Sunday 3 March 2013

பிரித்தானிய தமிழ் அகதிகளை திருப்பியனுப்பக் கூடாதென்ற முடிவு தற்காலிகமானதே


பிரித்தானியாவில் அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு திருப்பியனுப்பக்கூடாதென பிரித்தானிய நீதிபதிகள் எடுத்திருக்கும் முடிவானது தற்காலிகமான ஒரு தீர்ப்பு என்று சட்ட உதவி ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மேற்படி தீர்ப்பிற்கு எதிராக பிரித்தானிய குடிவரவுத்துறை மேன்முறையீட்டையும் சமர்ப்பித்துள்ளது. அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டவர்களை இலங்கைக்கு திருப்பியனுப்பும் நடவடிக்கையை கடந்த பல மாதங்களாக பிரித்தானிய குடிவரவுத்துறையினர் மேற்கொண்டுவரும் நிலையில் - இதற்கு எதிராக பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் பிரித்தானிய உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு கடந்த 27 ஆம் திகதி விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளே அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட எவரையுமே இலங்கைக்கு திருப்பியனுப்பக்கூடாதென்ற திருப்புமுனையான முடிவை வழங்கினர். எனினும் இந்த முடிவானது தற்காலிகமான ஒன்றுதான் என சட்ட உதவி ஆலோசகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் மேற்படி வழக்கை தாக்கல் செய் சதா அன்ட் கோ நிறுவன சட்ட ஆலோசகர் பிரபா கேசரிக்கு தெரிவித்த கருத்துகள் வருமாறு: -

கேள்வி : அரசியல்தஞ்சக் கோரிக்கைக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள் நாட்டுக்குத் திருப்பியனுப்பப்படுவதை பிரித்தானிய நீதிபதிகள் தடுக்கும் வகையில் தீர்ப்பு வழங்கியுள்ளனர் என்பதன் உண்மை நிலை என்ன?

பதில் : பிரித்தானிய குடிவரத்துறையால் கடந்த 28ம் திகதி பிரத்தியேக விமானம் மூலம் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட ஒரு தொகுதி இலங்கைத் தமிழ் அகதிகளை நாட்டுக்குத் திருப்பியனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக செயற்பட்ட சட்டத்தரணிகள் மேற்படி அகதிகளை இலங்கைக்கு திருப்பியனுப்புவதை நிறுத்தும் வகையில் தடையுத்தரவுகளுக்கான வழக்கை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு கடந்த கடந்த 27ம் திகதி மாலை இரண்டு மணிக்கு நீதியரசர்கள் வில்கீ, திருமதி கிளீசன் ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேற்படி வழக்கிற்காக பாதிக்கப்பட்டவர்களில் நால்வரின் விண்ணப்பங்களை நீதியரசர்கள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.

இவற்றில் மூன்று பேரின் விண்ணப்பங்கள் சதா அன்ட் கோ நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்டவையாகும். பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் பரிஸ்டர்களான (சட்டத்தரணிகள்) சாலட் பயடியும் நிஷான் பரஞ்சோதியும் இந்த வழக்கை வாதாடினார்கள்.

கேள்வி: மேற்படி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் எவை?

பதில் : மேற்படி வழக்கில் 2500 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை கணக்கில் எடுத்த நீதியரசர்கள் பிரித்தானியாவிலிருந்து திருப்பியனுப்பப்படும் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு மோசமாகி வரும் நாட்டு நிலைமையால் உயிராபத்து உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டனர்.

எனினும் இந்த விடயத்தில் ஏற்கனவே விசாரணையில் இருக்கும், அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர் எவரையுமே இலங்கைக்குத் திருப்பியனுப்புதல் சம்பந்தமான வழிகாட்டி வழக்கு தீர்மானிக்கப்படும் வரை அவர்களை திருப்பியனுப்பக் கூடாது என்ற திருப்புமுனையான முடிவினை எடுத்தனர்.

கேள்வி : மேற்படி வழக்கு விசாரணையில் நீதியரசர்கள் தெரிவித்த முக்கியமான விடயமாக எதனைக் கருதுகிறீர்கள் ?

பதில்: இலங்கை தமிழ் அகதிகள் குறித்து நீதிமன்றுக்குத் தெரியப்படுத்தப்பட்ட நிலைமைகள் அபூர்வமானவையே எனலாம் என்று கூறிய நீதியரசர் வில்கீ, இந்த நிலைமகளை நீதிமன்றம் கண்டுகொள்ள முடியாதது போல் இருப்பது வியப்பானதொரு விடயம் என்றார்.

தெரிவிக்கப்பட்ட தீர்ப்பினை முழுமையாக நோக்குமிடத்து இது அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை இலங்கைக்குத் திருப்பியனுப்பும் பிரித்தானிய குடிவரவுச் சேவையின் சட்ட நடவடிக்கைகளில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைவதை நோக்கலாம்.

கேள்வி: இத் தடை தற்காலிகமானதெனின் அது எவ்வளவு காலத்திற்குச் செல்லுபடியாகும்?

பதில் : ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது போல் இலங்கைக்குத் திருப்பியனுப்புதல் சம்பந்தமான வழிகாட்டி வழக்கு முடிவுக்கு வரும் வரை இது செல்லுபடியாகும். அந்த வழக்கு ஏற்கனவே மேன்முறையீட்டு நடுவர் மன்றில் விசாரிக்கப்பட்டு வருகின்ற ஒன்று. அது முடிவுறும் திகதியைப் பற்றி இப்போதே கூறமுடியாது.

கேள்வி : உயர்நீதிமன்ற நீதியரசர்களின் மேற்படி முடிவின் பின்னர் பிரித்தானிய குடிவரவுச் சேவையின் நிலைப்பாடு என்ன?

பதில்: கடந்த 27ம் திகதியே அவர்கள் நீதியரசர்களின் மேற்படி தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீட்டை தாக்கல் செய்துள்ளனர். அது விசாரணைக்கு எப்போது எடுக்கப்படும் என்பதை தற்போது அறிய முடியவில்லை என்றார்.

No comments:

Post a Comment