Sunday, 24 March 2013

தனுசு ராசி குருப்பெயர்ச்சிப் பலன்கள் (2013-2014)

 (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)


இதுவரை 6-ஆம் இடத்திலிருந்த குரு இப்பொழுது 7-ஆமிடமான மிதுனத்திற்கு வந்து, உங்கள் ராசியை நேரடியாகப் பார்க்கிறார்.

குருவுக்கு யோகமான இடங்கள் 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள்தான். இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் ராஜயோகத்தையும் நன்மைகளையும் அடையப் போகும் ராசிகள் ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை. இந்த ஐந்து ராசிக்காரர்களில் நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலி.

கடந்த காலத்தில் 6-ல் இருந்த குரு உங்களில் பலரை கடன் காரராக்கி, "அவரா- வாங்கியதைத் திருப்பித் தரவே மாட்டாரே' என்று விமர்சனம் செய்ய வைத்து, "கொடாக்கண்டன்' என்ற முத்திரையைக் குத்திவிட்டது.

ஒருவரிடம் சரக்கு வாங்கி விற்று, அந்தப் பணத்தை வேறு ஒருவரின் கடனை அடைக்கச்செய்து, அவரிடம் வாங்கிய சரக்கை காசாக்கி முதல் நபருக்குக் கொடுத்துவிட்டு, மூன்றாவது புது நபரிடம் சரக் காகவோ ரொக்கமாகவோ வாங்கி இரண்டாவது நபருக்கு கொடுத்து, இப்படியே கடந்த பல வருடங்களாக கை முதலீடும் இல்லாமல் கணிசமான லாபமும் இல்லாமல் காலத்தை ஓட்டி வந்துவிட்டீர்கள். தனிமையில் இருந்து இதைச் சிந்திக்கும்போது உங்களுக்கே வெறுப் பாகவும் இருக்கிறது; வேதனையாகவும் இருக்கிறது. இது என்ன பிழைப்பு என்று சலிப்படைய வைக்கிறது.

இந்த குருப்பெயர்ச்சி இதற்கெல்லாம் மாற்று மருந்தாகி, உங்களுக்கு சத்து டானிக் கொடுத்து உற்சாகம் ஊட்டப்போகிறது.

7-ஆம் இடம் மனைவி, உபதொழில், திருமணம் போன்றவற்றைக் குறிக்கும் இடம். இதுவரை 35 வயதுக்குமேலாகி திருமணமாகாத ஆண்களுக்கும், 30 வயதுக்குமேலாகி திருமணமாகாத பெண்களுக்கும் இனி உடனடியாக கல்யாணம் கைகூடி வரும். நாற்பது நாற்பத்தைந்து வயதாகியும் நிலையான தொழிலோ நிரந்தர வருமானமோ இல்லாமல் அல்லல்பட்டவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நிலையான தொழிலுக்கும் நிரந்தரமான வருமானத்துக்கும் நிம்மதியான வாழ்க்கைக்கும் வழிவகுக்கும். திருமணமாகி பதினாறு ஆண்டுகளாக குழந்தையே இல்லாதவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி வம்சம் தழைக்க வாரிசைக் கொடுக்கும்.

மிதுன குரு 5-ஆம் பார்வையாக 11-ஆம் இடத்தையும்; 7-ஆம் பார்வையாக ஜென்ம ராசியையும்; 9-ஆம் பார்வையாக 3-ஆம் இடத்தையும் பார்க்கிறார்.

11-ஆம் இடம் என்பது லாப ஸ்தானம், வெற்றி- ஜெய ஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், உபய களஸ்திர ஸ்தானம். இதற்கு குருபார்வை அனுகூலப் பார்வையாக அமைவதால் தொழிலதிபர்களுக்கு எதிர் பாராத லாபம் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு பிரமோஷன், ஊதிய உயர்வு கிடைக்கும். யோகமான தசாபுக்தி நடந்தால் விசேஷ வெகுமதி, போனஸ் கிடைக்கும்.

சுக்கிர தசாபுக்தி நடந்து ஜாதகத்தில் களஸ்திர ஸ்தானம் பலக் குறைவாக இருந்தால், சிலருக்கு மறுமணம் நடக்கும் அல்லது சின்ன வீடு செட்டப்பில் சிலர் மாட்டிக் கொள்ளலாம். இதெல்லாம் விட்டகுறை தொட்டகுறை சமாச்சாரம். ஆசையும் நினைப்பும் சபலமும் இருப்பவர்களுக் கெல்லாம் அது நிறைவேறாது; அதற் கெல்லாம் ஒரு மச்சம் வேண்டும்.

செவ்வாய் தசாபுக்தி அல்லது ராகு தசாபுக்தி நடந்தால் மூத்த சகோதர- சகோதரி வகையில் பிரச்சினைகளையும் பகை, வருத்தங் களையும் சந்திக்கக் கூடும்.

குரு, சந்திர தசாபுக்தி நடந்தால் சகோதர வழி சகாயம், உதவி, அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுக்குப் பிரச்சினை இல்லை. பிரச்சினை உடையவர்கள் குலசாமி கோவிலுக்கும், பழனி அல்லது குருவாயூருக்கும் சென்று பிரார்த்தனை செய்துகொள்ளலாம். குரு ஜென்ம ராசியைப் பார்ப்பதால் செல்வாக்கு, அந்தஸ்து உயரும். கௌரவம், மதிப்பு, மரியாதை உயரும். பொதுநலம், அரசியல், கட்சி ஈடுபாடு உடையவர்களுக்கு பட்டம் பதவிகள் தேடிவரும். சிலர் அரசியலில் கட்சிவிட்டு கட்சி மாறுவதன் மூலம் தன் எதிர்காலத்தை அதிர்ஷ்ட மாக்கிக் கொள்ளலாம்.

இராவணன் சீதையை சிறையெடுத்தது அதர்மம் என்று, விபீஷணன் அண்ணனை விட்டு விலகி பகைவனாகிய ராமனோடு போய் சேர்ந்தான். இராவணனும் அவனுடைய ஆட்களும் விபீஷணனை பங்காளி துரோகி என்று ஏசினார்கள். ஆனால் ராமனோ அவனுக்கு மகுடம் சூட்டி விபீஷண ஆழ்வார் பட்டத்துக்கு தகுதியுடையவனாக பெருமை சேர்த்துவிட்டார். ஆக, கட்சி மாறுவது என்பது ராமாயண காலத்திலேயே இருக்கிறது. ஒரு கட்சியில் உள்ளவர்களை தவறாக விமர்சித்துப் பேசியவர்களே, கட்சி மாறி  அவர்களிடமே சேர்ந்து பொன்னாடை போர்த்தி பாராட்டுவதுதானே இன்றைய அரசியல்.

3-ஆம் இடம் குடும்பம், சகோதர, சகாய, தைர்ய, வீர்ய, போக ஸ்தானம். அதை குரு பார்க்கிறார். அந்த வீட்டுக்குடையவர் சனி. அவர் ராகுவோடு சம்பந்தம். அவரை குரு பார்க்கிறார். "குரு பார்க்கக் கோடி குற்றம் நீங்கும்' என்பதால், சனி, ராகுவின் தோஷம் குறையும். சகோதர வகையிலும் நண்பர்கள் வகையிலும் இருந்த சச்சரவுகளும் பிரச்சினை களும் விலகும். பங்காளிப் பகை விவகாரம் தீரும். அந்நியர்களின் விரோதமும் மாறும்.  3-க்குடையவர் 3-ஆம் இடத்திற்கு திரி கோணத்தில் நிற்பதாலும், 3-ஆம் இடத்திற்கு 2, 11-க்குடைய குரு பார்வையைப் பெறுவதாலும் எதிர்காலத்தின்மேல் பிடிப்பும் நம்பிக்கையும் ஆர்வமும் ஏற்பட்டு உற்சாகமாகச் செயல்படுவீர்கள். உங்கள் மனதிலும் வைராக்கியமும் தைரியமும் உருவாகும். நீங்கள் ஒரு செல்வாக்கான ஸ்தானத்துக்கு வந்தால் தங்களுக்கு நல்லது என்ற சுயநலத்தோடு, உங்களைச் சார்ந்தவர்களும் வேண்டியவர்களும் உங்களுக்கு சரீர உதவியும் பண உதவியும் செய்யலாம். ஒருவரைச் சார்ந்து இன்னொருவருக்கு ஆதாயம். நெய்க்கு தொன்னை ஆதாரம்- தொன்னைக்கு நெய் ஆதாரம் என்பது போல! "எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன்' என்பது ஒரு பாலிசி. நல்ல நேரம் இருந்தால் அப்படிப்பட்ட புது நட்பும் புது உறவும் தேடிவரும். இல்லாவிட்டால் ஏறியதும் ஏணியை எட்டி உதைத்துத் தள்ளுபவர்களும் உண்டு.

11-ஆம் இடத்தில் சனி, ராகு நிற்பது சிலருக்கு உபய களஸ்திர பாக்கியத்தை உண்டாக்கும். (மறுமணம்).  விதவைத் திருமணம் அல்லது அவர்களால் லாபம் உண்டாகும். அவர்கள் பெயரில் தொழில் முதலீடும் உதவியும் கிடைக்கும்.

தனுசு ராசிக்கு 5-ஆம் இடத்திற்கு சனி, ராகு- கேது சம்பந்தம் ஏற்படுவதால், ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் உங்கள் பிள்ளைகளில் (ஆணோ- பெண்ணோ) யாராவது ஒருவர் காதல் வயப்படலாம். கலப்புத் திருமணம் செய்துகொள்ளலாம். அதுபோல இருந்தால் காமோகர்ஷண ஹோமம் செய்து அவர்கள் மனதை மாற்றலாம்.

28-5-2013 முதல் 26-6-2013 வரை மிருகசீரிடத்தில் குரு சஞ்சாரம். அது செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் உங்கள் ராசிக்கு 5, 12-க்குடையவர். மக்கள் வகையில் சுப சோபன செலவுகள் ஏற்படும். சுபமுதலீடு செய்யலாம். உடன்பிறந்தவர்களுக்கும் உங்கள் தலைமையில் நல்ல காரியங்கள் நடக்கும். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் அவர்கள் வகையில் தேவையற்ற விரயங்களும் மன சஞ்சலங்களும் கௌரவப் பிரச்சினைகளும் உண்டாகும். அதன் பாதிப்பு விலக புதுக்கோட்டை அருகில் குமரமலை சென்று பால தண்டாயுத பாணியை வழிபடவும். அர்ச்சகர் ராமுகுருக்கள்; செல்: 98424 83217-ல் தொடர்பு கொள்ளலாம்.

திருவாதிரை ராகு நட்சத்திரம். இதில் இரண்டு கட்டமாக குரு சஞ்சரிப்பார். 26-6-2013 முதல் 28-8-2013 வரை முதல் கட்டமாக சஞ்சரிப்பார். இக்காலம் அனுகூலமாகவும் லாபகரமாகவும் எந்த முயற்சியிலும் வெற்றியாகவும் அமையும். 26-1-2014 முதல் 13-4-2014 வரை திருவாதிரையில் வக்ரகதியாக இரண்டாவது கட்டமாகச் செயல் படுவார். இக்காலம் முதல்கட்டத்தில் நடந்த நற்பலனுக்கு எதிர்மறைப் பலனாக செயல்படும். தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரும். டென்ஷன், கவலை, செலவுகள் ஏற்படும்.

கோவை- கோவில் பாளையம் காலகாளேஸ்வரர் கோவில் சென்று வழிபடவும். ஆதிசேஷன் வழிபட்ட ஸ்தலம்.

28-8-2013 முதல் 26-1-2014 வரை முதல் கட்டமாகவும், 13-4-2014 முதல் 13-6-2014 வரை இரண்டாவது கட்டமாகவும் புனர்பூச நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் செய்கிறார். புனர்பூசம் குருவின் சொந்த நட்சத்திரம். எனவே இரண்டு கட்டத்திலும் குரு ராசிநாதன் என்பதால், உங்களுக்கு நன்மைகளே உண்டாகும். முதல் கட்டத்தில் ஆப்பிளை கடித்துச் சாப்பிடுவதுபோல, இரண்டாவது கட்டத்தில் ஆப்பிளை ஜுஸாக்கிக் குடிப்பதுபோல! மொத்தத்தில் குருப்பெயர்ச்சி நன்மை தான். திருவள்ளூரிலிருந்து திருத்தணி போகும் பாதையில் ஆற்காடு குப்பம் என்ற பகுதியில் சித்தர் அனுமந்தசாமி ஜீவசமாதியும், அருகில் அவருடைய சீடர் ஜெயராம் சுவாமிகள் ஜீவசமாதியும் இருக்கிறது. சென்று வழிபட்டால் குருவருள் பரிபூரணமாகி மனநிறைவைத் தரும்.

1-6-2013 முதல் 1-7-2013 வரை குரு அஸ்தமனம்

தனுசு ராசி அதிபதி குரு. ராசிநாதன் குரு அஸ்தமனமடைவது ஆகாது. அஸ்தமனமென்றால் இருட்டு. ஆகவே உங்கள் காரியங்கள், முயற்சிகள் அனைத்திலும் தடை, தாமதம், குறுக்கீடு உண்டாகும். பூமி, வீடு, வாகனத்துக்கும் குரு அதிபதியாவார். எனவே சிலருக்கு இடப் பிரச்சினை, வாகன வகையில் செலவு, ஆரோக்கியக் குறைவு ஆகிய பலன்களை சந்திக்க நேரும். சிலர் வீடு மாறலாம் அல்லது இடப்பெயர்ச்சி வரலாம். இக்காலம் திருக்கண்டியூர் சென்று வழிபட்டால் சிக்கல்கள் விலகும். மலைபோல வந்த துயரங்கள் பனிபோல மறையும்.

24-10-2013 முதல் 20-2-2014 வரை குரு வக்ரம்

குரு வக்ரமாக இருக்கும் இக்காலகட்டத்தில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். சொந்தவீடு இல்லாதவர்களுக்கு சொந்தவீடு அமையும். இருசக்கர வாகனங்கள் வைத்திருப்போருக்கு நான்கு சக்கர வாகனம் வாங்கும் யோகம் அமையும். ரியல் எஸ்டேட், பைனான்ஸ் தொழில், கொடுக்கல்- வாங்கல், சீட்டு கம்பெனி  நடத்துகிறவர்களுக்கு இக்காலம் அற்புதகாலம். லாபமும் யோகமும் உண்டாகும் காலம். சிலருக்கு கௌரவப் பதவி; லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப், சமூக நற்பணி மன்றம் போன்றவற்றில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். பாராட்டும் புகழும் வந்துசேரும்.

மூல நட்சத்திரக்காரர்களுக்கு:

குருப்பெயர்ச்சிப் பலன்- முற்பகுதியில் வரவுகள் மிகுந்தும் பிற்பகுதியில் செலவுகள் மிகுந்தும் காணப்படும். இது கரும்பின் அடிப்பாகத்தில் இருந்து நுனி பாகத்தை நோக்கி சாப்பிடுவதைப் போல!

பூராட நட்சத்திரக்காரர்களுக்கு:

குருப்பெயர்ச்சிப் பலன்- ஆரம்பத்தில் சிரமமும் சிக்கலும் இருந்தாலும், போகப் போக அனுகூலமும் நன்மைகளுமாக அமையும். இது கரும்பை நுனி பாகத்திலிருந்து அடிபாகம் நோக்கி சாப்பிடுவதுபோல!

உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு:

குருப்பெயர்ச்சி முழுவதும் நன்மையும் யோகமும் உடையதாக அமையும். எல்லா முயற்சிகளிலும் எளிதாக வெற்றியும் சிறப்பும் உண்டாகும். இது கரும்பை சாறு பிழிந்து குடிப்பதுபோல!

No comments:

Post a Comment