை(புதன்கிழமை) வெளியாகியுள்ளது. 

இலங்கையில் இளைஞர்களும் பெண்களும் இன்னமும் சித்திரவதைகளுக்கும் , பாலியல் துண்புறுத்தலுக்கும் ஆளாகிவருகிறார்கள் என்பதனை இந்த ஆவணப்படம் வெளிவாக எடுத்து காட்டுகிறது. 4 நிமிட நேரத்தில், இலங்கையில் தற்போது என்ன நடக்கிறது என்பதனை BBC வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. 

இதில் ஒரு பெண் தன்னை இலங்கை இராணுவத்தினர் மாறி மாறி கற்பழித்ததாக கூறியுள்ளார். இதனால் தான் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதோடு, அதற்கான மாத்திரைகளையும் எடுத்துவருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆண் ஒருவர் தனது சாட்சியத்தையும் இங்கே பதிவுசெய்துள்ளார். தன்னை சந்தேகத்தின் அடிப்படையில் இராணுவம் கைதுசெய்தது என்றும், தன்னை சொல்லொனா சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


தன்னை சிறையில் வைத்து விசாரிக்கும்போது ஒவ்வொரு கேள்விகளைக் கேட்க்கும்போதும், தனது ஆண் குறியை இலங்கை இராணுவம் கசக்கி தன்னை துண்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவருமே தமது முகத்தை காட்ட மறுத்துவிட்டபோதும், BBC இதனை ஆவணப்படுத்தியுள்ளது. 

இலங்கையில் காமன்வெலத் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ள இன் நிலையில், பல ஆதாரங்கள் இலங்கைக்கு எதிராக வெளியாகியவண்ணம் உள்ளது. இது இலங்கை அரசின் மேல் பல அழுத்தங்களை பிரியோகித்தவண்ணம் உள்ளது. 

Tuesday 22 October 2013

பீரிசிற்கு எதிராக பிரித்தானியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்


பிரித்தானியாவில் அமைச்சர் ஜீ.எல். பீரிசிற்கு எதிராக இன்று மாலை WC1E 7HU, Malet Street  என்னும் முகவரியில் அமைந்துள்ள Senate House  முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று ஒன்று நடைபெற்றுள்ளது.


ஜீ. எல் பீரிஸின் லண்டன்  வருகையை எதிர்த்தும், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கையில் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டு கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்  இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இதில் பெருமளவிலான தமிழர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

Monday 21 October 2013

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழ்ப் பெண்!


பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அடுத்து நடக்கவுள்ள தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் உமா குமரன் என்ற இலங்கைத் தமிழ்ப் பெண் போட்டியிடவுள்ளார்.

உமா குமரனின் பெற்றோர் இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரினால், லண்டனுக்கு குடிபெயர்ந்தனர்.

லண்டனில் பிறந்த உமா குமரன், ஹரோ தொகுதியில் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

லண்டன் குயீன்ஸ் மேரி பல்கலைக்கழகத்தில், அரசியலில் பட்டம் பெற்ற உமா குமரன், பொதுக் கொள்கையில், முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம், பிரெஞ், ஜேர்மன் ஆகிய ஐந்து மொழிகளைப் பேசும் திறன் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Saturday 19 October 2013

பூசாவில் தடுப்புக்காவலில் இருக்கும் இளைஞரின் குடும்பத்தினர் மீண்டும் சுவிஸ் திரும்பினர்


இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளும், கைதுகளும், பாலியல் வன்புணர்வு சம்பவங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில் வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள தமிழ் அகதிகளின் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு திருப்பியனுப்பப்படுவது தொடர்ச்சியாக நிகழ்வாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு திருப்பியனுப்பப்படுவோர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக மனித உரிமை அமைப்புகள்  தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் நிலையில், அண்மையில் சுவிற்சர்லாந்திலிருந்து திருப்பியனுப்பப்பட்ட குடும்பம் ஒன்றின் குடும்பத்தலைவன் கைது செய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இலங்கையைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை அகிலரூபன் அவரது கர்ப்பிணி மனைவியான சாளினி மற்றும் இவர்களது பிள்ளைகளான தமிழவன் (4 வயது), ஓவியா (3 வயது) ஆகியோர் 21.08.2013 அன்று சுவிஸ் அரசாங்கத்தினால் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். 28.08.2013 அன்று இலங்கை விமான நிலையத்தைச் சென்றடைந்த இவர்கள் விமானநிலையத்தில் 13 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட பின்னர், அகிலரூபன் கைது செய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவரது மனைவியின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு மனைவியும், இரண்டு குழந்தைகளும் சுவிஸ் அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டதையடுத்து 14.08.2013 அன்று மீண்டும் சுவிற்சர்லாந்து திரும்பியுள்ளனர்.

இவர்கள் தற்பொழுது செங்காளன் மாநிலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனினும், தனது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு சூரிச் மாநிலத்தில் தங்கள் உறவினர்களுக்கு அண்மையில் தங்க வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இவரைப்போன்று, ஜூலை 12 ஆம் திகதி திருப்பியனுப்பப்பட்ட தமிழ் இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டு கொழும்பிலுள்ள சிறைச்சாலை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் பலத்த சித்திரவதைகளுக்கும், அடிகாயங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக இவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இவ்விரு கைதிகளினதும் தகவல்கள் மற்றும் உடல்நிலை பற்றிய தகவல்களைப் பெற சுவிஸ் தூதரகம், யு.என.;எச்.சி. ஆருடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சுவிஸ் அகதிகள் அதிகார சபையின் இயக்குனர் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை அகதிகள் தற்போதைக்குத் திருப்பியனுப்பப்படமாட்டார்கள். எனினும், இதுவொரு தற்காலிக நடவடிக்கை தான். நாட்டிற்குத் திருப்பியனுப்பக் காத்திருக்கும் 140 இலங்கையரையும் யு.என்.எச்.சி.ஆர் மூலம் தஞ்ச நடைமுறையின் கீழ் வெளிப்புற விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்.

இவர்கள் தாங்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், உயிராபத்தை எதிர்கொள்ள நேரிடும் என முன்னரே சுவிஸ் அதிகாரிகளிடம் எழுத்து மூலம் தெரிவித்துள்ள நிலையிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாதம் திருப்பியனுப்பப்பட்டவரின் சட்டத்தரணி தெரிவிக்கையில், தனது வாடிக்கையாளர் ஏற்கனவே இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமையால் தலையில் ஏற்பட்ட காயங்கள் தொடர்பாகவும் தெரிவித்திருந்தார். அவர் விடுதலையாக கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

சுவிஸ் அகதிகள் சபையின் 2011 கோடை கால அறிக்கையின் பிரகாரம், மத்திய நிர்வாக நீதிமன்றத்தினால் தமிழர்களுக்குத் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை நியாயமான என்பதை வலியுறுத்தினார். ஐரோப்பிய நாடுகளில் சுவிற்சர்லாந்து மட்டுமே தற்பொழுது திருப்பியனுப்புவதை நிறுத்தி வைத்துள்ளது. எனினும், இதுவொரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே என்றார்.

கைது செய்யப்பட்ட இருவரும் சுவிற்சர்லாந்தில் புலிகளுக்கு ஆதரவாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் என இலங்கை அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Wednesday 9 October 2013

கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட சத்தி சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார் CTV நிறுவனம்


500 புகலிடக் கோரிக்கையாளர்களை கப்பல் மூலம் கனடாவுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக CTV நிறுவன ஆவண செய்தியில் சுட்டிக்  காட்டப்பட்டுள்ளது.

நாடு கடத்தப்பட்டதன் பின் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி சுமார் ஒரு வருடகாலம் தான் சிறை வைக்கப்பட்டிருந்ததாக சத்தி எனப்படும் சத்தியபவன் ஆசீர்வாதம் தெரிவித்துள்ளார். 

பிளாஸ்டிக் பைப்புகளால் தாக்கப்பட்டு, உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தவித்ததாக பாதிக்கப்பட்ட சத்தியபவன் ஆசீர்வாதம் தனது கனேடிய சட்டத்தரணியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 

'என் உடலில் தண்ணீர் தாகம் ஏற்பட்டு நான் தண்ணீர் கேட்டபோது அவர்கள் என்னை அடித்தனர், எனது கண்ணை கட்டி கைகளையும் கட்டி போட்டனர், நிர்வாணமாக்கப்பட்டேன், குளிர்ந்த, இருண்ட அறையில் அடைக்கப்பட்டேன். அந்த நாட்களை என்னால் எண்ண முடியவில்லை.' என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில் சத்தி அண்மையில் இடம்பெற்ற விபத்தொன்றில் உயிரிழந்ததாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். 

2010ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம்; 500 புகலிடக் கோரிக்கையாளர்கள் சன் சீ கப்பலில் கனடாவை சென்றடைந்தனர். 

இவர்களை சட்டத்துக்கு புறம்பாக கனடாவுக்குள் அழைத்துச் சென்ற குற்றச்சாட்டில் சத்தி கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், இலங்கை சிறையில் வைத்து சத்தியபவன் ஆசீர்வாதம் மீது சித்திரவதை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Monday 7 October 2013

தமிழர் அரசுக்காக அரியணை ஏறும் நாள் இன்று!

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக ஓய்வு பெற்ற நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் அவர்கள் நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் செய்து பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சர் என்ற பெருமையோடு ஈழத்தமிழ் அரசின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி.வி. விக்னேஸ்வரன் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் கிடைக்க, வாழ்வு சிறக்க இந்த வேளையில் நாம் எல்லோரும் இறைவனைப் பிரார்த்திப்போம்.
பொதுவில் எந்த ஆரம்பக் கருமங்களுக்கும் விநாயகராகிய விக்னேஸ்வரப் பெருமானை வழிபாடாற்றி கருமங்களைத் தொடங்குவதே வழமை.

அந்த வகையில் வடக்கு மாகாண சபையின் முதலாவது தமிழ் அரசுக்கு விநாயகப் பெருமானின் நாமத்தைக் குறிக்கும் விக்னேஸ்வரனே முதலமைச்சர் என்ற அரியணையில் அமர்வது சாலப் பொருத்தமுடையது.
இந்த நாட்டின் உச்ச நீதிமன்றின் நீதியரசராக இருந்த ஒருவர் வடக்கு மாகாண தமிழ் அரசின் அரசராக இன்று அரியணை ஏறுவது தமிழர்களின் தகை சான்ற பெருமையை பறைசாற்றுவதாகும்.

உன்னதமான நீதியரசர். எல்லா இனங்களையும் எல்லா சமயங்களையும் மதிக்கின்ற ஒரு பேரறிஞர்.

எந்தக் கட்சியும் அரசியலும் சாராத ஒப்புரவாளருக்கு தமிழ் மக்கள் தங்களின் பெறுமதியான வாக்குகளை வாரி வழங்கி அவரை தமிழர்களின் ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டனர்.

இது தமிழ் மக்களின் நீதி நெறி தவறாத சால்புடமைக்கும் அறிவுடமைக்கும் தக்க சான்றாகும்.

அதேநேரம் வடக்கு மாகாண சபை என்பதைத் தான் நாம் தேடிக் கண்டோமா? என்று கேட்பதிலும் நியாயமிருக்கவே செய்யும்.

ஒரு காலத்தில் எங்கள் கையில் வடக்கும் கிழக்கும் இணைந்த அரசு கிடைத்ததல்லவா! அதைக் கைவிட்டுவிட்டு இப்போது வடக்கு மாகாணசபை தமிழர்களின் அரசு என்று நீங்கள் கூறுவது சரியானதா? என்று உங்களில் யாரேனும் ஆதங்கம் கொண்டால் அதுவும் ஏற்புடையதே.

எனினும், என்ன செய்வது! கால சூழ்நிலைகள், சர்வதேச மாற்றங்கள், எங்களுக்குள் இருந்த ஒற்றுமையீனங்கள் கூடவே நாங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த கர்மவினைப்பயன்கள் என எல்லாமும் சேர்ந்து எங்களை வஞ்சித்துவிட்டன.

இதனால், வாழவேண்டிய எத்தனையோ எங்கள் உறவுகளை நாம் பறிகொடுத்து விட்டோம். எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கண்ணீர் விட்டுக் கதறிய அப்பாவித் தமிழ் மக்களை காப்பாற்றுவார் யாரு மின்றி இழந்து விட்டோம். இந்தத் துயரம் சாதாரணமானதல்ல. இந்தத் துன்பமான வரலாற்றை எங்கள் இதயங்களில் சுமந்து கொள்கிறோம்.

அதேநேரம், வடக்கு மாகாண அரசு என்பதில் இருந்து எங்கள் உரிமையைப் பெற்றுக் கொள்ளும் ஒரு புதிய பாதையை வகுத்துக் கொள்வதே சமகால சர்வதேச சூழமைவுக்கு ஏற்புடையதாகும்.

உலக நாடுகளும் ஐ.நா சபையும் இலங்கை அரசின் இனச்சார்புடமையை நன்கு விளங்கிக் கொண்டிருக்கும் போது, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என்று அவகாசம் கொடுத்து எச்சரித்திருக்கும் போது நாங்களும் கிடைத்த ஆசனக்கல்லில் அமர்ந்து கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
ஆசனம் கருங்கல்லா, பவளக்கல்லா, சிம்மாசனமா என்பதல்ல கேள்வி.
ஆசனத்திலிருந்து செய்கின்ற கடும் தவமே எங்களுக்கான உரிமையைப் பெற்றுத் தரும் வேள்வி.

இந்த வேள்வியை ஒற்றுமை என்னும் நெய்யூற்றி அனைவரும் வளர்ப்போம்.
அது நிச்சயம் எங்களுக்கு பேரொளி ஆகும்.

Sunday 6 October 2013

தடுப்பிலுள்ள இரு தமிழர்களை சந்திக்க சுவிஸ் அதிகாரிகளுக்கு சிறிலங்கா அனுமதி

சுவிற்சர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டு, சிறிலங்காவில் கைது செய்யப்பட்ட இருவரையும், பார்வையிடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம், சுவிஸ் அதிகாரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.  

குடியேற்றத்துக்கான சுவிஸ் சமஸ்டிப் பணியகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.   கடந்த 2011ம் ஆண்டில் புகலிடம் மறுக்கப்பட்ட இரு தமிழர்களை சுவிற்சர்லாந்து திருப்பி அனுப்பியிருந்தது. 

இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.   இதையடுத்தே, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புவதை, சுவிஸ் அரசாங்கம் கடந்த ஓகஸ்ட் 26ம் நாள், இடைநிறுத்தியது. 

 இந்தநிலையில், தற்போதும் சிறிலங்கா அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு தமிழர்களையும், சுவிஸ் அதிகாரிகள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   குறிப்பிட்ட இருவரினதும், புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டதில் குறைபாடுகள் இருந்திருக்கலாம் என்றும் சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வீரகேசரி நடராஜா, தினக்குரல் ரவிவர்மா - இலங்கையின் இரு பிரபல ஊடகவியலாளர்கள் மறைவு

வீரகேசரி நாளிதழின் முன்னாள் பிரதம ஆசிரியர், எஸ்.நடராஜாவும், தினக்குரல் நாளிதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய ரவிவர்மாவும், நேற்று காலமாகினர். 

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான எஸ்.நடராஜா, 1950களில் ஊடகத்துறைக்குள் நுழைந்து, நான்கு பத்தாண்டுகளாக வீரகேசரி ஆசிரியபீடத்தில் பல்வேறு பொறுப்புவாய்ந்த பதவிகளை வகித்தவராவார்.

இவர் 1997ம் ஆண்டு தொடக்கம், 2005ம் ஆண்டு வரை- வீரகேசரியின் பிரதம ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றார். 

வாயாடி, குருவி போன்ற புனைபெயர்களில் வெளியான இவரது பத்திகள் மிகவும் பிரபலமானவையாகும். 

அதேவேளை, தினக்குரல் நாளிதழில் உதவிஆசிரியராக பணியாற்றிய, ரவிவர்மாவும் நேற்று சுகவீனம் காரணமாக காலமானார்.

இவர், நீண்டகாலமாக தினக்குரல் ஆசிரியபீடத்தில் பணியாற்றிய இவர், சிறந்த அரசியல் கட்டுரைகள், பத்திகளையும் எழுதி வந்தவர். 

கடந்த சில ஆண்டுகளாக இவர் சுகவீனமுற்றிருந்தார். 

மூத்த ஊடகவியலாளர் எஸ்.நடராஜா மற்றும் ரவிவர்மா ஆகியோரின் இழப்பு தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும். 

சூடான் ஜனாதிபதியின் நிலை இலங்கைக்கும் ஏற்படுமா?


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐநா பொதுச்சபையில் நிகழ்த்திய உரை குறித்து, அமெரிக்காவின் பிரபலமான லொஸ்ஏஞ்சல்ஸ் ரைம்ஸ் நாளிதழில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.

அந்தக் கட்டுரையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அடுத்தமுறையும் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க வருவாரேயானால் அதிகளவில் அசௌகரியமான வரவேற்பை பெறக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தார் அதை எழுதிய சசாங் பெங்காலி.

ஐநா பொதுச்சபைக் கூட்டங்களில் முன்னரெல்லாம் லிபிய அதிபர் கடாபி, ஈரானிய அதிபர் மஹ்மூட் அகமட்நிஜாட் போன்றவர்கள் ஐநாவையும் மேற்குலகையும் அதிகம் விமர்சிப்பவர்களாக இருந்து வந்துள்ளனர்.
இப்போது அவர்கள் யாரும் பதவியில் இல்லை.

கடாபி மரணமாகிவிட்டார். ஈரானிய அதிபராக இருந்த அகமட்நிஜாட் பதவியை விட்டு விலகிவிட்டார்.

இந்தநிலையில் பொதுச்சபையின் 68வது கூட்டத்தொடரில் ஐநாவைப் பற்றியும் மேற்குலகைப்பற்றியும் சூசகமான முறையில் விமர்சித்து சர்ச்சையைக் கிளப்பியிருந்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. மனித உரிமை, ஜனநாயகம் போன்ற ஆயுதங்களை வைத்து சிறிய நாடுகளை வல்லமை மிக்க நாடுகள் துன்புறுத்துவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்தக் கருத்து இலங்கை மீதாக அமெரிக்காவினதும், மேற்குலகினதும் அழுத்தங்களின் வெளிப்பாடுதான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

சிறிய நாடான இலங்கை மீது மனித உரிமை உள்ளிட்ட விவகாரங்களைப் பயன்படுத்தி அனைத்துலக சமூகம் அதிகளவு அழுத்தங்களைக் கொடுக்கிறது என்பது இலங்கை அரசாங்கத்தினது கருத்தாக உள்ளது.

ஆனால் சர்வதேச சமூகத்தினது பார்வையில் குறிப்பாக மேற்குலகின் பார்வையில் இலங்கை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத நாடாக எதேச்சதிகார நாடாகப் பார்க்கப்படுகிறது.

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வெளியிட்ட கருத்தை இந்த நாடுகள் பெரும்பாலும் ஏற்கின்ற நிலையில் இருக்கின்றன.

எதேச்சதிகாரப் போக்கில் செல்வதாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் தாம் பதவிக்கு வந்த பின்னர் எத்தனை தேர்தல்களை நடத்தியிருக்கிறோம் என்று கணக்குக் காட்டியிருக்கிறது.

ஆனால் தேர்தல் மூலமான தெரிவு என்பது முற்றிலும் ஜனநாயக சூழலைப் பிரதிபலிப்பதாக அர்த்தமில்லை என்பதே மேற்குலகின் வாதம்.

ஏனென்றால் பல தசாப்தங்களாக ஆட்சயைத் தம் கைக்குள் வைத்திருந்த பல சர்வாதிகாரிகள் தேர்தலைத் தமக்கு சார்பாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் தான்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஆட்சியில் இருக்கும் ஸிம்பாப்வே அதிபர் ரொபர்ட் முகாபே அண்மையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் 7வது தடவையாக வெற்றி பெற்றிருந்தார்.

ஆனால் அங்கு மோசமான மனித உரிமை மீறல்கள் நடப்பதும், அவரது ஆட்சி சர்வாதிகாரப் போக்கு கொண்டது என்பதும் வெளிப்படையான உண்மைகள்.
ஆனாலும் அவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களால் வெற்றி பெற முடியவில்லை.
இப்படிப்பட்ட சூழலுக்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

ஆட்சியிலிருப்பவர்கள் எல்லாவற்றையும் தன் கைக்குள் போட்டுக் கொண்டு பிறர் வெற்றி பெற முடியாதளவுக்கு தேர்தலில் செல்வாக்கு செலுத்துபவராக இருக்க வேண்டும்.

அல்லது வலுவான எதிர்க்கட்சியோ வேட்பாளரோ இல்லாதிருக்க வேண்டும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் இவற்றில் எந்தச் சூழல் உள்ளது என்பதை புரிந்து கொள்வது ஒன்றும் சிரமமான காரியமில்லை.

இலங்கையில் அரசாங்கத்தை எதிர்த்து, தேர்தலில் வெற்றி கொள்வது எத்தகைய சிரமமான காரியம் என்பதை உலகம் ஓரளவுக்கேனும் புரிந்து கொண்டுள்ளது.

அதையெல்லாம் தாண்டி வெற்றி பெற வேண்டும் என்றால் அண்மையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களித்தது போன்று பெருமளவு மக்கள் துணிச்சலோடும் எழுச்சியோடும் வாக்களிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
போர் வெற்றி மாயை என்ற தெற்கிலுள்ள மக்களின் பலவீனத்தை அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தனது அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்வதை உலகம் அவ்வளவாக சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை.

அதனால்தான் நவநீதம்பிள்ளையின் வாயில் இருந்து எதேச்சதிகாரப் போக்கு பற்றிய கருத்து வெளியானது.

அதுமட்டுமன்றி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முழுமையான அறிக்கையை அவர் சமர்ப்பிக்கப் போகிறார்.

அவரது வாய்மூல அறிக்கையில் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் முன்னேற்றகரமான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதுமட்டுமன்றி வரும் 2014 மார்ச் மாதத்துக்குள் பொறுப்புக் கூறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் தனியான விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் கடப்பாடு சர்வதேச சமூகத்துக்கு உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சர்வதேச விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் அதிகாரத்தை நவநீதம்பிள்ளை கொண்டிருக்காது போனாலும் சர்வதேச சமூகத்தின் துணையுடன் அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளும் நிலையில் அவர் இருக்கிறார்.

அவரது நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதாக அமெரிக்கா ஒன்றுக்கு இரண்டு முறை அதிகாரபூர்வமாகவும் அறிவித்துள்ளது.

ஆக வரும் மார்ச் மாதத்துக்குள் பொறுப்புக் கூறுவதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்க அரசாங்கம் தவறினால் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் சர்வதேச சமூகம் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
ஆனால் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லாது போனாலும் சர்வதேசப் பொறிமுறையைத் தவிர்ப்பதற்கான எந்த முயற்சிகளிலும் ஈடுபட அது தயாராக இல்லை.

இத்தகையதொரு சூழலில் தான் லொஸ்ஏங்சல்ஸ் ரைம்ஸ் கட்டுரை கடாபி, அஹமட்நிஜாட் போன்றவர்களையும் நினைவுபடுத்தி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பற்றிய கட்டுரையை வரைந்துள்ளது.

அதுமட்டுமன்றி டார்பூர் பிராந்தியத்தில் இனப்படுகொலை மற்றும் பிற குறறங்களில் ஈடுபட்டதற்காக அனைத்துலக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சூடானிய அதிபர் ஒமர் ஹசன் அகமட் பஷிரையும் தொடர்புபடுத்தி இந்தக் கட்டுரை வரையப்பட்டுள்ளது.

சூடானிய அதிபர் பஷீர் இம்முறை ஐநா பொதுச்சபைக் கூட்டத்துக்கு செல்ல முடியவில்லை.

காரணம் அவர் மீதான போர்க்குற்ற விசாரணை தான்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறத் தவறினால் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புத் தான், அடுத்தமுறை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐநா பொதுச்சபைக் கூட்டத்துக்கு வருவாரேயானால் அசௌகரியமான வரவேற்பை சந்திக்க நேரலாம் என்று லொஸ்ஏஞ்சல்ஸ் ரைம்ஸ் கட்டுரை குறிப்பிட்டதற்குக் காரணம்.

இது இலங்கை அரசாங்கம் சர்வதேச அளவில் பாரிய நெருக்கடிகளைச் சந்திப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன என்ற கருத்தையே பிரதிபலிக்கிறது.