Monday 10 December 2012

எங்க இருந்து அள்ளுறதாம் காசு....


 உறைபனியில் உணர்வுகளைத் துறந்து தினமும்
மனிதரல்ல இயந்திரம்போல் உழைத்தும் என்ன
வரும் துயரை நீக்க ஒரு வழியில்லாமல் இங்கே
வருந்துகின்ற நாதியற்ற அகதிகள் எமக்கு !!!!.......

நடு நடுங்க உடல் விறைக்க இன்னுமொரு
நரகலோக வாழ்வும் உண்டோ இதைவிடவும்!!!!....
விரல்களுக்குள் ஊசிகளால் குத்துவது போல் இந்த
வேதனைகள் தாங்கி நிற்க முடியவில்லையே !...

செலவழித்து உடை வாங்கிப் போட்டுக்கொள்ளவும்
சீரழிந்த தமிழனுக்கு வேறு வழியும் உண்டோ....
உறவுகளின் கண்ணீரைப் பார்த்துப் பார்த்தே
உழைத்த பணம் உண்டியலைத் துடைத்துச் செல்லும் போது!..

விரகம் என்ன தாபம் என்ன எல்லாம் போய்விடும்
மன விரக்தி மட்டும் நெஞ்சுக்குள்ளே நின்றாடிடும்
உலர்ந்த தரை உணர்சிகளைக் காட்டக் கொஞ்சம் இங்கே
உனக்கும் சுடும் என்ன செய்ய வாழ்க்கை இதுதான்!....

பரந்த கடல் தாண்டி வந்து அப் பாவிகளாய்
பர பரப்பில் மூழ்கும் இந்த நாடுகளில்
தின(மு)ம் குறித்த நேரம் அதற்குள் வேலைத்தளம்
செல்ல வேண்டும் செல்ல வேண்டும் என அவதியுறுவர்!...

இவர்(கள் ) குறித்து யாரும் இங்கே கவலை கொள்ளார்
இருக்கும் இடம் வெளிநாடு என்றோர் எண்ணம் !...........
பணம் காய்க்கும் மரம்தான் நாமும் இங்கே ஆனாலும்
பணம் பறிக்கும் கைகள் அது வேறொன்றாகுதே!!!!.....

உழைத்த பணம் வில்லுக் கட்டச் சரியாய்ப் போகுது
இந்த ஊருக்குள்ளும் கள்ளப் புத்தி உள்ளோர் வாழ்கிறார்!...
பொதுப்படையாய்ப் பார்க்கும் போது உண்மை புரியாது
புறப்பட்டு வா உன் புலனைத் திருத்திச் செல்லலாம்!.....

No comments:

Post a Comment