Sunday, 24 March 2013

மகர ராசி குருப்பெயர்ச்சிப் பலன்கள் (2013-2014)

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)


இதுவரை 5-ஆம் இடத்தில் இருந்த குரு இப்போது 6-ஆம் இடமான மிதுனத்திற்கு மாறியிருக்கிறார்.

பொதுவாக 3, 6, 8, 12-ஆம் இடங்கள் குருவுக்கு துர்ப்பலன்களைத் தரக்கூடிய இடங்கள். "சத்தியமாமுனி ஆறிலே இரு காலிலே தலை பூண்டதும்' என்பது பாடல். ஜோதிடர்களும் ஜோதிடப் பத்திரிகை களும் மேஷ ராசிக்கும், கடக ராசிக்கும், விருச்சிக ராசிக்கும், மகர ராசிக்கும் குருப்பெயர்ச்சிப் பலன்கள் சாதகமில்லையென்றே எழுதி பயமுறுத்துவார்கள். அவர்கள் சொல்லுவதும் எழுதுவதும் தவறில்லை. "தானப்பா ஆறுக்கு தோஷமுண்டு தார்வேந்தர் பகையுண்டு ரோக முண்டு' என்று ஆறாம் இடத்து குரு பலனை புலிப்பாணி விளக்குகிறார். என்றாலும் கடந்தகால குரு ஐந்தில் நின்றபோது என்னென்ன யோகம் செய்தார் என்பதைப் பொறுத்தே 5-ஆம் இடத்துப் பலனை நிர்ணயிக்க வேண்டும்.

மகர ராசிக்கு 3, 12-க்குடைய குரு பாப ஆதிபத்தியம் பெற்ற கிரகம். அவர் 6-ல் மறைவதால், "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்ற அடிப்படையில் நன்மைகள் நடக்குமென்று எதிர்பார்க்கலாம்.

6-ஆம் இடம் என்பது கடன், வியாதி, வைத்தியச் செலவு, எதிரி, போட்டி, பொறாமை ஆகியவற்றைக் குறிக்கும். இதில் குரு நிற்பதால் இவற்றை அதிகமாக்குவார் என்பதுதான் பலன்.

அப்படி வரும் கடன் நல்லதற்காக அமைந்தால் அதை ஏன் கெடுதல் என்று சொல்லவேண்டும். எதிரியும், போட்டி, பொறாமையும் இருந்தால்தான் நீங்கள் விழிப்போடு செயல்படுவீர்கள். இல்லா விட்டால் சக்திக்கு குறைந்த சாமான்யராகி விடுவீர்கள் என்று ஏன் சொல்லக்கூடாது.

மிதுன குரு 5-ஆம் பார்வையாக 10-ஆம் இடத்தையும்; 7-ஆம் பார்வையாக 12-ஆம் இடத்தையும்; 9-ஆம் பார்வையாக 2-ஆம் இடத்தையும் பார்க்கிறார்.

10-ஆம் இடம் துலாம். அதற்குத் திரிகோணத்தில் நின்று குரு 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். அதனால் கடந்த காலத்தில் வேலை தேடி செய்த தீவிர முயற்சிகளுக்கு இப்போது பலன் கிடைக்கும். அப்போது ஆரம்பித்த வியாபாரம் இப்போது லாபகரமாக சூடு பிடிக்கலாம். அன்று தச்சு செய்த கட்டடம் இன்று பூர்த்தியடையலாம்; கிரகப் பிரவேசம் நடக்கலாம்.

தொழில் ஸ்தானமான துலா ராசிக்கு 3, 6-க்குடையவர் குரு. 6-ஆம் இடம் என்பது கடன் ஸ்தானம். அதனால் தொழில் முயற்சி, வேலை வாய்ப்பு, கட்டட காரியங்களுக்காக குறைந்த வட்டிக்கு கடன் வாங்கலாம். நீண்டகாலத் தவணைக் கடன், வங்கிக் கடன் கிடைக்கும். அல்லது ஹவுசிங் சொஸைட்டி, எல்.ஐ.சி போன்ற நிதி நிறுவனங்களில் உதவி பெறலாம்.

குரு 2-ஆம் இடமான தன ஸ்தானத்தைப் பார்ப்பதால், தனவிருத்தியும் சம்பாத்தியமும் குறையாமல் இருக்கும். அதிலும் தன ஸ்தானாதிபதி குரு தன ஸ்தானத்தையே பார்ப்பது சிறப்பு. எனவே சம்பாத்திய வரவாக இருந்தாலும் சரி; லாப வரவாக இருந்தாலும் சரி; கடன் வரவாக இருந்தாலும் சரி- வரவுக்குப் பஞ்சமிருக்காது. கடந்த நாலைந்து வருட காலமாகவே மகர ராசிக்காரர்களுக்கு மற்ற எல்லா வசதிகளும் சௌகர்யங்களும் நடந்த போதிலும், தேவைக்கேற்ற சரளமான பணப்புழக்கம் இல்லை. அதற்கான அளவுக்கு நிலையான தொழில், நிரந்தர வருமானம் அமையவில்லை. அப்போதைக்கப்போது அந்தந்த தேவைகள் எப்படியோ ஓடியடைந்தது.

ஒரு அன்பர் குடும்பத்தில் மனைவி, மக்களின் ஒற்றுமை, ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. வியாபாரத்திலும் கடன், வட்டி தொல்லையால் பாதிக்கப்பட்டு கவலை. என்றாலும் ஒரு கோவிலைக் கட்டி கும்பாபிஷேகம் செய்தார். பெரிய ஹோமமும் நடத்திவிட்டார். பொதுக் காரியம் செயல்பட்டது; புகழ் கிடைத்தது; புண்ணியம் சேர்ந்தது. வீட்டில்தான் நிம்மதியில்லை. அப்படிப்பட்டவர்களுக் கெல்லாம் இந்த 6-ஆமிடத்து குரு குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் தன் சொந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் தருவது உறுதி.

எனவே, குரு இருக்கும் இடத்தைப் பற்றி பயப்படாமல்- கவலைப் படாமல் அவர் பார்வை பட்ட இடங்களின் பயனையும் பலன்களையும் ஆராய்ச்சி செய்தால் அனுகூலமாகத் தரும்.

12-ஆம் இடத்தை 12-க்குடைய குருவே பார்ப்பதால் விரயங்கள், செலவுகள் வந்தாலும் அவை பயனுள்ள செலவாகவும் நன்மையான விரயங்களாகவும் இருக்கும். வியாபாரிகள் தொழில் துறையில் புதிய முதலீடுகளைச் செய்து தொழிலைப் பெருக்கலாம். வியாபாரம் கூடுதலாக இருந்தாலும், சனியும் ராகுவும் 12-ஐப் பார்ப்பதால் சேமிக்க முடியாதபடி செலவுகள் ஏற்படும். சிலர் அரசு வேலை வாங்குவதற்காக அரசியல்வாதிகளுக்குப் பணம் கொடுத்துவிட்டு வேலை தாமதமாவ தால் நம்பிக்கை தளரும். குரு பார்வையால் தாமதமானாலும் பணம் கிடைக்கும். 4-ஆம் இடத்தை சனியும் ராகுவும் பார்ப்பதால் பூமி, வீடு, வாகனம் சம்பந்தமான செலவுகளும் ஏற்படும். சனி, ராகு- கேது தசாபுக்திகள் நடப்பவர்கள் கொஞ்சம் கவனமாகச் செயல்பட வேண்டும். இடத்து சம்பந்தமான பிரச்சினைகளை சந்திப்பவர்கள் விருத்தாசலம் அருகில் ஸ்ரீ முஷ்ணம் சென்று பூவராக சுவாமியை வழிபட வேண்டும்.

அரசு வேலையில் இருப்பவர்களுக்கு 10-ல் சனி, ராகு நிற்பதால் பதவி உயர்வும் விரும்பிய இடப்பெயர்ச்சியும் தாமதமாகும். வேலைப் பளு அதிகமாகும். அதற்கான பாராட்டும் பதவி உயர்வும் தாமதமாகும். தொழில்காரகன் சனி என்பதால், திருநள்ளாறு சென்று சனீஸ்வரரை வழிபடலாம். அல்லது தேனி சின்னமனூர் அருகே குச்சனூர் சென்று வழிபடலாம். குச்சனூர் அருகில் வடகுரு ஸ்தலம் இருக்கிறது. அங்கும் சென்று வழிபடலாம். தென்காசிப் பாதையில் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் சென்று ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சனேயரை வழிபடவும். சேலம் நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று தத்தகிரி முருகன் கோவிலில் (சாமியார் கரடு ஸ்டாப்) வழிபடலாம்.

28-5-2013 முதல் 26-6-2013 வரை மிருகசீரிடத்தில் குரு சஞ்சாரம்.

மிருகசீரிடம் செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் 4, 11-க்குடையவர். இந்த ஒருமாத காலமும் உங்களுக்கு அனுகூல காலமாகவே அமையும். உடலில் ஆரோக்கியமும் திடகாத்திரமும் இருக்கும். பூமி, வீடு, மனை, வாகனம் சம்பந்தமான நற்பலனை எதிர்பார்க்கலாம். ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாம். கெமிக்கல் அல்லது சிவப்பு நிறப்பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்கிறவர்களுக்கும் ஆதாயமான நேரம்.

 26-6-2013 முதல் 28-8-2013 வரை முதல் கட்டமாகவும்; 26-1-2014 முதல் 13-4-2014 வரை இரண்டாம் கட்டமாகவும் ராகுவின் சாரத்தில் திருவாதிரையில் குரு சஞ்சாரம் செய்வார். ராகு ராசிநாதனோடு சேர்ந்து 10-ல் இருக்கிறார். ராசிநாதன் சனி உச்சமாக இருக்கிறார். எனவே தொழில், வியாபாரம், வாழ்க்கை எல்லாவற்றிலும் அற்புதமான பலன்களை எதிர்பார்க்கலாம்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு, வேலையில் திருப்தி ஆகிய மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழிலதிபர்களுக்கு புதிய கூட்டு, புதிய முயற்சிகள், வெற்றி வாய்ப்புகள், சந்தோஷம் உண்டாகும்.

28-8-2013 முதல் 26-1-2014 வரை முதல் கட்டமாகவும்; 13-4-2014 முதல் 13-6-2014 வரை இரண்டாம் கட்டமாகவும் புனர்பூசத்தில் குரு சஞ்சாரம் செய்வார். புனர்பூசம் குருவினுடைய சொந்த நட்சத்திரம். 12-க்குடையவர் 6-ல் இருக்கிறார். முதல்கட்டத்தில் நற்பலன்கள் நடந்தால், இரண்டாம் கட்டத்தில் எதிர்மறைப் பலன்களாக நடக்கும். 6-ஆம் இடம் போட்டி, பொறாமை, எதிரி, கடன், வைத்தியச் செலவு ஆகிய பலன்களும்; வீண் விரயம், எதிர்பாராத இழப்பு, ஏமாற்றம் ஆகிய பலன்களும் ஒரு கட்டத்தில் நடைபெறும். இன்னொரு கட்டத்தில் தைரியம், எதிர்பாராத உதவி, சகாயம், சுப முதலீடு, வரவேண்டிய பாக்கிகள் வசூல் ஆகிய பலன்களையும் சந்திக்கலாம். தேவூர் என்ற ஊர் குபேரன் வழிபட்ட ஸ்தலம். குருவுக்கு பதவிகிடைத்த ஸ்தலம். கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் எஸ். புதூர் வழியில் உள்ளது. அங்கு சென்று வழிபடலாம்.

1-6-2013 முதல் 1-7-2013 வரை குரு அஸ்தமனம்

மகர ராசிக்கு குரு 3, 12-க்குடையவர். அவர் 6-ல் அஸ்தமனமடைவது நல்லது. எதிரி, கடன், விவகாரம் எல்லாம் மாறி உங்களுக்கு அனுகூலமாக அமையும். “"கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்றபடி, 12-க்குடைய குரு 6-ல் இருப்பது உங்களுக்கு அனுகூலம்.

24-10-2013 முதல் 20-2-2014 வரை குரு வக்ரம்

மகர ராசிக்கு 12-க்குடைய குரு வக்ரமடைகிறார். வக்ரத்தில் உக்ர பலம். குரு இயற்கையில் சுப கிரகமாகும். ஆனால் அவர் 6-ஆமிடத்தில் வக்ரமடைவதால், 6-ஆம் இடத்திற்குரிய பலன்கள் அதிகம் செயல்படும். ரோகம், ருணம், சத்ரு- அதாவது வியாதி, கடன், எதிரி போன்றவை வலுவாக இருக்கும். அதனால் சில தொல்லைகளை சந்திக்க நேரும். ஜாதக தசாபுக்தி யோகமாக இருந்தால் எல்லாவற்றையும் எளிதாக சமாளிக்கலாம்.

உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு:

உத்திராடம் சூரியனின் நட்சத்திரம். சூரியன் உங்கள் ராசிக்கு 8-க்குடையவர். குருவும் 6-ல் இருப்பதால் உங்கள் முயற்சிகளில் குறுக்கீடுகளும் தடைகளும் இருக்கத்தான் செய்யும். அந்த மாதிரி சந்தர்ப்பத்தில் மாயவரம் பேரளம் அருகில் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை வழிபடவும். சூரியனுக்கு முக்கியமான இடம்.

திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு:

திருவோணம் சந்திரனின் நட்சத்திரம். சந்திரன் 7-க்குடையவர். திருமணத் தடை விலகும். கணவன்- மனைவி ஒற்றுமை உண்டாகும். சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகில் சசிவர்ணேஸ்வரர் கோவில் சென்று வழிபடவும். சந்திரன் சாபவிமோசனம் பெற்ற ஸ்தலம்.

அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு:

அவிட்டம் செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் 4, 11-க்குடையவர். வீடு, மனை லாபமும்  செய்தொழில் லாபமும் உண்டாகும். இது சம்பந்தமான சுபக்கடன்கள் வாங்கலாம். தாயின் ஆரோக்கியம் முன்னேற்றம் பெறும். தாய்வழிச் சொத்துகள் லாபகரமாக பலன் தரும். சில சொத்துகள் பரிவர்த்தனையாகும். மூத்த சகோதர வகையில் ஆதரவும் அனுகூலமும் உண்டாகும். சிவகங்கை அருகில் நாட்டரசன் கோட்டை சென்று கண்ணாத்தாளை வழிபடவும்.

No comments:

Post a Comment