Sunday 6 October 2013

தடுப்பிலுள்ள இரு தமிழர்களை சந்திக்க சுவிஸ் அதிகாரிகளுக்கு சிறிலங்கா அனுமதி

சுவிற்சர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டு, சிறிலங்காவில் கைது செய்யப்பட்ட இருவரையும், பார்வையிடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம், சுவிஸ் அதிகாரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.  

குடியேற்றத்துக்கான சுவிஸ் சமஸ்டிப் பணியகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.   கடந்த 2011ம் ஆண்டில் புகலிடம் மறுக்கப்பட்ட இரு தமிழர்களை சுவிற்சர்லாந்து திருப்பி அனுப்பியிருந்தது. 

இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.   இதையடுத்தே, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புவதை, சுவிஸ் அரசாங்கம் கடந்த ஓகஸ்ட் 26ம் நாள், இடைநிறுத்தியது. 

 இந்தநிலையில், தற்போதும் சிறிலங்கா அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு தமிழர்களையும், சுவிஸ் அதிகாரிகள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   குறிப்பிட்ட இருவரினதும், புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டதில் குறைபாடுகள் இருந்திருக்கலாம் என்றும் சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment