Sunday, 24 March 2013

விருச்சிக ராசி குருப்பெயர்ச்சிப் பலன்கள் (2013-2014)

 விருச்சிகம்(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

இதுவரை 7-ல் இருந்த குரு இப்போது 8-ஆம் இடத்துக்கு மாறியிருக்கிறார்.

"இன்மை எட்டினில் வாலி பட்டமிழந்து போம்படியானதும்' என்பது ஜோதிடப் பாடல். இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு அனுகூலம் இல்லாத இடத்தில் வந்திருக்கிறது எனலாம். எல்லா ஜோதிடர்களும் பத்திரிகைகளும் உங்களை பயமுறுத்தி பலன் எழுதுவார்கள்.

விருச்சிக ராசிக்கு 2, 5-க்குடைய குரு 8-ல் மறைவது குற்றம்தான். குடும்பக் குழப்பம், பொருளாதாரச் சிக்கல், வரவுக்குமேல் செலவு, தேவையற்ற கடன் தொல்லை, அதனால் தொழிலைக் கவனிக்க முடியாதபடி பிரச்சினை, மக்கள் வகையிலும் பிரச்சினை, பிள்ளை களினால் தொல்லை, இருக்கும் தொழிலை சரிவர நடத்த முடியாமல் தடுமாற்றம், புதிய தொழில் சிந்தனை உருவெடுத்தும் அதை முறையாகச் செயல்படுத்த முடியாத சிக்கல் ஆகிய பலன்களைத் தரும்.

தசாபுக்தி மோசமாக இருப்பவர்களுக்கு அரசு தண்டனை, சிறைவாசம், மனசங்கடம், விபத்து, கௌரவப் பிரச்சினை, வைத்திய செலவு, துன்பம் போன்றவற்றைத் தரும்.

ஏற்கெனவே குரு விருச்சிக ராசிக்கு 7-ல் இருந்தபோது, எக்கச்சக்க மாக கடனை வாங்கி "தாட்டு பூட்டு தஞ்சாவூரு' என்று செலவு செய்த ஒருசிலர், இப்போது குரு 8-ல் வந்தபிறகு வட்டியும் கட்டாமல் அசலுக்கும் வழிவகை இல்லாமல் ஊரைவிட்டு ஓடுவதா அல்லது மஞ்சள் கடிதம் கொடுப்பதா என்று தடுமாற வைக்கும்.

விருச்சிக ராசிக்கு 2011 கடைசியில் ஏழரைச் சனி வந்தது. சனிக்கு 8-ல் குரு அமர்ந்து (ரிஷபத்தில் குரு) ஜென்ம ராசியைப் பார்த்தாலும் நல்லது நடக்கவில்லை. இப்போது குரு மிதுனத்தில் (விருச்சிக ராசிக்கு 8-ல்) இருந்தாலும், சனியையும் ராகுவையும் பார்ப்பதால் சோதனை களைச் சந்தித்து சாதனைகளைச் செய்யவேண்டும். குரு 6, 8, 12-ல் மறைவாக இருந்தால் குருவருள் மறைகிறது. குருவருள் கிடைக் காததால் திருவருளும் கிடைக்காமல் போகும். அதற்கு உதாரணம் கர்ணன்தான்.

பரசுராமரிடம் கர்ணன் மாறுவேடம்- பொய்வேடம் போட்டுக் கொண்டு சென்று வில் வித்தைகளைக் கற்றுக் கொள்கிறான். பரசுராமருக்கு உண்மை தெரிந்தவுடன் "சரியான சமயத்தில் நீ கற்ற வித்தைகள் எல்லாம் உனக்கு மறந்து போகும்' என்று சாபம் கொடுத்து விட்டார். அதேமாதிரி, அர்ஜுனனும் கர்ணனும் குருஷேத்திரப் போரில் நேருக்குநேர் மோதிக் கொள்ளும்போது கிருஷ்ணரின் திட்டத்தால் கர்ணன் ஒருமுறைக்குமேல் நாகாஸ்திரத்தைப் பயன்படுத்த முடியாமல் போகிறது. அர்ஜுனன் காப்பாற்றப்படுகிறான். அடுத்து பரசுராமரிடம் கற்ற வித்தையைப் பயன்படுத்தி அர்ஜுனனைப் பழிவாங்க கர்ணன் முயற்சிக்கிறான். ஆனால் குருவின் சாபத்தால் கர்ணனுக்கு மந்திரம் எல்லாம் மறந்துபோகிறது.

எனவே குரு 8-ல் மறையும் இக்காலம், உங்கள் மந்திர வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் பலமிழந்து பயனற்றுப் போகலாம். உங்கள் குலதெய்வம், இஷ்டதெய்வம் எல்லாம் பேசும் சக்தியற்று சிலையாகவே இருக்கலாம். இதற்கு பிராயச்சித்தமும் பரிகாரமும் தேடிக்கொள்வது அவசியம்!

இந்தக் காலத்தில் நிறைய பேருக்கு குலதெய்வத்தின் எல்லையும் இருப்பிடமும் தெரியாமலேயே இருக்கிறது. முன்னோர்களும் சொல்லாமலே போய்விடுகிறார்கள். தப்பித் தவறி குலதெய்வம் இருக்கும் இடம் தெரிந்தாலும், அதைப் பங்காளிகள்கூடி முறைப்படி வழிபாடு செய்யாமல் மூடிக்கிடக்கிறது.

குரு விருச்சிக ராசிக்கு 8-ல் நின்று 5-ஆம் பார்வையாக 12-ஆம் இடத்தையும்; 7-ஆம் பார்வையாக 2-ஆம் இடத்தையும்; 9-ஆம் பார்வையாக 4-ஆம் இடத்தையும் பார்க்கிறார்.

குருவுக்கு ஸ்தான பலனைவிட பார்வை பலனுக்கே பலம் அதிகம்! எனவே குரு 12-ஆம் இடத்தைப் பார்ப்பதால் செலவு செய்ய வைப்பார். 2-ஆம் இடத்தைப் பார்த்த பலன் அதற்குண்டான வரவுக்கு வழி செய்வார். குறிப்புப் பேரேடு- பற்று வரவு கணக்குப் புத்தகத்தில் வரவு காலத்தில் கணக்கு வரவு வைத்தால்தான், பற்று காலத்தில் செலவு எழுதமுடியும். இது அக்கவுண்டன்சி பாலிசி...

எனவே உங்களுக்கு செலவழிக்க யோகம் இருக்கிறது என்றால் வரவுக்கும் யோகம் இருக்கும். வரவு வந்தால்தானே செலவு செய்ய முடியும்! சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்! இதுதான் குரு 12-ஆம் இடத்தையும், 2-ஆம் இடத்தையும் பார்ப்பதன் பலன்!

அந்த வரவு கடன் வரவாகவும் இருக்கலாம். ஆதாய வரவாகவும் அமையலாம். தனக்கு வரவேண்டிய பாக்கிசாக்கி வரவாகவும் இருக்கலாம். எப்படியோ ஒரு வகையில் வரவும் உண்டு; செலவும் உண்டு; மிச்சமில்லை!

குரு 4-ஆம் இடத்தைப் பார்த்த பலன் பூமி, வீடு, வாகன வகையிலும் சுபமுதலீடு செலவு உண்டாகும். அதற்காக கடன் வரவும் கிடைக்கும். சிலருக்கு தாய்வழிச் சொத்துகள் கிடைக்கும். அதை அப்படியே அனுபவிக்கலாம் அல்லது அதை விற்று பரிவர்த்தனை செய்து வேறு சொத்து வாங்கலாம். சிலர் தனக்கு ஏற்கெனவே இருக்கும் பழைய சொத்து அல்லது வாகனத்தை விற்று புதிய சொத்து அல்லது புதிய வாகனம் வாங்கலாம்.

28-5-2013 முதல் 26-6-2013 வரை மிருகசீரிடத்தில் குரு சஞ்சாரம்.

மிருகசீரிடம் செவ்வாயின் நட்சத்திரம். ராசிநாதன் செவ்வாய் 1, 6-க்குடையவர். 1-ஆம் இடத்திற்கு 8-லும், 6-ஆம் இடத்திற்கு 3-லும் மறைகிறார். செவ்வாய் 1, 6-க்குடையவர் என்பதால் போட்டி, பொறாமை, எதிரி, கடன், வைத்தியச் செலவு ஆகிய பலன்களை எல்லாம் சந்திக்கும் காலம். அதனால் கவலையும் சஞ்சலமும் ஏற்படும். 6-ஆம் இடத்தை சனி, ராகு பார்ப்பதால், ஜாதகரீதியாக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் உங்களுக்கோ அல்லது குடும்பத்தில் மற்றவர் களுக்கோ அறுவை சிகிச்சை, வைத்தியச் செலவு வரலாம். அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் தன்வந்திரி ஸம்புடித ஆயுஷ் ஹோமம் செய்லாம். ஸ்ரீரங்கம், தாடிக்கொம்பு, கோவை தன்வந்திரி மருத்துவ நிலையம், வாலாஜாப்பேட்டை தன்வந்திரி ஆரோக்கியபீடம் ஆகிய இடங்களில் தன்வந்திரி சந்நிதி உள்ளது. அங்கு சென்று பூஜைகள் செய்யலாம். கடன் நிவர்த்திக்கு திருச்சேறை போகலாம். போட்டி, பொறாமை, எதிரிகளை ஜெயிப்பதற்கு சத்ரு சம்ஹார ஹோமம் செய்யலாம். பொன்னமராவதி அருகில் தேனிமலையிலும், செவலூர் பூமிநாத சுவாமி கோவிலிலும் ஷண்முகார்ச்சனை செய்யலாம். சத்ரு சம்ஹார வேல் பதிகம் பாராயணம் செய்யலாம்.

26-6-2013 முதல் 28-8-2013 வரை முதற்கட்டமாகவும்; 26-1-2014 முதல் 13-4-2014 வரை இரண்டாம் கட்டமாகவும் (வக்ரகதி) திருவாதிரையில் குரு சஞ்சாரம் செய்வார்.

இக்காலம் முதல்கட்டத்தில் வீண் விரயங்களும் வெட்டி அலைச்சல்களும் தவிர்க்க முடியாத பயணங்களும் உண்டாகலாம். சில பேருக்கு கொடுத்த பணம் வராமல் போகலாம். உதவி செய்தும் நன்றி விசுவாசத்தை எதிர்பார்க்க முடியாமல் எதிர்மறை விமர்சனங் களைச் சந்திக்கலாம். இரண்டாவது கட்டத்தில் குரு திருவாதிரையில் வக்ரமாக சஞ்சரிக்கும் காலம், அற்புதமான காலமாகவும் நன்மையான காலமாகவும் அமையும். ஒரு ரூபாய் செலவழித்து பத்து ரூபாய் லாபம்  சம்பாதிக்கும் முயற்சிகளில் ஈடுபடலாம். சிதம்பரம் தில்லைக்காளி அம்மனை வழிபட்டால் கெடுதல்கள் நன்மைகளாக மாறும்.

28-8-2013 முதல் 26-1-2014 வரை முதற்கட்டமாகவும்; 13-4-2014 முதல் 13-6-2014 வரை இரண்டாம் கட்டமாகவும் புனர்பூச நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் செய்வார்.

புனர்பூசம் குருவின் நட்சத்திரம். குரு விருச்சிக ராசிக்கு 2, 5-க்குடையவர். அவர் 8-ல் நின்று 2-ஆம் இடத்தையே பார்க்கிறார். எதிர்பாராத தனலாபம், அதிர்ஷ்டம், யோகம் எல்லாம் உண்டாகும். வாக்குப் பலிதம், சொல்வாக்கு, செல்வாக்கு எல்லாம் கூடும். குடும்பத்தில் அமைதி, ஆனந்தம் உண்டாகும்.

1-6-2013 முதல் 1-7-2013 வரை குரு அஸ்தமனம்

இக்காலம் எல்லாக் காரியங்களிலும் மந்த நிலையும் ஞாபகமறதியும் முயற்சிகளில் தோல்வியும் ஏமாற்றமும் காணப்படும். தவிர்க்க முடியாத விரயச் செலவுகளும் உண்டாகலாம். திருச்செந்தூர் குரு ஸ்தலமாகக் கருதப்படுவதால், அங்கு சென்று வழிபடவும்.

24-10-2013 முதல் 20-2-2014 வரை குரு வக்ரம்

அஸ்தமன காலத்தில் ஏற்பட்ட நஷ்டங்களையும் ஏமாற்றங் களையும் இக்காலம் ஈடுகட்டி விடும். வரவேண்டிய பணம் வசூலாகும். எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் வகையில் சுபச்செலவுகளும் நடக்கும்.

விசாக நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி செல்வாக்கையும் புகழையும் பெருமையையும் உண்டாக்கும். உங்கள் திறமை வெளிப்படும். அதற்குப் பாராட்டும் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி செலவுகளையும் விரயங்களையும் ஏற்படுத்தினாலும், அது சுபமங்களச் செலவுகளாகவும் சுபவிரயங் களாகவும் இருக்கும். தேக ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். தாயாதி- பங்காளி உதவிகள் கிடைக்கும்.

கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி எதிர்பாராத வெற்றிகளையும் லாபத்தையும் தரும். தனலாபம் உண்டாகும். ஆடம்பர அலங்காரப் பொருட்கள் சேர்க்கை ஏற்படும்.

No comments:

Post a Comment