Monday 7 October 2013

தமிழர் அரசுக்காக அரியணை ஏறும் நாள் இன்று!

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக ஓய்வு பெற்ற நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் அவர்கள் நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் செய்து பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சர் என்ற பெருமையோடு ஈழத்தமிழ் அரசின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி.வி. விக்னேஸ்வரன் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் கிடைக்க, வாழ்வு சிறக்க இந்த வேளையில் நாம் எல்லோரும் இறைவனைப் பிரார்த்திப்போம்.
பொதுவில் எந்த ஆரம்பக் கருமங்களுக்கும் விநாயகராகிய விக்னேஸ்வரப் பெருமானை வழிபாடாற்றி கருமங்களைத் தொடங்குவதே வழமை.

அந்த வகையில் வடக்கு மாகாண சபையின் முதலாவது தமிழ் அரசுக்கு விநாயகப் பெருமானின் நாமத்தைக் குறிக்கும் விக்னேஸ்வரனே முதலமைச்சர் என்ற அரியணையில் அமர்வது சாலப் பொருத்தமுடையது.
இந்த நாட்டின் உச்ச நீதிமன்றின் நீதியரசராக இருந்த ஒருவர் வடக்கு மாகாண தமிழ் அரசின் அரசராக இன்று அரியணை ஏறுவது தமிழர்களின் தகை சான்ற பெருமையை பறைசாற்றுவதாகும்.

உன்னதமான நீதியரசர். எல்லா இனங்களையும் எல்லா சமயங்களையும் மதிக்கின்ற ஒரு பேரறிஞர்.

எந்தக் கட்சியும் அரசியலும் சாராத ஒப்புரவாளருக்கு தமிழ் மக்கள் தங்களின் பெறுமதியான வாக்குகளை வாரி வழங்கி அவரை தமிழர்களின் ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டனர்.

இது தமிழ் மக்களின் நீதி நெறி தவறாத சால்புடமைக்கும் அறிவுடமைக்கும் தக்க சான்றாகும்.

அதேநேரம் வடக்கு மாகாண சபை என்பதைத் தான் நாம் தேடிக் கண்டோமா? என்று கேட்பதிலும் நியாயமிருக்கவே செய்யும்.

ஒரு காலத்தில் எங்கள் கையில் வடக்கும் கிழக்கும் இணைந்த அரசு கிடைத்ததல்லவா! அதைக் கைவிட்டுவிட்டு இப்போது வடக்கு மாகாணசபை தமிழர்களின் அரசு என்று நீங்கள் கூறுவது சரியானதா? என்று உங்களில் யாரேனும் ஆதங்கம் கொண்டால் அதுவும் ஏற்புடையதே.

எனினும், என்ன செய்வது! கால சூழ்நிலைகள், சர்வதேச மாற்றங்கள், எங்களுக்குள் இருந்த ஒற்றுமையீனங்கள் கூடவே நாங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த கர்மவினைப்பயன்கள் என எல்லாமும் சேர்ந்து எங்களை வஞ்சித்துவிட்டன.

இதனால், வாழவேண்டிய எத்தனையோ எங்கள் உறவுகளை நாம் பறிகொடுத்து விட்டோம். எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கண்ணீர் விட்டுக் கதறிய அப்பாவித் தமிழ் மக்களை காப்பாற்றுவார் யாரு மின்றி இழந்து விட்டோம். இந்தத் துயரம் சாதாரணமானதல்ல. இந்தத் துன்பமான வரலாற்றை எங்கள் இதயங்களில் சுமந்து கொள்கிறோம்.

அதேநேரம், வடக்கு மாகாண அரசு என்பதில் இருந்து எங்கள் உரிமையைப் பெற்றுக் கொள்ளும் ஒரு புதிய பாதையை வகுத்துக் கொள்வதே சமகால சர்வதேச சூழமைவுக்கு ஏற்புடையதாகும்.

உலக நாடுகளும் ஐ.நா சபையும் இலங்கை அரசின் இனச்சார்புடமையை நன்கு விளங்கிக் கொண்டிருக்கும் போது, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என்று அவகாசம் கொடுத்து எச்சரித்திருக்கும் போது நாங்களும் கிடைத்த ஆசனக்கல்லில் அமர்ந்து கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
ஆசனம் கருங்கல்லா, பவளக்கல்லா, சிம்மாசனமா என்பதல்ல கேள்வி.
ஆசனத்திலிருந்து செய்கின்ற கடும் தவமே எங்களுக்கான உரிமையைப் பெற்றுத் தரும் வேள்வி.

இந்த வேள்வியை ஒற்றுமை என்னும் நெய்யூற்றி அனைவரும் வளர்ப்போம்.
அது நிச்சயம் எங்களுக்கு பேரொளி ஆகும்.

No comments:

Post a Comment