Sunday 24 March 2013

பிரித்தானியாவில் மிக இளவயதில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 7வயது தமிழ்ப்பெண் எழுந்தார்


Britain’s youngest gun-crime victim (அதாவது பிரித்தானியாவில் மிக இளவயதில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்) என்று அழைக்கப்படுபவர் துஷா கமலேஸ்வரன் ஆவார். 2011ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் நெஞ்சில் காயமடைந்த துஷாவுக்கு அப்போது வயது 5 ஆகும். வர்த்தக ஸ்தாபனம் ஒன்றில் இரு இளைனர் குழுக்களுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கி மோதலில் அந்த வர்த்தக ஸ்தாபனத்தில் தனது தாயுடன் நின்று இருந்த துசா எனும் இச்சிறுமி மீதும் எதிர்பாராத விதமாக துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.

துப்பாக்கிக் குண்டு பின் முதுகுவழியாக ஊடறுத்துச் சென்றதால் அவர் முள்ளந்தண்டில் காயம் ஏற்பட்டது. பல மாதங்களாக கோமா நிலையில் இருந்த துஷா பின்னர் கண் விழித்தார். அவரால் இனி வாழ்க்கையில் நடக்கவே முடியாது என்று மருத்துவர்களும் நரம்பியல் நிபுணர்களும் கூறிவிட்டனர். சக்கர வாகனத்தில் தான் இவர் செல்ல வேண்டும் என்று இவரால் எழுந்து கூட நிற்க முடியாது என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

ஆனால் “யார் சொன்னது ஈழத் தமிழச்சியால் இனி எழுந்து நடக்க முடியாது” என்று? என்று கூறுவதைப் போல அவர் தன் முயற்சியை கைவிடவில்லை !
ஆம்! தற்போது துஷா எழுந்து நிற்க ஆரம்பித்துள்ளார். அதுவும் தன் சுய கால்களால். இது மருத்துவர்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இனி அவர் மெல்ல மெல்ல நடக்க ஆரம்பிக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் 2முறை இதயத் துடிப்பு நின்று, பரா மெடிக்ஸ் உதவியோடு அவர் இதயம் மீண்டும் இயங்க வைக்கப்பட்டு பின்னர் அவசரமாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.

பல சத்திர சிகிச்சை நடைபெற்று இறுதியில் உயிர்பிழைத்தார். உயிருடன் இருந்தாலே போதும் என்ற நிலை மாறி தற்போது அவரால் எழுந்து நிற்க்கக் கூடிய நிலை கூடத் தோன்றியுள்ளது. குறிப்பாக அவருக்கு நம்பிக்கை ஊட்டி அவரை மிகவும் ஆதரவுடன் கவனித்துக் கொள்வது, அவரது தாயார், தந்தை, சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோரே என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். பாரதி கூறிய நம்பிக்கை என்னும் ஒளிபடைத்த புதுமைப் பெண் இவள் தானோ ? 

 

No comments:

Post a Comment